Tuesday, February 15, 2022

ஒரு ஊரில் ஒரு இராஜகுமாரன்..

நண்பன் ராஜ்குமார் மறைந்து அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது. இந்த வாரம் (பிப்ரவரி 20) ராஜ்குமாரின் முதலாண்டு நினைவு நாள்.


1972-ஆம் வருடம் ஆறாம் வகுப்பில் ஆரணி அரசினர் ஆண்கள் உயர் நிலைப் பள்ளியில் (அப்போது அப்படித்தான் எங்கள் பள்ளியின் பெயர் இருந்தது) சேர்ந்த சில வாரங்களில் முதன் முதலாக ராஜ்குமாரைப் பார்த்தேன். (நட்பு வட்டாரத்தில் ராஜகுமாரை நாங்கள் ராஜ்குமார்" என்றே அழைத்துப் பழக்கம்). தோற்றத்தில் (அந்த பள்ளிக்குப் பொருந்தாத) மேல்தட்டு வசீகரத்துடன்  நல்ல சிகப்பு நிறத்தில் சற்றே மொழு மொழுவென்றும் இருப்பான். செல்வந்தர் வீட்டுப்பிள்ளை என கண்டதும் சொல்லிவிடலாம். கையில் பளபளவென (புத்தகங்கள் எடுத்து வர) ஒரு அலுமினியப் பெட்டி சகிதமாக வீட்டிலிருந்து  சைக்கிளில் பள்ளி வருவான். அது மட்டுமின்றி அவன் பள்ளிக்கு வரும்போது அனேகமாக ஒரு நாலைந்து (சைதாப்பேட்டை) நண்பர்களுடன் "புடை சூழ"வருவதும் போவதுமாக இருந்தான். ஏறத்தாழ "பாஷா" படத்தில் ரஜினி வருவது போல, இந்தக் கட்டுரையின் தலைப்புக்கு மிகப் பொருத்தமாக இருப்பான். 

நண்பன் வெங்கி,  ஆனந்தன், நாங்கள் "டிங்கி" என்றழைத்த சௌந்தர் ராஜன், இன்னொரு வெங்கடேசன் ("போஸ்ட் ஆஃபீஸ்") மற்றும்  ராமசாமி (எங்களுக்கு ஒரு வருடம் ஜீனியர்) ஆகியோர்கள் ராஜ்குமாரோடு பெரும்பாலான நேரங்களில் உடனிருப்பவர்கள்.  (அந்த பட்டியலில் சேகரும் பார்த்தியும் வேறு சில  சைதை நண்பர்களும் பின்னாளில் சேர்ந்தது தனிக்கதை)

இவ்வளவு கவனித்திருந்தும் ராஜ்குமாரோடு எனக்கு ஏழாவது வகுப்பிலோ எட்டாவது வகுப்பிலோத்தான் அறிமுகம் ஏற்பட்டது.. யாரோ ஒரு வாத்தியார் வராத சூழலில் இரு வகுப்புகளை இணைத்து Combined Session வைத்தபோது அருகருகே அமர்ந்திருந்தோம்.. அதன் பின் தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பழகுவதற்கு எளிமையானவன் இனிமையானவன். நட்பை மதிக்கத்தெரிந்த நல்ல நண்பன். (இதை எழுதும் போது இறந்த காலச் சொற்களைக் கொண்டு எழுதுகிறோமே என்ற வலி இருக்கத்தான் செய்கிறது. இருந்தும் ராஜ்குமாரின்  வாழ்க்கையை நினைவலைகளால் ஆராதித்துக் கொண்டாடுவதே நினைவு நாளுக்கு மிகப் பொருந்தும் என்பதென் எண்ணம்). வெவ்வேறு வகுப்புகளில் நாங்கள் படித்துக் கொண்டிருந்தாலும் (நான், தயாளன் ஆகியோர்  "A" கிளாஸிலும் அவனும் வெங்கியும் "B"கிளாஸிலும்) ஒன்பதாவது வகுப்பிலிருந்து இருவரும் சேர்ந்து  வெங்கி, தயாளன், வசந்தகுமார் மற்றும் சில நண்பர்களுடன் சுற்றுவது வழக்கமாகி விட்டது.

ஒன்பதாவது வகுப்புத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையில் ராஜ்குமார் ஒரு நாள் எங்களை அழைத்து எங்களுக்குப் போட்டியாய் இருந்த ஒரு தனியார் பள்ளி (Town High School) மாணவர்களோடு ஒரு கிரிக்கெட் மாட்ச் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான், வெங்கி, தயாளன், வசந்த குமார் ஆகியோர்கள் ஆட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டான். அதைவிட பெரிய கேளிக்கை அக்காலத்தில் எமக்கில்லை என்பதால் நாங்களும் ஆடினோம். ராஜ்குமார் அவனுக்காக பிரத்தியேகமாகச் செய்யப்பட்ட கிரிக்கெட் மட்டையைக் கொண்டு ஆடினோம். அந்த மட்டை
ரோஜாப்பூ வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு அதன் மேல் பூச்சித்திரங்கள் வரையப்பட்டு கவர்ச்சியாக இருக்கும். ராஜ்குமார், தயாளன் மற்றும் வசந்த குமார் மூவரும் நன்கு விளையாடினார்கள். விளையாட்டுக்கும் எனக்கும் ஒரு துளி சம்பந்தமும் இல்லை என்பதால் நான் ஏதோ "ஒப்புக்கு" அங்கு நின்றேன் என்று தான் சொல்லவேண்டும். மாட்ச் டிராவானதா அல்லது இரு அணிகளுக்கும் சண்டையானதா என நினைவில்லை. ராஜ்குமாருக்கு இருந்த ஆளுமை மற்றும் ஒருங்கிணைத்தல் திறன் அந்த விளையாட்டில் நன்கு வெளிப்பட்டது. நண்பர்களை அரவணைத்துச்
செல்வதில் அவனுக்கு நிகர் அவனே.

1978-ல் பச்சையப்பன் கல்லூரியில் நான் புதுமுக வகுப்பில் சேர்ந்த புதிதில் எனக்கு ராஜ்குமாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவனுடன் பேசும்போதுதான் தெரிந்தது, அவன் சென்னையில் ஏ.எம் ஜெயின் கல்லூரியில் சேர்ந்திருப்பதாக. அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. (பின்னர் ஒரு நாள் தயாளனையும் பச்சையப்பன் கல்லூரியில் கண்டதும் என் மகிழ்ச்சி இரட்டினப்பானது.!) அதுமுதல் நேரம் கிடைக்கும் போது நான் மீனம்பாக்கம் சென்று 
ராஜ்குமாரோடு தொடர்பில் இருந்து வந்தேன். புதுமுக வகுப்பு முடிந்ததும் ராஜ்குமார் அதே கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கத் தொடங்க, நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். ராஜ்குமாரும் நானும் அவன் விடுதியிலோ அல்லது எங்கள் விடுதியிலோ தொடர்ந்து சந்தித்து வந்தோம். 

ஒரு முறை ராஜ்குமார்  தங்கள் விடுதிக்கான தேர்தலில் மெஸ் செக்ரட்டரி பதவிக்குப் போட்டியிட்ட போது நான் அவனுக்காக சுவரொட்டிகள், பானர்கள் எழுதி பங்கேற்றேன். அங்குதான் ராஜ்குமாரின் நண்பர்கள் திருவண்ணாமலை ரவி மற்றும் சிலர் பரிச்சயமானார்கள். ராஜ்குமார் புதுமுக வகுப்பு பயின்ற காலங்களில் உடற்பயிற்சி முறையாக செய்ய ஆரம்பித்து அதற்கேற்றார்போல் உடல் வாகுவும் அமைத்துக் கொண்டான். திடீரென ஒரு நாள் Mr. Madras ஆக அசைப்படுவதாக சொன்னபோது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. பின்னர் விடுதி நாள் போட்டிகளில் ராஜ்குமார் சாப்பிடும் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் வாங்கிக் கொண்டிருந்தான். ஒரு போட்டியில் 45 இட்லிக்கள் சாப்பிட்டு வென்றிருக்கிறான்.!

1984-ல் நான் பெங்களூரில் எனது முதல் பணியில் சேர ஆயத்தமான போது, எங்கு தங்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ராஜ்குமார் தானும் பெங்களூரில் சட்டப்படிப்பில் சேர இருப்பதாகவும் அதற்காக வேறு சில நண்பர்களோடு ஒரு தனி வீடு பார்த்திருப்பதாகவும் அங்கேயே நானும் இடைக்கால ஏற்பாடாய் தங்கிக் கொள்ளலாம் என்றும் சொன்னான். இல்லாவிட்டால் மொழி தெரியாத இடத்தில் நான் எப்படி வீடுபார்த்து தங்கியிருந்திருப்பேன் என எனக்குத் தெரியாது.. அப்படி "இடுக்கண் களைந்த" நண்பனின் வீட்டில் நான் இரு வாரங்கள் தங்கியிருந்தேன். பின்னர் என் பணியிடத்துக்கு அருகில் அல்சூரில் தனியே வீடெடுத்து நான் குடிபுகுந்தேன். சட்டக்கல்லூரிக் காலங்களில் மாலை வேளைகளில் நேரமிருந்தால் ராஜ்குமார் என்னை சந்திக்க அல்சூர் அல்லது MG ரோடில் எனது அலுவலகத்துக்கு வருவான். வார இறுதியானால் ஏதாவது படம் ஒன்றாகப் போய் பார்ப்பதும் வழக்கமாயிருந்தது, அவன் சட்டக்கல்லூரி  முடிந்து ஆரணி திரும்பிய வரை. எனது அறை நண்பர்களுக்கும் ராஜ்குமார் நல்ல பரிச்சயம். எல்லோரிடமும் இனிமையாகவும் போலித்தனமில்லாமல்  நட்போடும் பழகும் ராஜ்குமாரை யாருக்குத்தான் பிடிக்காது?

1985-ல் ஒரு வார இறுதியில் நான் பெங்களூரிலிருந்து ஆரணி வந்திருந்தேன். அப்போது ராஜ்குமார் மறு நாள் அவர்கள் வீட்டில் அனைவரும் குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதாகவும் நானும் உடன் வரவேண்டும் என்றும் ஆசைப்பட்டான். குலதெய்வ வழிபாடுகளை அதுவரை அறிந்திராத நான், நண்பன் ராஜ்குமார் அழைத்ததால் சம்மதித்தேன். அடுத்த நாள் ராஜ்குமார் வீட்டிலிருந்து ஒரு தனிப் பேருந்து கிளம்ப, ஏறத்தாழ எனக்குத் தெரிந்த சைதாப்பேட்டை நண்பர்கள் அனைவரும் அதில் இருந்தோம். ராஜ்குமாரின் அண்ணன் குடும்பம், சகோதரிகள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமின்றி, பிற உறவினர்களும் எனக்கு ஏற்கனவே (ராஜ்குமார் வீட்டுக்கு சென்று வரும்போது) பரிச்சயம் என்பதால் அந்த பயணம் இனிமையாக அமைந்தது. ஆரணியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள "ஆகாரம் திருமணி" என்ற கிராமத்தில் இருக்கும் "ஆகாசகன்னி" தான் அவர்களின் குலதெய்வம். 

வழிபாடுகள் ஒரு புறம் களேபரமாக நடந்துகொண்டிருக்க, ராஜ்குமார், வெங்கி, சேகர், பார்த்தி, டிங்கி, ஆனந்தன் ஆகியோரோடு நாங்கள் அரட்டைக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தோம். அந்த வழிபாட்டுக்கு, ராஜ்குமாரின் தூரத்து உறவினர் ஒருவர் மும்பையிலிருந்து (செந்திலோ அல்லது பாலாஜியோ அவர் பெயர், CA-வாகப் பணிபுரிந்ததாக நினைவு) வந்திருந்தார். நல்ல புத்திசாலி. அவரும் எங்களுடன் சேர்ந்துகொள்ள அரட்டைக் கச்சேரி அறிவுத்தேடல் உரையாடலானது. உரையாடலின் போக்கில் மற்ற சைதை நண்பர்கள் ஒவ்வொருவராகக் கழன்று கொள்ள நான், ராஜ்குமார் மட்டுமே அவருடன் பயணம் முடிந்து திரும்பும் வரை உரையாடலில் இருந்தோம்.


1988-ல் எனக்கு உடல் நிலை காரணமாய் நான் மூன்று மாதம் மருத்துவ விடுப்பில் ஆரணியில் இருந்தேன். அப்போது ராஜ்குமார், வசந்தகுமார், மாலிக்பாக்ஷா ஆகியோர்கள் என்னைப் பார்க்க வந்துபோவார்கள். ராஜ்குமார் அப்போது வீட்டிலிருந்தே எம்.ஏவுக்குத் தயார் செய்து கொண்டிருந்தான். எனக்கு அடிக்கடி மருத்துவ செக்கப் செய்யவேண்டி இருந்தது. என் மருத்துவரோ சத்யமூர்த்தி ரோடில் மாலிக் வீட்டருகே இருந்த மருத்துவமனையில்தான் செக்கப் செய்வார். எனவே சைக்கிளில் செல்வது சிரமம் என்பதால் நண்பன் ராஜ்குமார் தன் வீட்டிலிருந்து ஒரு பழைய மாடல் பிரிமியர்  பத்மினி காரை எடுத்து வந்து என்னை ஒவ்வொரு முறையும் அழைத்துச் சென்று வருவான். அது நீல நிறத்தில் வித்தியாசமாக இருந்தது. அதன் கதவுகள் நாம் பழக்கப்பட்ட கார்களைப் போல் திறக்காது. கதவின் hinge வழக்கத்திற்கு மாறாய் எதிர்ப்பக்கம் இருக்கும். 
யாரோ தனது அப்பாவுக்குத் தரவேண்டிய மூவாயிரம் ரூபாய்க்கு பதிலாக இந்தக் காரைக் கொடுத்துவிட்டதாக ராஜ்குமார் சொன்னான். சில வருடங்கள் உபயோகித்தபின் அதை விற்றுவிட்டதாய்ச் சொன்னான். எங்கள் வீட்டில் அனைவரோடும் ராஜ்குமார் சகஜமாய்ப் பழகக் கூடியவன். என்னைப் பார்க்க வரும்போது நாங்கள் ஒன்றாக அமர்ந்து கேரம் போர்டு விளையாடுவோம். என் அப்பாவும் ராஜ்குமாரும் கேரம் விளையாட்டில் ஒருவருக்கொருவர் இணையானவர்கள்  என்பதால் ஒரே சிரிப்பும் அரட்டையுமாக கலகலப்பாக போட்டி நடக்கும். ஓரளவு எனக்கு உடல் தேறியதும் ராஜ்குமார் சாந்தியில் ரஜினி நடித்த மனிதன் திரைப்படத்துக்கு
கூட்டிச்சென்றான். ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குப் பின் நான் பார்த்த படம் அதுவும் ராஜ்குமாரோடு என்பதால்  பசுமையாக நினைவில் உள்ளது.

நண்பன் ராஜகுமாருக்கு எஸ்.பி.பி பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக, "இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு" என்ற ("ராஜா" படத்தில் எஸ்.பி.பியும் ஜெயலலலிதாவும் பாடிய டூயட்) அவனுக்கு எப்படி உதவியது என்பதை மிக நெருக்கமான நண்பர்களுக்கு தெரியும். அதேபோல் "இளைமையெனும் பூங்காற்று" பாடலும் ராஜ்குமார் அடிக்கடி ரசிக்கும் பாடல். நடிகைகளில்  ராதாவின் தீவிர ரசிகன். மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் (12-ஓ அல்லது 13னோ) ராஜ்குமாருக்கு எதாவது ஒரு படம் பார்த்துவிட வேண்டும் என்ற விசித்திரப் பழக்கம் இருந்தது. எனக்குத் தெரிந்து பல வருடங்கள் அதைக் கடைபிடித்து வந்தான். ஏன் என்ற காரணம் எனக்கு சரியாய் நினைவில் இல்லை, வெங்கி அறிந்திருக்கக் கூடும்.

2019 டிசம்பரில் நான், தயாளன் மற்றும் வெங்கி மூவரும் ஒரே நேரத்தில் இந்தியா வருகை தந்தபோது, முன்னேற்பாடாய் நாங்கள் ராஜ்குமாரிடம் நம் பள்ளி நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். "அதனை அவன்கண் விடல்" என்பதுபோல் ராஜ்குமார் 12 நண்பர்களை தனிப் பேருந்தில் ஒருங்கிணைத்து அழைத்து வந்தான். சென்னை கிரீன்பார்க்  ஹோட்டலில் சந்திப்பு மிகவும் கலகலப்பாக நடந்தது. வந்தவர்களில் பலரை நான் பள்ளிப்பருவத்துக்குப் பின் அன்றுதான்
பார்த்தேன். பின்பு அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். ராஜ்குமாரோடு நாங்கள் இணைந்து எடுத்துக் கொண்டதில் இதுதான் கடைசி புகைப்படம். அந்த சந்திப்பும் சரி அதன் கலகலப்பும் சரி ராஜ்குமார் உதவியில்லாமல் நடந்திருக்காது. He was a great leader..!!



ரா
ஜ்குமாரை நான் "நட்பின் நுழைவாயில்" (Gateway of Friendship) என்று உறுதியாகச் சொல்வேன். ராஜ்குமாருடன் ஏற்படும் நட்பு அவனோடு மட்டும் நின்று போவதில்லை. இன்னும் நிறைய நண்பர்களை அறிமுகப் படுத்தும்.  ஒரு நல்ல புத்தகத்தை வாசித்தால் அது மேலும் பல புத்தகங்களை நமக்கு அறிமுகப்படுத்தும்  என்பது போல. திருவண்ணாமலை செந்தில், களம்பூர் ரவி, பெங்களூரில் ஶ்ரீகாந் மற்றும் பல நண்பர்கள் எனக்கு ராஜ்குமாரால் தான் தெரியும்.


ராஜ்குமார் அமைதியாய் பேசுபவன், ஆர்ப்பாட்டமில்லாதவன். வழக்கறிஞராய் ராஜ்குமாரை வழக்காடும்போது பார்க்க வேண்டுமென்று ஒரு முறை (2011-இல்) ஆரணியில் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தேன். மன்ற அறையிலிருந்து வெளிவந்தவன், "பகல்.. இன்னைக்கி கேஸ் இல்ல.. வெறும் வாய்தாதான்" என்று சிரித்தபடியே சொன்னான். நாங்கள் ஒருவரை ஒருவர் பெயரிட்டு அழைத்தோ "நீ..போ..வா" என்றோ பேசிதான் பழக்கம். "வாடா போடா" என்றெல்லாம் பேசிக்கொண்டதே  இல்லை. எல்லா நண்பர்களிடமும் அப்படித்தான். எப்போதாவது சில நேரங்களில் வாப்பா.. போப்பா என்று மெதுவாய் கனிவாய்ப் பேசும் ஒரு சிறந்த நண்பன்.


இயற்கை விசித்திரமானது.. இயற்கை குரூரமானது.. இயற்கை முரணானது என்றெல்லாம் "பேரன்பு" படத்தில் caption-கள் வரும்.  அவையெல்லாம் உண்மைதானோ என நினைக்க வைத்தது ராஜ்குமாரின் மறைவு. அவனில்லாத சென்ற வருடத்தில் நாங்கள் யாரும் அவனுடன் நேரில் பேசிக்கொள்ளவில்லையே தவிர, ராஜ்குமாரைப் பற்றி அடிக்கடி நண்பர்களிடையே  பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்..அவன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். 

ஒரு ஓரில் ஒரு ராஜகுமாரன் - அல்ல அல்ல, ஒரே ராஜகுமாரன் தான்; அது என்றென்றும் எங்கள் நண்பன் ராஜ்குமார் தான்..!! நண்பனின்  நினைவுகளைப் போற்றுவோம்..!!



 

Thursday, September 3, 2020

வசந்த(ன்) நினைவுகள்..

இரு தினங்களுக்கு முன் (செப்டம்பர் 1), எங்களது ஆரணி பள்ளி நண்பர்கள் கொண்ட WhatsApp குழுமத்தில், நண்பன் வசந்தன் பெயரில் ஒரு பதிவு வந்தது. குளிர்ப்பெட்டியில் வைக்கப்பட்ட ஓர் உடலின் மங்கலான படமும் அதன் கீழே "Appa Death" என்ற அரைகுறை குறிப்போடும்.  நானும் மற்ற நண்பர்களும், தந்தையை இழந்த வசந்தனுக்கு இரங்கல் செய்தி பதிவிட்டிருந்தோம்... 

நேற்று ஆரணியிலேயே வசிக்கும் எங்கள் குழுமத்து நண்பர்கள் கிருஷ்ணலிங்கம் மற்றும் ராஜாமணி இருவரும் ஒரு அதிர்ச்சிகரமான பதிவிட்டிருந்தார்கள் : இறந்தது வசந்தனின் தந்தையல்ல, வசந்தன் தானென்று.. வசந்தனின் மகனோ மகளோ வசந்தனின் கைப்பேசியிலிருந்து வசந்தன் பெயரில் முதல் பதிவையிட்டிருக்கக் கூடும்... இறந்தது வசந்தன் தான் எனத் தெரிந்தவுடன் எனக்குப்  பேரதிர்ச்சி.. நேற்றிலிருந்து வசந்தனின் நினைவலைகள் வந்து வந்து போக,  அவற்றை  முடிந்தவரை இங்கே பதிவிடுகின்றேன்..

வசந்தன் எங்களோடு ஆறாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி வரை படித்த வகுப்புத் தோழன்.  பழகுவதற்கு மிகவும் இனிமையானவன்.. ஆரணிக்கு அருகேயுள்ள இராட்டினமங்கலம் கிராமத்திலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு வருவான்.  

குடும்ப வேண்டுதலோ வேறு காரணமோ தெரியவில்லை, பள்ளிக்கு வந்தது முதல் நீண்ட தலைமுடியோடு எண்ணெய் தடவி சீராக வாரி இரு புறமும் ரிப்பன் வைத்துப் பின்னிய இரட்டை சடையோடு காட்சியளிப்பான். அதனால் வசந்தனுக்கு "குடுமி நாதன்" என்றும் கிராமத்துப் பெயரை வைத்து "இராட்டின மங்கலத்தான்" என்றும்  காரணப் பெயர்கள்  உண்டு.  

எனக்குத் தெரிந்து எங்கள் வகுப்பிலிருந்த மற்ற நண்பர்கள் (குறிப்பாக வசந்தகுமார்,  மகாதேவன், சேகர், ஷண்முகம்) வசந்தனை  இந்த இரண்டு பேர்களில் ஒன்றை வைத்துத்தான்   அழைப்பார்கள்..   வசந்தன் ஆரம்பத்தில் சிறிது கோபம்  கொண்டாலும் பின்பு நட்பைப் புரிந்துகொண்டு அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.. மிகவும் தோழமையோடு பழகுபவனாகவே இருந்தான்.   

ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது அதுவரை எனக்கு நெருக்கமாயிருந்த வசந்தகுமாருக்கும் எனக்கும் ஏதோ மனத்தாங்கல் வந்து இருவரும் ஒருவரோடொருவர் சிலகாலம் பேசாமல் இருந்தோம். அந்த இடைவெளியில் வசந்தன் என்னோடு அதிகம் பழக ஆரம்பித்தான்.. ஒரு முறை கார்த்திகேயன் திரையரங்கத்தில் "மன்னாதி மன்னன்" என்ற எம்.ஜி.ஆர்  நடித்த பழைய  படம் பார்த்துவிட்டு வந்து எனக்கு "கண்கள் இரண்டும்  என்று உம்மைக் கண்டு பேசுமோ.." பாடலை சிலாகித்து வகுப்பு மேசையில் தாளமிட்டுப் பாடியது நினைவில் உள்ளது.. அப்பாடலை எனக்கு வசந்தன் தான் அறிமுகப் படுத்தினான் என்று சொல்ல வேண்டும்.

வசந்தன் மற்றும் (போலீஸ்காரர் மகன்) ரவி, சாந்தகுமார் ஆகியோரோடு  திரைப்படப்  பெயர் கண்டுபிடிக்கும் விளையாட்டை  விளையாடுவோம்.  முதலில் ஒருவர் தான் மனதுக்குள்  நினைத்திருக்கும் திரைப்படத்தின் முதலெழுத்தைச் சொல்ல அடுத்தவர், இரண்டாம் எழுத்து, அதற்கடுத்தவர் மூன்றாம் எழுத்தென  என ஒரு வட்டத்தில் இந்த கணிப்பு நடக்கும்.. கடைசி எழுத்து யாருடன் முடிகிறதோ அவர் ஆட்டத்திலிருந்து அகற்றப்பட்டு மீதியுள்ளவர்கள் ஆட்டத்தைத் தொடர்வர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அடுத்தடுத்து கணிக்கும் எழுத்துகளால், ஆரம்பித்தவர் நினைத்த படமும் இறுதியாக கணிக்கப்படத் திரைப்படமும் வெவ்வேறாக அமைந்துவிடும்.. இந்த  விளையாட்டில் ரவியும் வசந்தனும் கில்லாடிகள்.. தாம் தப்பிக்க (யாரும் கேள்விப்படாத) ஒரு புதுப்பெயரை அறிவித்து அடாவடி செய்வார்கள்.! அது ஒரு இனிமையான காலம்.!

வசந்தனின் தந்தையார்  சில சமயங்களில் வசந்தனை பள்ளிக்கு அழைத்து  வருவார். அவர் நல்ல உயரம். பார்ப்பதற்கு காங்கிரஸ்காரர் போல் முழங்கை வரை சட்டையணிந்து வெண்ணிற புருவங்கள்  கொண்டவராக இருப்பார்.  எல்லா மாணவர்களோடும் உரையாடுவார். வசந்தனின் தம்பி ரஞ்சன் என் தம்பி முகிலனோடு ஒரே வகுப்பில் பயின்றவன்.  ஒரே ஒருமுறை நான் (வசந்தகுமாருடனா அல்லது மகாதேவனுடனா என நினைவில்  இல்லை) சைக்கிளில் இராட்டின மங்கலம் சென்று வந்திருக்கிறேன். பசுமையான கிராமம்.  அதன்பின் செல்ல வாய்ப்பு கிட்டவேயில்லை.  

ஏழாம் வகுப்பின் இறுதியில், ஒரு சுபயோக சுபதினத்தில் வசந்தனின்   சடைமுடி   வெட்டப்பட்டு   ரெகுலர் கிராப்பில்  மற்ற பிள்ளைகள் போல் காட்சியளித்தான்.  ஆனாலும் நண்பர்கள் "குடுமி நாதன்" என்ற பட்டப்பெயரை விடவேயில்லை. வசந்தனும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..! பள்ளிப் பருவம் முடிந்து நான் கல்லூரிக்கு சென்னை சென்றுவிட்ட பிறகு வசந்தனைப் பார்ப்பது அரிதானது.  வசந்தனும் வேலூரிலோ அல்லது செய்யாற்றிலோ கல்லூரிக்குச் சென்றான். பள்ளிகாலம் முடிந்த பின்பும் நானும் மற்ற நண்பர்களும்  ஒன்று கூடி படம் பார்க்கச் செல்வது உண்டு.. வசந்தன் எங்களோடு படம் பார்க்க வந்ததாய் எனக்கு ஞாபகம் இல்லை..

நான் பணி நிமித்தம் பெங்களூர் சென்று விட்ட பின்பு, 1984-லிருந்து 1990 வரை ஆரணி வரும்போது நிறைய தடவை   வசந்தனை  பஜார் ரோட்டில்   பார்த்துப்  பேசியிருக்கிறேன். பிறிதொரு முறை வசந்தபவன் எதிரில் பேருந்து நிலையத்தை ஒட்டிய ஒரு கட்டிடத்தில் ஒரு கடை நடத்திக் கொண்டிருந்தான். ஸ்வீட் ஸ்டால் என்றும் நினைவு. பேருந்து நிலையம் சென்று வருகையில் நலம் விசாரித்துக் கொள்வது உண்டு..  

எங்கள் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக பல ஆண்டுகளுக்குப் பின் (ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின்) கடந்த வருடம் டிசம்பரில் மீண்டும் நேரில் சந்தித்து நினைவுகளில் மூழ்கிய அந்த நிகழ்ச்சிக்கு வசந்தன் வரவில்லை.. யாருடனும் தொடர்பில் இல்லை என்று மட்டும் எனக்குப் புரிந்தது.

பின்பு எங்கள்  WhatsApp   குழுமம் ஆரம்பித்து சில மாதங்கள் கழித்து  வசந்தன்  குழுமத்தில் இணைந்தது  எனக்குப் பெருமகிழ்ச்சியாய் இருந்தது..   இருந்தும் கடைசிவரை  அவனோடு உரையாடவே இயலவில்லை என்பது வேதனை. 

தொடர்பில்  இருந்தாலும் இல்லாமல் போனாலும், வசந்தன் எங்களுக்கு ஒரு நல்ல, இனிய  நண்பன். இந்த நடுத்தர வயதில் இன்னமும் பார்க்க, சாதிக்க நிறைய இருக்கும் இக்கட்டத்தில் மறைந்துவிட்ட வசந்தனின் ஆன்மா அமைதியுற இயற்கையை இறைஞ்சுகிறேன்..

 

Wednesday, March 18, 2015

அப்பா


2002 - ல்  அப்பா US வந்து எங்களுடன்  இருந்த காலங்கள், வெறும் எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் தான் ஆனாலும் அவை  மகத்தானவை.. அப்பாவுடன் வெளியில் சென்று ஷாப்பிங் செய்து வருவதாகட்டும், பல இடங்கள் சுற்றிக் காட்டுவதாகட்டும் அவருடன் பழைய விஷயங்கள் பற்றி சிலாகித்தாகட்டும் அவருக்குப் பிடித்தமான தியாகராஜ பாகவதர் மற்றும் பி.யூ.சின்னப்பா ஆகியோரின் பாடல்களை அவருடன் அமர்ந்து கேட்டதாகட்டும்  வெள்ளிக் கிழமை மாலைகளில் அவருடன் அமர்ந்து  Red-wine அருந்தியதை வழக்கமாக்கிக் கொண்டதாகட்டும் இது போன்ற சின்னச்  சின்ன சந்தோஷ தருணங்கள்  என் நினைவடுக்குகளில் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன...  இங்கு எங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளையும் அப்பா ரசித்தார்.  ஆனால் இந்தப் பதிவு  என் அப்பாவின் அமெரிக்கப் பயண அனுபவங்கள் பற்றி சிலாகித்து எழுத அல்ல என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்..


அப்போது  எங்கள் வீட்டின் முன்புறத்து புதர்ச்  செடிகளினூடே ஒரு சிட்டுக்குருவி கூடு கட்டியிருந்தது.. அது அவ்வப்போது வருவதும் போவதுமாக கீ..கீ..கீ என்னும் இனிமையான இரைச்சலுடன் (!) பார்க்கவே பரபரப்பாகத் தோன்றும்.. நான் அலுவலகம் சென்ற பிறகு என் அப்பாவுக்கு அந்த குருவிக்கூட்டைக் கண்காணிப்பதில் நேரம் போனது போலும்.  ஒவ்வொரு நாள் மாலையும் நான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் அப்பா என்னிடம் அன்றைய குருவிக்கூடு நிலவரம் பற்றி விலாவரியாகச் சொல்வார். ஒரு நாள் அணிலொன்று அந்த புதருக்குள் வந்து விட்டதாகவும் அதை சினம் கொண்ட இரு குருவிகள் எப்படி சீற்றத்துடன் வெளியேற்றின என்றும் படம் பிடித்த மாதிரிச் சொன்னார். சிட்டுக்குருவி அந்த கூட்டில் முட்டைகள்  பொரித்து அவை குஞ்சுகளாகி அவை பறக்கக்  கற்றுக் கொண்டு இடம் பெயர்ந்து  பறந்து போனது வரை அப்பா என்னிடம் அன்றாடம் குழந்தைத் தனத்துடன் சொல்வார்.. எப்படி அப்பாவுக்கு இந்த வயதில் (அப்போது அவருக்கு வயது 71) இந்தக் குருவிக்கூட்டின் மீது ஒரு தனி அக்கறையும் கவனிப்பும்  வந்தது என்று நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு..  Senility யாகக் கூட இருந்திருக்கக் கூடும்.

2003 - இல் இந்தியா சென்ற அப்பா  2004 -மே மாதத்தில் காலமானார்.. அந்த வருடம் ஜூலையில்  என் மகள் மஞ்சரியின் பிறந்த நாளை விமரிசையாக இல்லாமல் வீட்டிலேயே கொண்டாடிக்கொண்டு இருக்கும்போது வினோதமாக எங்கிருந்தோ ஒரு சிட்டுக் குருவி வீட்டுக்குள் வந்துவிட்டது. அது வெளியேற வழி தெரியாமல் அங்குமிங்குமாக அலை பாய்ந்து  கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்திருந்த மற்ற   குழந்தைகள் அந்தக் குருவி பின்னே ஓடுவதும் அது பயந்து விட்டத்தில் வேறு ஒரு இடத்துக்கு தாவிப் பறப்பதுமாக சிறார்களுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டு இருந்தது.  அப்போது நான் மஞ்சரியிடம் குருவியைக் காட்டி,  "தாத்தா தான் உன் பிறந்த நாளுக்கு நீ அழைக்காமலே வந்திருக்காரும்மா " என்று விளையாட்டாகச் சொல்லவும்  அவள் பூரித்துப் போனாள். (அப்பா எங்களுடன் இருந்தவரை வீட்டைச் சுற்றி வரும் பறவைகள் குறிப்பாக சிட்டுக் குருவி இவற்றை கண்காணிப்பதிலேயே கவனமாய் இருந்தததால் எனக்கு  அப்படித் தோன்றி இருக்கலாம்) ஒரு வழியாக அந்த சிட்டுக் குருவி தன்  வழி கண்டு பிடித்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே பறந்து சென்றது.

2005 - இல் என் அப்பாவின் முதலாண்டு நினைவுக்கு நான் எழுதிய சமர்ப்பணக் கவிதைக்கு என்ன தலைப்பு வைப்பது என்று குழம்பியிருந்தபோது கவித்துவமாக (அதே நேரம் அம்மா அப்பா இருவரையுமே இழந்து நிற்கும்) எங்கள் குடும்பத்தின் குறியீடாக "கலைந்த கூடும் கலையாத நினைவுகளும்" என்று தலைப்பிட்டேன்.  




பின்னொரு நாள்  ஏதோ நினைவிலிருந்த  எனக்கு அப்பாவின் கவிதாஞ்சலிக்கு குருவி சார்ந்த இந்த தலைப்பு யதார்த்தமாய் அமைந்தது ஆச்சர்யமாய் இருந்தது... அதை விட பெரிய  ஆச்சர்யத்தின் உச்ச கட்டம் 2014 -ல் நடக்கும் என்று அப்போது நான் ஊகித்திருக்கவில்லை...


2014 - மார்ச்சு மாதத்தில்  ஒரு நாள் அசாதாரணமாக வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டிய (Working From Home) கட்டாயம். காலை சுமார் பத்தரை அளவில் வீட்டின் பின் புறம் யாரோ தட்டுவது போலவும்  அதேநேரம் வினோதமாகவும்  "டொக் .. டொக் .." என்ற ஒலி கேட்டது. சென்று பார்த்தால் Patio Door -ருக்கு அருகே அமைந்துள்ள நிழற்கூரையின் கழிகளுக்கிடையே ஒரு சிட்டுக் குருவி கூடு கட்ட இடம் தேடி அலைந்து கொண்டிருந்தது.. அந்த களேபரத்தில் அது கண்ணாடிக் கதவுகள் என்று தெரியாமல் பறக்கையில் அது முட்டும் ஒலிதான் நான் கேட்ட வினோத "டொக் டொக்.. " என்று தெளிவானது.. அந்த போராட்டம் சில மணி நேரங்கள் தொடர்ந்தது.. தோதுவான மறைவிடம் கிடைக்காததால் குருவி தன திட்டத்தைக் கை விட்டிருக்க வேண்டும்.. வேறிடம் தேடி பறந்து சென்று விட்டது.. அன்று மாலை என் தம்பியிடம் தொலைபேசிக்கொண்டிருந்த போது.. "அடுத்த வாரம் மார்ச் 20 அப்பா பிறந்த நாள் வருது இல்ல .. அதத்தான் அப்பா ஞாபகப் படுத்துறார்"- என்று வேடிக்கையாக அந்த குருவி கூடு கட்டும் முயற்சியையும் அந்த வினோத டொக்..டொக் - ஐயும் பற்றிச்  சொன்னேன்..  


அன்று மார்ச் 20 - ஆம் தேதி.. பொதுவாக நான் ஆறு மணிக்குக் கண்விழித்து விட்டாலும் சரியாக 6:15AM மணிக்கு எனது ரேடியோ க்ளாக் அலாரம் இசைத்து எழுப்பும். அது உள்ளூர் FM ஸ்டேஷன்  ஒன்றை ஒலிபரப்ப (பாட்டுகள் மற்றும் நாட்டு நடப்பு செய்திகள்) அதை அரைத் தூக்கத்தில் கேட்டவாறு சிறிது நேரம் படுத்துக் கொண்டிடுருப்பது என் வழக்கம். அன்று கண்விழித்ததும் அப்பா பிறந்த நாள் நினைவுக்கு வர, அதை சென்ற வாரமே  நினைவு படுத்திய குருவியும் அந்த வினோத டொக் டொக் கும் உடன் நினைவுக்கு வந்தது.. அரைத் தூக்கத்திலேயே சிரித்துக் கொண்டேன்.. ஓரிரு நிமிடங்களில், FM ஸ்டேஷனில் செய்தி வாசிப்பாளர் தன் இனிய குரலில், "இன்று மார்ச் 20 - உலக சிட்டுக் குருவிகள் தினம்" (World Sparrow Day) என்று அறிவிக்க.. உடல் சிலிர்த்து சடாரென படுக்கையிலிருந்து எழுந்தேன்.. காரணமின்றி  விழிகளில் நீர் திரள, வாழ்க்கையில் முதன் முதலாக (அரைத்) தூக்கதிலேயே மயிர்க் கூச்செரிந்தது  (Goose bumps)  அன்றுதான்..

சிறு வயது முதல் எங்களைப் பகுத்தறிவாளர்களாக வளர்த்தவரே எம் அப்பாதான்.. அதனால் மூடப் பழக்க வழக்கங்களில் (குறிப்பாக மறு ஜென்மத்தில் எல்லாம்) இன்றுவரை நம்பிக்கை இல்லாத எனக்கு இது ஒரு ஆச்சரியமாகப் பட்டது.. இதை ஒரு வினோத சக நிகழ்வு  (Strange coincidence) என்பதா  அல்லது அமானுஷ்ய ஒற்றுமை என்பதா எனச் சொல்லத் தெரியவில்லை..  இப்போதும் விட்டைச் சுற்றி பறக்கும் சிட்டுக் குருவிகள் காணும்போதெல்லாம் எனக்கு  அப்பா நினைவலைகள் வந்து செல்கின்றன - அவர் இறந்து 10 ஆண்டுகள் கழித்த பின்னும்.

பிறந்த நாள் வணக்கங்கள், அப்பா..!!

Tuesday, January 13, 2015

கே.பாலச்சந்தர் (கேபி) நினைவுச் சிதறல்கள்


டிசம்பர் 23, 2014 - குளிர்கால விடுமுறைக்காக "பெரு" வில் 10 நாட்கள் சுற்றிப்பார்க்கும் பயணத்தின் இடையே "புனோ" என்னும் ஊரில் தங்கியிருந்த நேரத்தில் இணையத்தில் கேபியின் மரணச் செய்தி படித்து வருந்தினேன். நான் "பெரு"-வுக்குக் கிளம்பும் முன்பு டிசம்பர் 19-ஆம் தேதி வாக்கில் செய்தியில் கேபியின் உடல்நிலை சீரடையாமல் அவர் ஐ.சி.யூ வில் இருப்பதாகவும் அவருக்கு டயாலிஸிஸ் நடப்பதாகவும் படித்தபோது, "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் ஜெயபிரதாவை மரணம் துரத்திவரும் காட்சி ஒரு நொடி என் கண்முன் வந்து மறைந்தது... மனதுக்கு கஷ்டமாக இருந்தது... "பெரு" பயணத்தின் போது பல்வேறு நினைவுகள் வந்து போயின.. சில நினைவுச் சிதறல்கள் இங்கே..


1974-ம் வருடம். நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது என் குடும்ப நண்பர் மற்றும் எனது ஆதர்ச வழிகாட்டி கவுதமன் அண்ணன், தான் வைத்திருந்த கிராமபோன் பிளேயரை எனக்கு இயக்கிக் காட்டினார். அப்போது வெளிவந்திருந்த "அரங்கேற்றம்" இசைத்தட்டிலிருந்து பாடல்கள் ஒலியேற்றம் செய்து கேட்டு மகிழ்வுறுகையில் அந்த படம் பற்றி அவர்தான் முதலில் சிலாகித்துச் சொன்னார். அப்போதுதான் எனக்கு "கே. பாலச்சந்தர்" என்ற பெயரும் அவரின் வித்தியாச முயற்சிகளும்  சற்றே பிடிபட்டது. அதுவரை எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோரின் "டெம்ப்ளேட்" படங்களை பார்த்துப் பார்த்து துருப் பிடித்திருந்த என் ரசனையை  கே.பி. படங்கள் துலக்கி எடுக்க ஆரம்பித்தது 1974 முதல் தான்.. அதற்காக கவுதமன் அண்ணனுக்கு நன்றி சொல்லவேண்டும்..

பள்ளிக் காலங்களில் கேபி பாதிப்பு ஏற்பட்டவுடன், அவர் படங்களைத் தேடிப்போய் பார்க்க எத்தனித்தேன்.. என் பள்ளித் தோழன் தயாளன் எனக்கு பெரிய கம்பெனி. அவனும் நானும் கேபி படங்களை  ஒரே அலைவரிசையில் லயிக்கவும் ரசிக்கவும்  ஆரம்பித்தோம்.. தயாளனோடு சேர்ந்து எத்தனை படங்கள் பார்த்திருப்பேன் என கணக்கில்லை. ஆனாலும் அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், மூன்று முடிச்சு போன்ற படங்களை பள்ளிக் காலங்களிலும் பின்னாளில் ஏதோ ஒரு தீபாவளிக்கு நானும் தயாளனும் அடித்து பிடித்து வேலூர் சென்று அப்சராவில் "வறுமையின் நிறம் சிவப்பு" முதல் நாள் முதல் காட்சி பார்த்ததையும்  மறக்கவே முடியாது.. அதே போல் மற்றொரு தீபாளிக்கு (1987) தயாளனுடன் வேலூரில் "மனதில் உறுதி வேண்டும்" பார்த்ததும் நன்றாக நினைவில் உள்ளது.. கேபியின் படங்களில் எனக்கும் தயாளனுக்கும் கமலோ ரஜினியோ சரிதாவோ சுகாசினியோ கதாநாயகர்கள் / நாயகிகள் அல்லர்... கேபி மட்டும்தான் நாயகன் நாயகி எல்லாம்.. அவரின் சிம்பாலிசம் தான் திரைமொழியின் உச்சகட்ட கற்பனை -  எங்களைப் பொறுத்தவரை.

அபூர்வ ராகங்களை நானும் தயாளனும் முதல் முறை பார்த்த உடனே பிடித்துவிட்டது.. கமலின் அறிமுகக் காட்சியில் (தன்  மீது சேறு இறைத்துச் செல்லும் வாகன ஓட்டியை) தே***யா பையா என விளித்தது திரைமொழிக்கு புதுசு என்றாலும் எங்களை சற்றே அதிரச் செய்தது.. ஸ்ரீவித்யா கமல் இடையே நடக்கும் அந்த நிழல் சம்பாஷனை அழகிய கற்பனை.  நாகேஷ் கதாபாத்திரமும் இறுதிக் காட்சியில் ரஜினி நடிப்பும் அபாரமாய் இருக்கும். எழுபதுகளில் தமிழுக்கு இது ஒரு புது முயற்சி என்றால் அது மிகை இல்லை - அது ஒரு ஐரோப்பிய படத்தின் இன்ஸ்பிரேஷன் என்று சொன்னாலும் கூட.

என் பதின்ம வயதில் "அவள் ஒரு தொடர்கதை" யின் நாயகி சுஜாதாவின் அறிமுகம் ("கே.பி குரலில் "கவிதா ஒரு ஆலமரம்") ஆகும் காட்சியில் பாலியல்  சற்றே தலை தூக்கி இருக்கும். அதனாலோ என்னவோ அந்த (கவிதா என்னும்) ஆலமரத்தை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது அவ்வயதில் :-)  அவள் ஒரு தொடர்கதை எனக்கு மிகப் பிடித்த கேபியின் படங்களில் ஒன்று என்பேன். அதைத் தொடர்ந்து "அவர்கள்"-ம்  அப்படியே.. அவர்களில் "வென்ட்ரிலோகிசம்" உத்தியை காதலுக்கு பயன்படுத்தி இருப்பார் கேபி. அவருக்கு மட்டும் ஒவ்வொரு காட்சியையும் எப்படி வித்தியாசமாகக்  காட்டுவது என்பதிலேயே  கவனமாயிருப்பது ஆச்சரியமாய் இருக்கும்..

கவுதமன் அண்ணன் வேலை மாறுதலாகி ஆரணியிலிருந்து சென்ற பின், எனக்கு இன்னொரு குடும்ப நண்பர், சோமுசார் அறிமுகமானார். அவரும் கேபியின் பரம விசிறி. அவருடன் கேபியின் பழைய படங்களை சேர்ந்து பார்க்கலானேன்.. குடும்பஸ்தரான சோமுசார் வயது வித்தியாசம் பார்க்காமல் என்னை "சார்" என்று அழைப்பார்.. அவரோடு கேபி படங்களைப் பார்ப்பது மட்டுமின்றி சரிசமமாய் அமர்ந்து சிலாகிக்கவும் முடிந்தது.. புன்னகை, காவியத்தலைவி, கண்ணா நலமா, நீர்க்குமிழி, சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற பல படங்கள் ஆரணி, வேலூர் எங்கு திரையிட்டாலும் பார்க்கலானோம்.. எனது கேபி பற்று உருமாறி பக்தியானதுக்கு சோமுசாரும் ஒரு மறைமுகக் காரணம்.. 

கிண்டி வந்தபின் கேபி / பாரதிராஜா விவாதங்களில் சர்ச்சைகளில் அடியேன் தவறாமல் ஆஜராவேன். எனக்கு ஆதரவாக சிலரும் (சுந்தரவடிவேல், வேலூர் வெங்கி, வேணு), எதிர்புறத்தில் பலரும் (வெற்றி, சுபாகர் குறிப்பாக), அவ்வப்போது ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி சிலரும் (குட்டி கோச்சா) விவாதங்களில் உய்த்திருந்த காலங்களை யாரால் மறக்க முடியும்..? அதிலும் குறிப்பாக வெற்றியின் தந்திரம் (அதாவது நாம் சீரியஸாக விவாதித்துக் கொண்டிருக்கையில், சென்னைக்கே கேட்கும்படி ஒரு வெடிச்சிரிப்பு சிரிப்பது)  பிரபலமானது (சமயங்களில் நமக்குள் கோபம் கொப்பளித்தாலும்).. கிண்டி காலங்களில் தி.நகர் கிருஷ்ணவேணியில் பாபு, சுந்தர வடிவேலுவோடு சேர்ந்து தண்ணிர் தண்ணீர் போன்ற படங்கள்  பார்த்ததாய் நினைவு.

சௌபா கல்லூரித் தேர்தலில் வென்று நமக்கு ட்ரீட் கொடுக்க நாம் கேபியின் 47-நாட்கள் (தி.நகர் கிருஷ்ணவேணியில்) சென்று வந்ததும் படம் முடிந்ததும் சௌபாவை அடிக்க தேர்தலில் தோற்ற குரூப் ஆள் செட்டப் செய்ய, அவர்கள் சௌபாவுக்கு பதில் (அடையாளக் குழப்பத்தில்) நம் ஜூனியர் (அருப்புக்கோட்டை) ராமகிருஷ்ணனை ஒரு கை பார்த்துவிட்டதும் நன்றாக நினைவில் உள்ளது. அந்த ராம்கி என்னும் ராமகிருஷ்ணன் என்னோடு Cisco வில் பணியாற்றி வருகிறார்.. எப்போதாவது சந்திக்கையில் 47-நாட்கள் பட அனுபவம் பேசி சிரிப்பதுண்டு..  அயல் நாட்டில் கேபி எடுத்த ஒரு சில  படங்களில் 47-நாட்களும் நினைத்தாலே இனிக்கும் -மும் அடங்கும்..

நாம் மூன்றாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தபோது "அக்னி சாட்சி" வெளியானது.. அதற்கு ஒரு வருடத்துக்கு முன்தான் கவிஞர் வாலியின் "பொய்க்கால் குதிரைகள்" என்னும் புதுக்கவிதைத் தொகுப்பு வெளிவந்து அதில் சிலாகித்திருந்த எனக்கு, கேபி அதில் வரும் கவிதைகளை "அக்னி சாட்சியில்" பயன் படுத்தி இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அக்னி சாட்சி ஒரு வித்தியாசமான படம்.. சரிதா கதா பாத்திரத்தை சித்தரிப்பது சிரமமானதும் கூட. கேபி தனது முத்திரையின் அழுத்தம் குறையாமல் கவித்துவமாய் எடுத்த படம். நான் அந்த படத்தைப் பற்றி உருகியிருப்பதைப் பார்த்து குட்டி கோச்சா "அக்னி சாட்சி" போஸ்டர் ஒன்று வாங்கி எனக்குத் தந்தான். அதில் வரும் ஒரு கருப்பு-வெள்ளை சரிதாவின் குளோஸ் அப்பை நான் வரைந்து வைத்திருந்தேன்.. 

கிண்டி காலங்களில், கேபியைச் சிலாகித்து என் அறையில் அவர் படமும் அதன் அருகே ஒரு கவிதையையும் நான் எழுதி வைத்திருந்தேன்:
       
        
        சினிமா ஒரு 
        சிக்கலில் கிடந்தபோது 
        நீ 
       சிக்கல்களையே சினிமாவாக்கி  
       சிந்திக்க வைத்தவன்..

ஒருமுறை சுபாகர் என் அறைக்கு வந்து அரட்டை அடித்துச் செல்லுமுன், "பகல், இந்த கவிதையில் கடைசி வரியை மட்டும் "சில்லறை சேர்த்தவன்" என்று மாற்றிவிடு" என கிண்டலாய்ச் சொல்லிச் சென்றது நினைவில் உள்ளது..!

நான்காம் ஆண்டில் (1983) நான் தமிழ் மன்றச் செயலர் ஆனவுடன் அதன் ஆரம்பவிழாவுக்காக பிரசிடெண்ட் இளங்கோவுடன் மவுண்ட் ரோடு சென்று ஒரு வினியோகத்தரிடம் "மன்மத லீலை" படச்சுருள் ரூபாய் 250க்கு பெற்றுவந்து நம் விவேகா அரங்கில் திரையிட்டது பலருக்கும் நினைவிருக்கும்.. அதே அரங்கில் நாம் முதலாண்டில் சேர்ந்த ஆகஸ்டு மாதத்தில் "நினைத்தாலே இனிக்கும்" படத்தை (கேபியை ரசிப்பதா அல்லது நம்மை ராக்கிங்குக்கு இழுத்துச் செல்ல கழுகாய் காத்திருக்கும் சீனியர்களிடமிருந்து எஸ்-ஆவதா என) குழப்பமான மன நிலையில் பார்த்ததும் பலருக்கும் நினைவுக்கு வரும்..


நான் ஒருதடவையாவது பார்த்துப் பேசவேண்டும் என்று வைத்திருந்த பட்டியலில் கேபி-யின் பெயர்தான் முதலில் இருக்கும்.. அது முடியாமல் போய்விட்டது - என் பக்கத்திலிருந்து முயற்சி எடுக்காமலே. எழுபதுகளிலும் எண்பதுகளின் மத்தி வரையிலும் (மனதில் உறுதி வேண்டும் வரை) கேபியின் ரசிகனாய் இருந்த நான் அதன் பின்  (மற்றும் 90-களில்) சற்றே விலகிப் போய்விட்டேன்.  தலைமுறை இடைவெளி காரணமாகவும் புதிய படைப்பாளிகளின் தாக்கத்தில் தமிழ் திரையுலகம் பாதை மாறி பயணித்துவிட்டதை அவர் கவனத்தில் கொள்ளாததாலும்  90-களில் அவர்  படைப்பின் வீரியம் குறைந்ததாகவே நினைக்கிறேன். என்ன இருந்தாலும் கேபி கேபிதான்.. அவரின் எத்தனையோ கருப்பு வெள்ளைப் படங்களே அதற்கு சாட்சி.  படைப்பாளிகளில்  பிரும்மா அவர். 









Friday, February 14, 2014

பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் alias பாலு மகேந்திரா - சில நினைவுகள்



பாலு மகேந்திரா என்னும் ஒரு மகத்தான கலைஞனை
நினைக்கும்போதே பற்பல நிகழ்வுகள் மனதுக்குள் அழியாத கோலங்களாய் அலை மோதுகின்றன.. 

1979-ஆம் ஆண்டு நாம் கல்லூரியில் சேர்ந்த வருஷம் அழியாத கோலங்கள் வெளிவந்தது. அதில் சலீல் சவுத்ரி இசையமைத்து (கங்கை அமரன் எழுதிய) “பூ வண்ணம்.. போல நெஞ்சம்” என்ற பாடல் 1980-ல் அந்த படத்தைப் போலவே நம் பதின்ம வயது கனவுகளைக் கிளறி விட்டிருந்தது.. பின்பு அந்த படத்தை நம் விவேகானந்தா உள்ளரங்கிலேயே நாம் திரையிட்டுப் பார்த்ததே ஞாபகம். (சுபாகர் மட்டுமே தேதி, நேரம் மற்றும் இதர விவரங்களை எழுத முடியும்). அப்போது ஆரம்பித்தது பாலு மகேந்திரா என்னும் திரைக்கலைஞனை ஒரு இயக்குனராக ரசிக்கவும் , சிலாகிக்கவும், இன்னும் சொன்னால் போற்றவும்.. அழியாத கோலங்கள் Summer Of 42 -ன் பாதிப்பில் எடுக்கப் பட்டிருந்தாலும் அதை தமிழ்ச் சூழலுக்கு ஏற்பத்தழுவியிருந்த விதம் பாராட்டுக்குரியது.


எண்பதுகளில் மூடுபனியும் மூன்றாம் பிறையும் பாதிக்காத தமிழ் சினிமா விரும்பிகள் இருக்கவே முடியாது.. மூடுபனியில் ஷோபாவைக் கடத்தும் காட்சியை பாலு மகேந்திரா வைத்தெடுத்த காமிரா கோணம் “சவாலான காட்சிகளை குழப்பமில்லாமல் எடுப்பது எப்படி” என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். அதே படத்தில் இளையராஜாவின் “என் இனிய பொன் நிலவே” பாடல் படமாக்கப் பட்ட விதத்தில் பாலு மகேந்திராவின் காட்சி ரசனை தமிழ்த் திரையில்  புது அழகியலை வெளிப்படுத்தியது.. (அந்த படத்தில் பாலு மகேந்திரா பிரதாப்புக்குக் குரல் கொடுத்திருப்பார்.. இறுதிக் காட்சியில்.. “மாமா.. அம்மா மாமா..” என்று ஒரு விதமான மாடுலெஷனில் அந்த உருக்கும் குரலைக் கேட்கையில் அதுவரை வில்லனாகவே நாம் பார்வையில் தெரியும் பிரதாப் கதாபாத்திரத்தின் மீது நமக்கு நியாயமான பரிதாபம் வந்துவிடும்..)


கல்லூரிக் காலங்களில் சிக்கனம் காரணமாக நான் பெரும்பாலும் படங்களை ஒரு முறைதான் பார்ப்பேன் (இரண்டாம் முறை பார்ப்பதற்கு பதில் வேறொரு புதுப் படம் பார்க்கலாமே என்னும் பொருளியல் சார்ந்த உணர்வும் கூட). என் கொள்கையை நான் விட்டுக் கொடுத்தது இரண்டு படங்களுக்குத் தான் : ஒன்று “முள்ளும் மலரும்” மற்றும் “மூன்றாம் பிறை”. நான் இந்த இரண்டு படங்களையும் இரண்டாம் முறை பார்த்ததே அதன் ஒளிப் பதிவுக்காகத்தான் என்பதை பதிவு செய்தே ஆகவேண்டும்.. இரண்டுமே ஒளியோவியங்கள்.. சொல்ல வார்த்தைகள் இல்லை..அதுவும் முழுக்கவே வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் இயற்கை வெளிச்சத்திலேயே படம் பிடிக்கப் பட்டவை..


1980-களில் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் அப்போது பிரபலமாயிருந்த (வட சென்னையைச் சேர்ந்த) ஓவியர் ஜே.பி.கிருஷ்ணா “கவர்னர் பீடி” விளம்பரங்களில் திரையுலக பிரபலங்களை ஓவியமாகத் தீட்டி நகரின் வெவ்வேறு இடங்களில் வைத்திருந்தார். நம்மில் நிறைய பேருக்கு நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். நம் பாலு மகேந்திராவின் சற்றே வித்தியாசமான தோற்றம் (கமேண்டோ தொப்பி, கறுப்புக் கண்ணாடி, கழுத்தில் ஸ்கார்ஃ ப்) ஜே.பி.கிருஷ்ணாவின் கவனம் ஈர்த்து இருக்கவேண்டும். பாலு மகேந்திராவின் ஓவியம் பெரிய உருவமாய் தீட்டப்பட்டு தி.நகர் ராஜகுமாரி தியேட்டருக்கு எதிரில் வைக்கப் பட்டிருந்தது. அதை ஒவ்வொரு முறை பாண்டி பஜார் பக்கம் போகும்போதெல்லாம் ரசித்திருக்கிறேன்..


அச்சமயத்தில் குமுதம் வார இதழில், கவர்னர் பீடி விளம்பரத்துக்காக வரையப்பட்ட அந்த ஓவியத்தைப் பற்றி பாலுவிடம் கேட்க அவர் சொன்ன பதில் சற்றே வெளிப்படையாய் இருந்தது..”படம் நன்றாயிருக்கிறது.. ஆனால் நான் உபயோகப் படுத்தாத பொருளுக்காக என் சித்திரத்தை வரைந்ததற்கு பதிலாக நான் உபயோகப் படுத்தும் நிரோத்துக்கு என் சித்திரம் பயன் பட்டிருந்தால் மகிழ்ந்திருப்பேன்” என்று பதில் சொல்லியிருந்தார்..! அதுதான் பாலு மகேந்திரா..(கமலின் ஆத்ம நண்பரல்லவா..).


இதே போல எண்பதுகளில் பாலு மகேந்திராவிடம் அப்போதைய பிற ஒளிப்பதிவாளர்களின் வழக்கமான - அழகியலற்ற - கண்களைச் சோர்வடையச் செய்யும் - சடார் சடாரென zoom lens-ஐ உபயோகப் படுத்தும் அணுகுமுறை பற்றி கேட்டபோது அவர் சிறிதும் தயங்காமல் “I don’t masturbate with zoom lens” என்று பேட்டியளித்தார்..!! அவருடைய வெளிப்படையான பேச்சு அவரின் தெளிவையும் தன்னம்பிக்கையையும் உரக்கச் சொன்னது..


மூன்றாம் பிறையின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத ஒரு சில இயக்குனர்கள் (AVM-ல் எண்பதுகளிலும் கட்டிங்-வெட்டிங்-ஓட்டிங் என்று தொழில் நுட்பத்தை அறுபதுகளிலேயே சுருக்கிகொண்டிருந்த பெரிசுகளாக இருக்கலாம்).. “மூன்றாம் பிறை போன்ற கலைப் படத்தை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம்.. அவரால் ஒரு சுத்தமான அக்மார்க் மசாலா படத்தை எடுத்து வெற்றி பெறச் செய்ய முடியுமா” என்று பாலு மகேந்திராவை உசுப்பிவிட அவர் அடுத்த படமாக “நீங்க தான கேட்டீங்க” என்று பொருள் படும் தலைப்பில் “நீங்கள் கேட்டவை” எடுத்தார்.. அதுவும் வெற்றிப்படமானது..!! அதைப் பற்றி பாலு மகேந்திரா பின்னாளில் ஒரு பெட்டியில் சொல்லியிருந்தார்.


1984-ல் நாம் ஐந்தாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் - வருடம் ஒருமுறை நடக்கும் TechoFes -க்கு பாலு மகேந்திராவை அழைக்க இருப்பதாய் பிரசிடெண்ட் இளங்கோவோ அல்லது சவுந்திரபாண்டியனோ நிகழ்ச்சிக்கு முன்னாள் இரவு சொல்ல.. உடனே பாலு மகேந்திராவின் கோட்டோவியம் ஒன்றை அவசரம் அவசரமாக வரைந்து நாலு வரிக் கவிதையோடு நம் விவேகா உள்ளரங்கில் அவர் பங்குபெற்ற நிகழ்ச்சி முடிந்ததும் நானும் அப்போது தமிழ் மன்றத்தில் என்னோடு பங்கேற்ற பா.இரவீந்திரனும் (நமக்கு அடுத்த செட்) போய் பார்த்து அவரின் கையெழுத்து வாங்கியது இன்னமும் செழுமையாய் நினைவில் உள்ளது..












நேற்று Facebook-கில் சாம்சன் ரவீந்திரனின் வீட்டுக்கு முன்பொரு முறை பாலு மகேந்திரா வந்திருந்த படத்தைப் பார்த்ததும் பரவசமாய் இருந்தது.


பாலு மகேந்திராவின் எல்லா படைப்புகளிலும் ஒரு நேர்மை இருக்கும் (தழுவல் படங்களில் மூலக்கதை என்று டைட்டிலில் போட்டிருப்பார்), சமூக உணர்வு, மனித உறவுகளின் பரிமாற்றங்கள் (கோகிலா, சந்தியாராகம்) , கோபதாபங்கள், ஏமாற்றங்கள் (வீடு) என்று வெவ்வேறு தளங்களில் அழகியலோடு சொன்ன அற்புதக் கலைஞன். ஒரு நல்ல படைப்பாளிக்கு வாசிப்பு அவசியம் என்று (நம் சுஜாதா சொன்னதைப் போலவே) நிரூபித்த இலக்கியவாதி.அந்த மேதையின் புகழ் ஓங்குக..!


Thursday, July 18, 2013

காவியக் கவிஞர் வாலிக்கு நினைவாஞ்சலி..




1980 ஆம் ஆண்டு நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவன்.. அப்போதெல்லாம் நல்ல ஒரு தமிழ் சினிமாப் பாடலை வானொலியில் கேட்கும்போதெல்லாம் "இது கண்ணதாசன்  எழுதியதாத் தான் இருக்கும்" என்று நானும் தமிழ் கூறும் நல்லுலகமும் தவறாகவே நினைத்து வந்திருக்கிறோம். அப்படித்தான் ஒரு நாள் விவிதபாரதியில் "நீங்கள் கேட்டவை" ஒலிபரப்பில் "உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும் " பாடலை (படம் : இதயத்தில் நீ ) ஒலிபரப்பினார்கள்... நானும் அந்த பாடலின்  இசையிலும் அர்த்தத்திலும் மெய் மறந்து ரசித்து, "கண்ணதாசனா கொக்கா.. என்னமா எழுதியிருக்காருய்யா" என்று மனசுக்குள் சொல்லி முடிக்கும் முன், "இந்த பாடலை எழுதியது கவிஞர் வாலி" என்று விவிதபாரதி அறிவித்தது... நான் எதிர் பார்த்திராத கவிஞரின் பெயரைக் கேட்டதில் எனக்கு பெருத்த குழப்பமும்  "வாலி இப்படியெல்லாம் கூட எழுதுவாரா" என்று ஆச்சரியமும்.. இதுபோல் எத்தனை பாடல்களை நான் தவறாக கண்ணதாசன் எழுதியது என்று நினைத்திருந்திருப்பேனோ என்று  அன்று உணர்ந்து வாலி எழுதிய திரைப்பாடல்கள் பவற்றை தேடிக் கண்டுபிடித்து கேட்டு ரசிக்கலானேன்..
அன்று முதல் நான் கவிஞர் வாலியின் ரசிகனின் என்றால் அது மிகை இல்லை..

எண்பதுகளில் நான் தேடிப் படித்து வாசித்த எழுத்தாளர் சுஜாதாவின் "ஸ்ரீ ரங்கத்து தேவதைகள்"-ல் கவிஞர் வாலிக்கும் தனக்கும் ஒரே பேர் (ரங்கராஜன்) மற்றும் ஒரே ஊர் (ஸ்ரீ ரங்கம்) என்று சுஜாதா எழுதியிருந்த்ததைப்  படித்தபோது எதனாலென்று தெரியாமல் உள்ளம் பூரித்தது.. பேர் ராசியோ என்னவோ இந்த இரண்டு ரங்கராஜன்களும் என்னைப் பாதித்தவர்கள்..!! 


வாலி எழுதியவை எத்தனையோ  ஆயிரம் பாடல்கள்.. அவற்றில் எத்தனையோ முத்துக்கள்..  இதயத்தில் நீ, படகோட்டி, கற்பகம் போன்ற படங்களில் அனைத்து பாடல்களையும் (கண்ணதாசன் கோலோச்சிய அதே நேரத்தில்) வாலி எழுதினார்.. இணையத்து ஆரம்ப நாட்களில் தமிழ் சினிமா பாடல்கள் பக்கத்துக்காக வாலியின் பாடல்களிலிருந்து சிலவற்றை மட்டும் எடுத்து "கவிஞர் வாலியின் கல்வெட்டு வரிகள்" என்ற தலைப்பில் ஒரு பதிவு  இட்டிருந்தேன். (http://tfmpage.com/forum/16029.13209.22:45:09.html) அந்தக்  கட்டுரையின் சில பகுதிகள் இதோ:

நிலையாமை:
"உறவு என்றொரு சொல்லிருந்தால்..
 பிரிவு என்றொரு பொருளிருக்கும்..
 காதல் என்றொரு கதையிருந்தால்
 கனவு என்றொரு முடிவிருக்கும்.."

(படம் : இதயத்தில் நீ)

மூப்பு:
"கடந்த காலமோ திரும்புவதில்லை..
 நிகழ் காலமோ.. விரும்புவதில்லை..
 எதிர்காலமோ.. அனுபவமில்லை..
 இதுதானே.. அறுபதின் நிலை.."

(பாடல் : "" உனக்கென்ன குறைச்சல்.."  படம் : வெள்ளி விழா)

பிரிவாற்றாமை:
"பிறையில் வளர்வதும்..
 பிறகு தேய்வதும்.. ஒரே நிலவு..
 உறவில் கலப்பதும்..
 பிரிவில் தவிப்பதும் ஒரே மனது.."

(பாடல் : " நானே நானா.. யாரோதானா .."  படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

காதல்:
"காலடி தாமரை..
 நாலடி நடந்தால்..
காதலன் உள்ளம் புண்ணாகும்.. இந்தக்
காதலன் உள்ளம் புண்ணாகும்.."

(பாடல் : " பவளக் கொடியிலே.."  படம் : பணம் படைத்தவன்)

"மாலையில் சந்தித்தேன்..
 மையலில் சிந்தித்தேன்..
 மங்கை நான் கன்னித்தேன்..
 காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்.."

(பாடல் : " தாமரைக் கன்னங்கள்.."  படம் : எதிர் நீச்சல்)

பொதுவுடைமை:
"இல்லை என்போர் இருக்கையிலே..
 இருப்பவர்கள்.. இல்லை என்றார்..
 மடி நிறைய பொருளிருக்கும்...
 மனம் நிறைய  இருளிருக்கும்..
 எது வந்த போதும்
 பொதுவென்று வைத்து
 வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்.."

(பாடல் : "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.." படம் : படகோட்டி)

இல்(லாத) வாழ்க்கை:
"தாமரை மேலே.. நீத்துளி போல்..
 தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன..
 நண்பர்கள் போலே.. வாழவதற்கு
 மேளமும் தாலியும் தேவையென்ன.."

(பாடல் : " ம ன்றம் வந்த தென்றலுக்கு.."  ப டம் : மௌன ராகம்)

சித்தாந்தம்:
"அப்பனென்றும் அம்மையென்றும்..
 ஆணும் பெண்ணும் கொட்டி வைத்த
 குப்பையாக வந்த உடம்பு.. ஞானப்பெண்ணே..
அதில்
சித்தனென்றும் புத்தனென்றும் பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப் போகும் கரும்பு..

பந்த பாசச் சேற்றில் வந்தது வீழ்ந்த தேகம்..
எந்த கங்கை ஆற்றில்
இந்த அழுக்கு போகும்.."

(படம் : குணா)

நம்பிக்கையூட்டல்:
"எங்கே கால் போகும்.. போகவிடு..
 முடிவைப் பார்த்துவிடு..
காலம் ஒருநாள் கை கொடுக்கும்..
அதுவரை பொறுத்துவிடு.."

(பாடல் :  " நெஞ்சிருக்கும் எங்களுக்கு.." படம் : நெஞ்சிருக்கும் வரை) 

பிரிவுத்துயர்:
"கண்ணை விட்டுப் போனாலும்..
 கருத்தை விட்டுப் போகவில்லை..
 மண்ணை விட்டுப் போனாலும்..
 உன்னை விட்டுப் போகவில்லை.."

(பாடல் : " மன்னவனே அழலாமா.."  படம் : கற்பகம்)

உண்மையைச் சொன்னால், இந்த வரிசையிலும் தலைப்புகளிலும் கவிஞர் வாலியின் கணக்கற்ற பாடல்களைச் சேர்க்கலாம்..."மாதவிப் பொன்மயிலாள்  தோகை விரித்தாள்.." (படம் : இருமலர்கள்) "கண்ணன் வருவான் கதை சொல்லுவான்.. வண்ண வண்ணத் தொட்டிலிலே தாலாட்டுவான்.." "அவளுக்கும் அமுதென்று பேர்.." (படம் : பஞ்சவர்ணக் கிளி) " உனக்கென்ன மேலே நின்றாய்.. ஓ..நந்தலாலா." (படம் : சிம்லா ஸ்பெஷல்) "உன்ன நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்.. தங்கமே ஞானத் தங்கமே.." (படம் : அபூர்வ சகோதரர்கள்  இப்படி ஆயிரக்கணக்கான பாடல் வரிகளின் சொந்தக்காரர் வாலி.

புதுக் கவிதையிலும் அவர் பெரும் சாதனையாளர்.. அவரது சொல் வீச்சுக்கள் மற்றும் சிலேடை நயம் இவையெல்லாம் அவரது "பாண்டவர் பூமி" யிலும் "அவதார புருஷனிலும் " அட்டகாசமாக அமைந்திருக்கும்.. வாலியின் புதுக்கவிதை வீச்சின் பாதிப்பில் எனது புதுக்கவிதையின் வடிவம் மாறிப்போனதை தனியாக எழுதவேண்டும்..

கவிஞர் வாலியின் புத்தகம் "வாலிப வாலி" சென்றாண்டு வெளிவந்தது.. அதில் கவிஞரின் அனுபங்கள் மற்றும் பாடல் துணுக்குகள் என்று நிறைய செய்திகள் இருந்த்தது.. ஏரத்தாழ 600 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தை ஒரே மூச்சில் ஒரு சனிக்கிழமை படித்து முடித்தேன்.. அதைப் படித்தபின் வாலியைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் மிக உயரத்துக்கு சென்றுவிட்டது.. 

அதன் கடைசிப் பக்கத்தில் நான் என் கையெழுத்தில் கவிஞர் வாலியைப் பற்றி எழுதிருந்தேன்... இதோ:



எண்பத்திரண்டு வயது வாலியின் மறைவு காலத்தின் கட்டாயம்தானென்று சுலபமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை.. எல்லா தலைமுறைகளுக்கும் கவிதை எழுதிய வாலிக்கு அவர் பாடல்களில் லயித்து அனுபவிப்பதை விட வேறு எப்படி அஞ்சலி செய்வதென்று தெரியவில்லை..
















Thursday, December 9, 2010

நந்தலாலா

ஓரிரு வருடங்களுக்கு முன் ஜப்பானிய மொழிப் படமான "கிகுஜீரோ" (kikujiro) வைப் பார்த்துவிட்டு G84-ல் சிலாகித்து எழுதியிருந்தேன். அதன் பின் சுபாகரும் அதன் இயக்குனர் டேகஷி கிடானோ பற்றியும் தொடர் பதிவு எழுதிருந்ததாக நினைவு.

சென்ற வாரம் கிகுஜீரோவின் இந்தியப் பதிப்பான "நந்தலாலா" பார்த்தேன். ஒரிஜினலுக்கு அருகே வராமல் தனக்குத் தானே கெட்ட பெயரை ஏற்படுத்திக்கொள்ளும் பல படங்களிலிருந்து வெகுவாக வித்தியாசப் பட்டிருக்கிறது நந்தலாலா. கிகுஜீரோவின் கதைக் களத்தில் அதன்
சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு மிஷ்கின் புனைந்திருக்கும் நந்தலாலா சிறப்பான படம். பல காட்சிகள் மூலத்திலிருந்த படியே இருந்தாலும், காட்சி அழகு சற்றும் குறையவில்லை. (தென் மாவட்டங்களில் - திருநெல்வேலி (?) எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்). மிஷ்கின் கிடானோவின் தீவிர விசிறியாம். நிறைய காட்சிகள் கிடானோ வைப் போல் ஓரிரு வினாடிகள்
நீட்டி (stay shots)க் காண்பித்து இருப்பது இந்திய சினிமா ரசிகனுக்கு "கலைப்படம்" என்ற உணர்வைக் கொடுக்கலாம். கிகுஜிரோவில் இது போன்ற ஷாட்டுகள் ஏராளம் உண்டு.

பொதுவாக விமர்சனம் என்ற பெயரில் கதையைச் சொல்லிவிடுவது எனக்கு உடன்படாது என்பதால் சுருக்கம் மட்டும் இங்கே : தாயைத் தேடிச் செல்லும் குழந்தைக்கு தானே தாயாகும் ஒரு விளிம்புநிலை மனிதனின் பயணம் இது. சிறுவன் அஷ்வத் மற்றும் மிஷ்கின் இயல்பான நடிப்பு மிக நன்று. (குறிப்பாக, படீரென்று TV பெட்டியை உடைத்து விட்டு சர்வசாதாரணமாக சுவற்றில் கோடு போட்டபடி வரும் அறிமுகக் காட்சியிலேயே அந்த கதாபாத்திரத்தின் தன்மை
நமக்குப் புரிகிறது). ஒளிப்பதிவு மிக நேர்த்தி. டிராட்ஸ்கி மருது படக் காட்சிகளின் "அழகியல்" தன்மைக்குப் பங்களித்திருக்கிறார். ("அழகியல் ஆலோசனை " என்று டைட்டிலில் காட்டினார்கள்- இது புதுசு)

இந்த படத்தின் ஒரு முக்கிய நபர் (கதாபாத்திரங்களை விடவும்) இளையராஜாவின் இசை என்றால் அது மிகை இல்லை.. மிஷ்கின் ஒரு பேட்டியில் சொன்னமாதிரி, நம்மை கைப் பிடித்து அழைத்துச் செல்லுகிறது.. சிறுவயதில் அம்மாவின் சுட்டுவிரல் பிடித்து நடந்து போன நினைவுகளை மீண்டும் ராஜாவின் இசை மீட்டுகிறது. இசை ரசிகர்களுக்கும், பின்னணி இசைக்கோர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இப்படத்தின் இசை ஒரு நல்ல நூலகம் போல. ஒரு காட்சியில், "தாலாட்டு கேட்கத்தானே இத்தனை
நாள் காத்திருந்தேன்.." என்று உரு(க்)கும் பாடல் ராஜாவின் குரலில் ஒலிக்கும் போது கண்களை முட்டிக் கொண்டு கண்ணீர் வருகிறது நம்மையும் அறியாமல். "நான் கடவுள்"-ளுக்குப் பிறகு என்னை வெகுவாக பாதித்த படம், படத்தில் நிறைய உள்ளுரைகள் உண்டு - கவனமாய்ப் பார்த்தால் அனுபவிக்கலாம்.

தமிழ்ப்படங்களுக்கு இது இன்னொரு பரிமாணம்.

நான் கண்ட ஒரே குறை "மூலக்கதை : கிடானோ" என்று ஒரு வரி போடவில்லை என்பதுதான். (பாலு மகேந்திராவின் "ஜூலி கணபதி" Stephen King-கின் Misery-யைத் தழுவியது. டைட்டிலில் "மூலக்கதை - ஸ்டீபன்" என்று நேர்மை தவறாமல் காட்டியிருந்தார் பாலு மகேந்திரா). இதேபோல் ஒரு குறை "எந்திரன்" பார்த்தபோதும் இருந்தது - அதன் மூல கர்த்தாவான சுஜாதாவுக்கு (அவரின் கடைசிப் படம் என்பதால்) நினைவாஞ்சலி செய்யாதது.

-பகலவன்

Friday, June 25, 2010

இராவணன் - ஒரு திரைப் பார்வை..

இராவணன் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பு (அதன் விளம்பரங்களாலும் அவ்வப்போது கவனமாக வெளியிடப்பட்ட scoop -களாலும்) எகிறிவிட்டிருந்ததால், எத்தனையோ பேர் படம் பற்றி எழுதியும் சொல்லியும் கேட்காமல் நேற்று போய் பார்த்து வந்தேன். கூட ஜியா வந்திருந்ததால் சற்றே ஆறுதல்.

படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா நடிப்பு இருக்கிறது.. நீர்வீழ்ச்சிகளும், மலையிடுக்குகளும், பெருமரக்காடுகளும் கொண்ட நல்ல location -னும் இருக்கிறது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் நன்றாகவே இருக்கிறது. படம் முழுக்க அள்ளித்தெளித்த மாதிரி நிறைய பாடல்கள் இருந்தும் இரு பாடல்கள் கேட்கும் ரகத்தில்தான் இருக்கின்றன. எதோ ஒரு காட்டுப்பகுதியில் ஆங்காங்கே தென்படும் குடில்கள், பாழடைந்த கட்டிடங்கள், ஆனந்த சயனம் கொள்ளும் ஸ்ரீரங்கனின் உடைந்த சிலை (தசாவதார பாதிப்பில்?) என செட் போட்டவரின் உழைப்பும் கூட சொல்லும்படித்தான் இருக்கிறது.. என்ன இருந்தும் என்ன பயன்..? "காதலிக்க நேரமில்லையில்" நாகேஷ் சொல்வதுபோல் "கதை" என்ற ஒன்று மட்டும்தான் இராவணனைப் பொறுத்தவரையில் இல்லை..!! ஆனால் யாரும் அதைக் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக இராமாயணக் கதாபாத்திரங்கள் கொண்டு "நிகழ்வுகள்" (கவனிக்கவும், கதையல்ல) பின்னப் பட்டுள்ளன.

சில கேள்விகளை மணிரத்னத்திடம் கேட்டே ஆக வேண்டும்: முதலில், கணவனைத் தீவிரவாதிகளிடம் தொலைத்து விட்டு தேடும் மனைவி (ரோஜா), பிள்ளைகளை தீவிரவாதத்தால் உண்டான அமளியில் தொலைத்துவிட்டு தேடும் கணவன்-மனைவி (பம்பாய்), தன்னைப் பெற்ற தாயை கலவரம் கொழுந்து விட்டெரியும் ஈழத்துக்கே போய் தேடும் சிறுமி (கன்னத்தில் முத்தமிட்டால்) போன்ற அதே "தேடுதல்" பாணியில் மனைவியைத் தீவிரவாதியிடம் ("தீவிரவாதி"-ன்னு விக்ரம் கதாபாத்திரத்தப் பத்தி போலிஸ் சொல்லுது, ஆனா, எல்லா காட்சிகளிலும் விக்ரம் ஏதோ எம்ஜியார் ரேஞ்சுக்கு நல்லவரா இருக்கார்..!) தொலைத்து விட்டு கணவனான போலிஸ் அதிகாரி தேடும் இந்த இராவணன். ஏன் மணி சார் ஏன்? இந்த தேடுதல் வளையத்திற்குள்ளிருந்து எப்போது மீண்டு வரப்போகிறீர்கள்? ("தேடாதே..தேடினால் தொலைந்து விடுவாய்" என்னும் சுஜாதா எப்போதோ எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன..!)

இராவணன் நல்லவனா கெட்டவனா என்றும் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் "நாயகன்"-பாணியில் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வைக்கும்படியான ambiguous characterization தேவைதானா..? அடர்ந்த காட்டுக்குள் தான் கடத்திவந்த பிணையக் கைதியுடன் ஓடிக்கொண்டே இருக்கும் போது, அதெப்படி சார், திடீர் திடீரென்று சுமார் இருநூறு முன்னூறு ஆட்கள் (எல்லாம் இராவணனின் ஆதரவாளர்களாம்) கூட சேர்ந்து கொள்வதும், பாடல் முடிந்ததும் எஸ்கேப் ஆவதும் எப்படி? இது ஏல்லாவற்றையும விடக் கொடுமை, கிளைமாக்ஸ். பதினாலு நாட்கள் பிணையக் கைதியாய் இருந்துவிட்டு, விடுவிக்கப் பட்ட ஒருத்தி, தன் போலிஸ் கணவன் சொன்ன அபத்தமான குற்றச்சாட்டை verify செய்ய மீண்டும் காட்டுக்கே செல்வது வேண்டுமானால் திரைக்கதைக்கு உதவி இருக்கலாம். ஆனால், இந்த logic.. logic.. என்பார்களே.. அது இடிக்கவில்லையா..? ஓடும் இரயிலில் இருந்து செயின்-ஐ பிடித்திழுத்து இறங்கிச் செல்லும் மனைவியைப் பார்த்து, ஒரு அதிர்வும் காட்டாத கணவன் reaction -ஐ வைத்தே க்ளைமாக்ஸ்-ஐ சுலபமாகக் கணிக்க முடிகிறது.

காட்டுக்குள் நெல்லை மொழி பேசுகிறார்கள், ஆனால் அதற்கு சம்பந்தமில்லாத இராஜஸ்தான் ஸ்டைலில் கல்யாண ஆடம்பரங்கள் என படத்தில் out-of-place ஆக நிறைய குளறுபடிகள்..சுஜாதா இல்லாத குறையை நம்மால் சுலபமாகக் காண/ கேட்க முடிகிறது (உபாயம் : சுகாசினி). சமீபத்தில், யாரோ எழுதினார்கள் (சாருநிவேதிதா என நினைவு), மணிரத்னம் இப்போதெல்லாம் சர்வதேச பட விழாக்களுக்காகவும், வடஇந்தியாவுக்கும் தான் படமெடுக்கிறார் என்று. உண்மைதானோ எனத் தோன்றுகிறது, கலாச்சார முரண்கள் நிறையவே இருப்பதால். மணிரத்னம் இனிமேல் தமிழர்களுக்காகப் படம் எடுப்பதுதான்
அவருக்கும் நல்லது..!

மொத்தத்தில், அழகான ஒரு painting -ஐப் எதிர்பார்த்துப் பார்க்கப் போய், ஏதோ ஒரு collage -ஐப் பார்த்த மாதிரி இருக்கிறது..!!

===

Sunday, May 9, 2010

அன்னையர் தினம் 2010


இந்த வலைப் பூவை அன்னையர் தினத்தன்றுதான் ஆரம்பித்தேன் என்பதாலோ என்னவோ, வருடம் ஒருமுறை வரும் அன்னையர் தினத்துக்கு என் பதிவு தொடர்ந்து வருகிறது. இதோ இந்த வருடத்துக்கான பதிவு.

எனக்கு புதுக்கவிதையில் இருக்கும் அதே ஆர்வம் மரபுக் கவிதையிலும் உண்டு என்பதால், அவ்வப்போது எழுதுவது உண்டு. குறிப்பாக குறளிசை வெண்பா எழுதுவது மிகவும் பிடிக்கும். ஓரிரு முறை நேரிசை வெண்பாக்கள் எழுதியிருக்கிறேன். வெண்பா எழுதுவதற்கு, தமிழ் இலக்கணத்தில் பற்பல கட்டுக்கோப்புகள் உண்டு. அதாவது, நான்கு அடிகள் மட்டும் கொண்டிருக்கவேண்டும்; ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் (மட்டும்) கண்டிப்பாக இருத்தல் அவசியம். நான்காம் அடியில் மட்டும் மூன்று சீர்கள் மட்டுமே இருத்தல் வேண்டும்; அதுவும் மூன்றாவது சீர் ஒரு குறிப்பிட்ட அமைப்பில்தான் (நாள், மலர், காசு, பிறப்பு, குற்றம் என்பது போன்ற சீரமைப்பில்) பாடல் முடிதல் வேண்டும். "ஸ்..அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே.."-ன்னு அதற்குள் நினைத்துக்கொள்ளாதீர்கள். இன்னும் சில "அவசியங்கள்" வெண்பா இலக்கணத்தில் உண்டு. அதாவது, ஒவ்வொரு சீரும் அடுத்த சீருடன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் தான் சேரும். அதாவது, நாமெல்லாம் உயர்நிலைப் பள்ளியில் படித்த "நேர் நேர் தேமா.." போன்ற விதிகள் வருவது இங்குதான். அத்தோடு எதுகை மோனை குறித்த கட்டாயங்களும் உண்டு. சரி.. மேலும் வெண்பா எழுதும் சிரமங்களை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், விஷயத்துக்கு வருகிறேன் : இந்த வருட அன்னையர் தினத்துக்கு அடியேன் எழுதியிருப்பது ஒரு வெண்பாதான். மேலே உள்ள படத்தை "க்ளிக்" செய்து படிக்கவும். எனது குடும்ப மற்றும் நட்பு வட்டாரத்தில் எனக்குத் தெரிந்த அன்னையர்களுக்கு இந்த கவிதை கொடுத்து வாழ்த்தினேன். வருடா வருடம் அன்னையர் தினத்துக்கு நான் இப்படி ஏதாவது ஒன்று செய்வதன் மூலம், இல்லாத என் அம்மாவுக்கே வாழ்த்து தெரிவிக்கும் திருப்தி கிடைக்கிறது. வாழ்த்துகள்..!!

Monday, February 22, 2010

அவதார் - பிரமிப்பும் ஆச்சரியமும்

எனது கிண்டி கல்லூரித் தோழர்களிடம் அவ்வப்போது நான் பார்க்கும் படங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதுண்டு. சிலர் முழுக் கதையையும் விமர்சனம் என்ற பெயரில் சொல்லிவிடுவது எனக்கு உடன்பாடில்லாதது. எனவே, குறைந்த பட்ச விஷயங்களை மட்டும் கொண்டு ஒரு சிறு விமர்சனம் செய்வது என் வழக்கம். இங்கே "அவதார்" ஆங்கிலப் படம் குறித்த கடிதம்..
===
Friends,

ஜேம்ஸ் கேமரூனின் "அவதார்" வெளியாகி ஏறத்தாழ இரண்டு மாதம் ஆகியும் நேரமின்மையாலும், நான் விரும்பிய IMAX தியேட்டரில் நான் முயன்றபோது டிக்கெட் கிடைக்காததாலும் படம் பார்க்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. நேற்று ஒருவழியாய் எல்லாம் கைகூடி வர "அவதார்" பார்த்து விட்டேன். அதாவது "பாண்டோரா" என்னும் அந்த அதிசய உலகத்துக்குள் (சரியாகச் சொன்னால் ஒரு துணை கிரகம்) சென்று வந்து விட்டேன். இன்னமும் அந்த பிரமிப்பு குறையவில்லை. (பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தை பிறகு சொல்கிறேன்)

"அவதார்" ஒரு படம் என்பதைவிட அது ஒரு அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும். 12 வருட உழைப்பு ஒவ்வொரு Frame-மிலும் தெரிகிறது, பெரும்பாலும் இதுபோன்ற மெகா பட்ஜெட் படங்களுக்கு மகா குழப்பமான கதையமைப்பு இருக்கவேண்டும் என்பது ஒரு ஹாலிவுட் சம்பிரதாயம். இந்த படத்தில் அப்படியில்லை, எளிய கதைதான். குழப்பங்கள் இல்லை. ஆனால் நிறைய "உள்ளுரைகள்" (!) (அதாவது sub-texts) இருக்கின்றன. இயற்கையை பாரபட்சமின்றி சூறையாடும் மனிதரின் வேட்கையையும் அதே மனிதரில் சிலரிடம் மனிதம் இன்னமும் மிச்சமிருப்பதையும் வேற்றுக் கிரக சூழலில் அட்டகாசமாகச் சொல்லியிருக்கிறார் கேமரூன் (என்னைப் பொறுத்த வரை).

பாண்டோராவின் biologically networked ecosystem-மும் தொட்டால் ஒளிரும் பூக்கள், உயிரினங்கள், புல்தரைகள் என விதவிதமாக visual விளையாட்டுகளும் இயக்குனரின் கற்பனை வளத்தைப் பறைசாற்றுகின்றன. காட்சியமைப்பின் அழகிலும் பிரம்மாண்டத்திலும் லயித்து விட்டதால் நிறைய உரையாடல்களை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. குறைந்தது இரண்டு மூன்று முறையாவது பார்க்கவேண்டும் (தொழில் தந்திரம்?). கண்டிப்பாக IMAX-3D யில் பாருங்கள். பாண்டோரா சென்று வாருங்கள்..!

எனது ஆச்சரியம் : சுபாகர் உள்பட யாரும் இந்த படத்தைப் பற்றி இதுவரை எழுதவில்லை என்பதுதான். ஒருவேளை யாரும் பார்க்கவில்லையோ?

நட்புடன்,
-பகலவன்
===

Sunday, May 10, 2009

அன்னையர் தினம் 2009

அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது..!!

சென்ற வருடம் இந்த அன்னையர் தினத்தன்றுதான் (மே 10) இந்த வலைப்பூவை ஆரம்பித்தேன். அதற்குள் ஒரு வருடம் உருண்டோடிவிட்டது..!! இவ்வருடம் அன்னையர் தினத்துக்கு என் மனைவிக்கும் மற்றும் நாங்கள் நட்பு பாராட்டும் மற்ற அன்னையருக்கும் ஒரு வாழ்த்தெழுதி அளித்தேன். அந்த வாழ்த்தின் நகல்தான் மேலே இருப்பது.! படத்தின் மேலே சொடுக்கினால் பெரிதுபடுத்திப் பார்க்கலாம். நான் ரொம்ப செண்டிமென்டலா எழுதி இருக்குறதா நீங்க நெனச்சா, இதோ உங்களுக்காக சற்று லைட்டான version:

அன்னையர் தினமோ மே பத்து..
அன்னையை மறந்தால் ஆபத்து..!! :-))

வாழ்த்துகளுடன்,
-பகலவன்

Friday, October 3, 2008

நைனா குறள்..!

நைனா வகுப்புக்கு வந்தவுடன், தனது கைக்கடிகாரத்தைக் கழற்றி மேசையில் வைத்துவிட்டு, பாடத்தை ஆரம்பிப்பார். பொதுவாக, "இன்னைக்கு எந்த அத்தியாயம்" என்று கேட்டுவிட்டு, அந்த வரலாற்று குறிப்புகளை மிகவும் எளிதாகவும் கதைபோலவும் ருசிகரமாகச் சொல்வார். வருடங்கள் மற்றும் சம்பவங்களில் கோர்வை இருக்கும், அவர் பாடம் நடத்தும்போது. சரியாக 45 நிமிடங்களுக்குள் அனேகமாக அந்த அத்தியாயம் முடிக்கப்பட்டு விடும். நேரத்தைக் கச்சிதமாய் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சிறந்த ஆசிரியர் ஆவார் நைனா.

இப்படி நைனா பற்றி நினைவுகள் அதிகம். எல்லோராலும் "RR" என்று அழைக்கப்பட்ட அந்த நல்லாசிரியரின் மாணவனாய் அவருக்காக நான் எழுதிய குறட்பா இதோ:

"ஆராரோ ஆசான்கள் கற்பித்தா லுமெங்கள்
ஆரார்போல் யாரினி சொல்"

---

Sunday, August 24, 2008

நைனா நினைவு 5 : செயற்கை மழை

1970-களில் மழையின்றி வரண்டுபோக இருந்த தமிழகத்தைக் காக்க அப்போதைய முதல்வர் கலைஞர், "செயற்கை மழை"த் திட்டத்தைக் கொண்டு வந்தார். வெளிநாட்டுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்பட்ட திட்டம் அது. அப்போதெல்லாம் செயற்கை மழை குறித்த தகவல்கள் தினசரிகளிலும் வானொலியிலும் அடிக்கடி வந்து போகும். ஒருமுறை, நைனா வகுப்புக்கு வந்தவுடன், என்ன நினைத்தாரோ தெரியாது, "யாருக்காவது செயற்கை மழை எப்படி பொழிகிறது.. அதைப் பெய்விக்க என்ன வேதியல் பொருள் (Chemical) உபயோகிக்கிறார்கள் என்று தெரியுமா" என்று ஒரு பொது அறிவுக்கேள்வி வினவினார். அரசினர் உயர்நிலைப் பள்ளிகளில் எனக்குத் தெரிந்து பாடம் நடத்துவதே பெரிய விஷயம். அதிலும் பெரிது பொது அறிவுக்காக நேரம் ஒதுக்கி மாணவர்களை ஊக்குவிப்பது.

நைனா கேட்டவுடன், நான் (Current Affairs-களில் Upto date ஆக இருந்ததால்), உடனே கையை உயர்த்தினேன். வேறு யாருக்கும் அது பற்றி தெரிந்திருக்கவில்லை. நைனா பதிலைக் கேட்டார், நான், "சில்வர் ஐயோடைட் (Silver Iodide)"-டை விமானத்திலிருந்து மேகங்கள் மேல் தூவினால் செயற்கையாய் மழை வரும் என்று சொன்னதும் அவருக்கு என் பதிலில் மிகுந்த சந்தோஷமும் மற்ற மாணவர்களுக்கு அது தெரியவில்லையே என்னும் கோபமும் இருந்தது. "வேற ஒரு கம்மினாட்டிக்கும் இதப் பத்தி தெரியலையா..?" என்று தனக்கே உரித்தான பாணியில் மாணவர்களை வசைபாட, நானோ, அந்த "சில்வர் ஐயோடைட்" தூவப்பட்ட மேகங்கள் போலவே ஜில்லென்று மிதந்தேன், பெருமிதத்தில்..!

ஒரு tail piece : செயற்கை மழை பெய்விக்க முதலில் விமானங்கள் மூலம் மேகங்களைத் துரத்தி, விரட்டித் திரட்டுவார்கள் என்று வானொலியில் கேட்டதாகவும், அந்த பாதிப்பில்தான் எழுத்தாளர் சுஜாதா "மேகத்தைத் துரத்தியவன்" என்று தான் அப்போது எழுதிய ஒரு நாவலுக்குத் தலைப்பிட்டதாகவும் என் நினைவு. தவறான செய்தியாயிருந்தால் மன்னிக்கவும்.!

Monday, August 18, 2008

கண்ணதாசனின் காதல் தோல்விப் பாடல்கள் - ஒரு சிறு ஆய்வு

இந்த கட்டுரையை நான் 1998 -ல் தமிழ்த் திரைப்பாடல்களை அலசும் ஒரு இணையத் தளத்துக்காக எழுதினேன். இங்கு மறு பதிவு செய்கின்றேன் :

கவிஞர் கண்ணதாசனின் காதல் தோல்விப் பாடல்களை ஒரு நாள் அசைபோட்டுக்கொண்டிடுந்தேன். எனக்குள் ஒரு கேள்வி உதித்தது: "காதலுக்குத் தான் கண்ணில்லை என்பார்கள், ஆனால், காதல் தோல்விக்கு?" எனது கேள்விக்கான காரணம் இச்சிறு கட்டுரையில் புலப்படும்.

கண்ணதாசனின் காதல் தோல்விப்பாடல்கள் தமிழ்த்திரைப் பாடல்களில் நிறைய இருந்தாலும், நான் அதிகமாய் நேசிக்கும் (கீழ்க்காணும்) இப்பாடலில், "இந்த பாழாய்ப் போன கண்ணால்தானே காதல் வந்தது" என்று அவைகளைக் கடிந்து கொள்கிறார் கவிஞர். கண்களைக் கடிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், கடவுளையும் கடிந்து கொள்கிறார்:

கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே...
("எங்கே நிம்மதி.." பாடல், புதியபறவை படத்தில்)

என்று இறைவனையே பழிக்கும் கவிஞர், ஒருபடி மேலே போய், கண்களால் காதல் வித்திட்ட கடவுளுக்கு எந்த IPC -பிரிவில் தண்டனை கொடுப்பது என்று கேட்பதைப் பாருங்கள்:

கண்களின் தண்டனை காட்சி வழி..
காட்சியின் தண்டனை காதல் வழி..
காதலின் தண்டனை கடவுள் வழி..
கடவுளைத் தண்டிக்க என்ன வழி..

("இரண்டு மனம் வேண்டும்..", வசந்த மாளிகை படத்தில்)

கடவுளுக்கு என்ன தண்டனை வாங்கித் தருவது என்று யோசித்த கவிஞர், இந்தப் பாடலில், அவரே கடவுளுக்குத் தண்டனை தருகிறார்..! கடவுளுக்கே தண்டனையா என்றா கேட்கிறீர்கள்? காதல் தோல்வியால் கொழுந்து விட்டெரியும் இதயம் எல்லைகளைக் கடந்து புலம்புகின்றது:

எத்தனைப் பெண் படைத்தான்..
எல்லோர்க்கும் கண் படைத்தான்..
அத்தனை கண்களிலும்
ஆசையென்னும் விஷம் கொடுத்தான்..
:
:
அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று ஆடவைத்துப் பார்த்திருப்பேன்..
வருவான்..துடித்திடுவான்..பட்டதே போதுமென்பான்..

பாவி அவன் பெண்களையே
படைக்காமல் நிறுத்தி வைப்பான்..

("கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்..", வான்ம்பாடி படத்தில்)

இப்படியெல்லாம் கண்களை, காதலுக்கும் காதல் தோல்விக்கும் காரணம் காட்டிய கவிஞர், தன் நிலையிலிருந்து சற்றே இறங்கிவந்து, கண்களிடமே (ஒரு குழந்தையைப் போல்) கெஞ்சுவதைப் பாருங்கள். இந்தக் கெஞ்சல்கூட அடுத்து வரும் காதல் தோல்விகளைத் தவிர்க்க வேண்டியே என்று தெரிகிறது..

கண்களே..கண்களே..
காதல் செய்வதை விட்டு விடுங்கள்..
பெண்களே.. பெண்களே..
வாலிபரைக் கொஞ்சம் வாழவிடுங்கள்..

("வாழ்க்கைப் படகு" படத்தில்)

கடிந்து கொள்ளப் படுவது கண்களாக இருந்தாலும் சரி, அல்லது கடவுளாகவே இருந்தாலும் சரி, கடிந்து கொள்பவர் கண்ணதாசனாய் இருக்கும் பட்சத்தில், நமக்கு காவியங்களே அல்லவா கிடைத்து விடுகின்றன..! ஆம், இப்பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு காவியம் தான்..!!

Saturday, August 16, 2008

நைனா நினைவு 4 : இஜிரா என்றால் என்ன?

உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து தொடர்ந்து நன்கு படித்து முதல் ரான்க் -ஐத் தொடர்ச்சியாய் எடுத்து நல்ல மாணவன் என்று எல்லா ஆசிரியர்களும் சொல்லும்படி இருந்தவன் நான். அப்படி ஆசிரியர்கள் வழங்கும் வாழ்த்துரையைக் காட்டிலும் எனக்கு அதிக கர்வம் வருவது நைனா என் மேல் நம்பிக்கை வைத்து தேர்வுத்தாள் திருத்தித் தரப் பணிப்பது. அப்போது நாங்கள் வசித்துவந்த வடக்குமாட வீதியில் (வீட்டு இலக்கம் 24) பக்கத்து வீட்டில் சேஷு மாமா, அம்சா மாமி தம்பதியினர் வசித்து வந்தனர். அம்சா மாமி தமிழாசிரியை என்பதால் அவரும் அவ்வப்போது தேர்வுத்தாள் திருத்த உதவிடக் கோருவார். நானும் தமிழார்வம் கொண்டவன் என்பதால் என்னால் முடிந்தவரை படு சிரத்தையாகத் திருத்திக் கொடுப்பேன்.

அதேபோல் நைனா எடுக்கும் வகுப்புகளின் தேர்வுத்தாட்களையும் (அனேகமாக ஒன்பது அல்லது பத்தாவது வகுப்பு வரலாறு & புவியியல் பாடம்) சிரத்தையாகத் திருத்தி மதிப்பெண் இட்டுக் கொடுத்துவிடுவேன். இந்த வழக்கம் நான் ஒன்பதாவது படிக்கும் காலத்திலிருந்தே உண்டு, ஒவ்வொரு காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுக்குப் பிறகும். என் வகுப்புத் தேர்வுத்தாட்களை நைனா எப்போதுமே என்னிடமே திருத்தக் கொடுத்ததில்லை. (ஆனால், ஒருமுறை நைனாவின் தம்பி, வில்வலன் எனக்குத் தமிழாசிரியராக இருந்தபோது என்னுடைய தேர்வுத்தாளைத் தவிர மற்ற எல்லாவற்றையும் கொடுத்து திருத்தச் சொல்லியிருக்கிறார் என்பது வேறு விஷயம்). அப்படி திருத்தும்போது ஒரே கேள்விக்கு பலதரப்பட்ட மாணவர்களின் சொந்த சரக்குகள் மிகவும் ருசிகரமானவை.

அப்படி ஒருமுறை ஒன்பதாவது வகுப்பின் அரையாண்டுத் தேர்வுத்தாள் (வரலாறு & புவியியல்) திருத்தும் போது ஏற்பட்ட அனுபவம் இது: கேள்வித்தாளில் "இஜிரா என்றால் என்ன..?" என்று ஒரு கேள்வி கேட்கப் பட்டிருந்தது. "இஜிரா" என்பது முகம்மது நபிகள் மெக்காவிலிருந்து மெதினாவுக்கு இடம் பெயர்ந்த சம்பவத்தைக் குறிப்பது. அதை இசுலாமியர்கள் தங்கள் புத்தாண்டாக வளைகுடா நாடுகளில் கொண்டாடுவதாக நினைக்கிறேன். ஆங்கிலத்தில் "Hizira" என்று எழுதப் படும் இந்த சம்பவம் கேள்வித்தாளிலும் புத்தகங்களிலும், "இஜிரா" என்றுதான் குறிப்பிடப் பட்டிருக்கும். இந்த கேள்விக்கு ஒரு கிராமத்து மாணவனின் பதில் வித்தியாசமானது.

வடார்க்காடு மாவட்டத்துக்கே உரித்தான மொழிவளத்தில் பற்பல தூய தமிழ்ச்சொற்கள் வளைந்தும் நெளிந்தும் சிலசமயங்களில் கேட்கப் புதுமையாகவும் (உதாரணம் : பஸ் "பூட்ச்சா"ப்பா..?) இருக்கும். அப்படி வட்டார இடிபாடுகளில் சிக்கிய ஒரு வார்த்தை "இழு" (ஆங்கிலத்தில் "pull") என்பதாகும். அதை வடார்க்காடு கிராமவாசிகள் "இசி" என்று தமக்கே உரிய ஒலிவடிவம் கொடுத்து உச்சரிப்பார்கள். நான் குறிப்பிட்ட கிராமத்து மாணவன் அனேகமாக உழவு மற்றும் வயல்சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவனாய் இருந்திருக்கலாம். முதலில் அவனுக்கு, அந்த வார்த்தை ("இஜிரா") பற்றி வரலாற்றுச் சம்பவம் ஏதும் தெரிந்திருக்கவில்லை. இரண்டாவது, அந்த வார்த்தை சார்ந்து அவனுக்கு மிகவும் பழக்கமான வட்டார வழக்கு. கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த மாணவன் இப்படி பதில் எழுதியிருந்தான்: "மாட்டின் மூக்கணாங்கயிற்றை ஒருவர் ஒரு முனையில் பிடித்துக் கொண்டு மறு முனையை வேறொருவரிடம் கொடுத்து, "இசிரா" என்பார். அதுதான் "இசிரா" என்பதாகும்" ("இஜிரா" என்னும் வார்த்தைக்கு மிக அருகில் அவனுக்குத் தெரிந்தது "இழுடா" என்று பொருள் படும் "இசிரா" என்ற வடார்க்காடு கிராம வழக்குத்தொடர்தான் என்பதை கவனிக்க)

மேற்படி பதிலை படித்துவிட்டு, நான் விழுந்து விழுந்து சிரித்ததும் அந்தத் தாளை என் அப்பா, மற்றும் பலரிடம் காட்டியதும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. எல்லோருக்குமே சிரிப்பை வரவழைத்த பதில் அது. பிறகு எல்லாவற்றையும் திருத்தி முடித்ததும், நைனாவிடம் அதைக் காட்டினேன். அவரோ அம்மாணவனின் கற்பனைத் திறனைப் பாராட்டாமல், "மடையன்.. புத்தகத்தைப் படிக்கலன்னாலும் பரவாயில்ல.. நான் வகுப்புல சொல்லிக் குடுக்குறத கூடவா காதுகுடுத்து கேக்கக் கூடாது.. அந்தக் கழுதைக்கு fail mark தான் போடணும்" என்றார்.

அதன் பிறகு, நைனா கொடுக்கும் தேர்வுத்தாட்களை இன்னும் சிரத்தையாக வார்த்தைக்கு வார்த்தை வாசித்து மதிப்பிட ஆரம்பித்தேன். என்னையும் மீறி இஜிரா போல வேறு ஏதாவது நகைச்சுவையை நழுவ விடக் கூடாது என்பதால்.!!

நைனா நினைவு 3 : புது நோட்டுக்கு பழைய நோட்டு

நான் ஒன்பதாம் வகுப்பில் ஆரணி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, எனக்கு நைனாதான் வரலாறு மற்றும் புவியியல் ஆசிரியர். அவரின் இளவல் வில்வலன் (செல்லமாய் நாங்கள், "வில்லுப்பா" என்றுதான் அழைப்போம்) எனக்குத் தமிழ் ஆசிரியர். இருவரையும் நான் "சார்" போட்டு அழைத்ததில்லை. நைனாவை வகுப்பில் விளிக்கும்போதும் நான் "நைனா" என்றுதான் சொல்வேன். அவரும் அதைக் கண்டு கொள்ளமாட்டார். நான் "சார்" போட்டு அழைத்திருந்தாலும் அவருக்குப் பிடித்திருக்காது என்றே நினைக்கிறேன்.

வரலாறு / புவியியல் ஆசிரியர்களுக்கு வகுப்பில் பாடம் நடத்துவது ஒரு வேலை என்றால், ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் தத்தம் வகுப்பு மாணவர்களுக்கும் அரசு பாடத்திட்டத்தால் அங்கீகரிக்கப் பட்ட வரைபடப் புத்தகம் (Map Note Book) ஆர்டர் செய்து வாங்கி மாணவர்களிடம் காசுக்கு விநியோகம் செய்வது இன்னொரு வேலை. கடினமானதும் கூட. ஒன்பதாம் வகுப்பு வரைபடப் புத்தகத்தின் விலை ரூ 2.00 என்று நைனா வகுப்பில் எல்லோரிடமும் ஒரு மாதத்துக்கு முன்னமே சொல்லிவிட்டிருந்தார். நான் வீட்டில் அப்பாவிடம் பணம் கேட்டால் அவரோ "அப்புறம் தரேன்" என்று தன் வழக்கமான பாணியில் இழுத்தடித்தார். RR-தானே ஆசிரியர் என்று அவருக்குப் போக்குக்காட்ட அப்படி செய்தாரோ என்னவோ. பணம் கொடுக்கவேண்டிய கடைசிநாள் அன்று ஒரு வழியாய் நைந்துபோன இரண்டு ரூபாய்த் தாளை மதிய உணவுக்கு வீட்டுக்குப் போய்வரும்போது பெற்றுக்கொண்டு அதை அப்படியே சட்டைப்பையில் வைத்தபடி வகுப்புக்கு வந்துவிட்டேன். மதிய உணவுக்குப் பிறகு, முதல் வகுப்பு வரலாறு என்பதால் நைனா வந்தார். வந்ததும் முதல் வேலையாக வரைபடப்புத்தகத்துக்குப் பணம் கேட்கவும், நான் சட்டைப்பையில் பொட்டலமாய் வைத்திருந்த பணத்தை அப்படியே எடுத்து நைனாவிடம் கொடுத்தேன்.

அந்தத் தாள் எட்டு பத்து மடிப்புகளாக (செவ்வகமாக இருக்கவேண்டிய ரூபாய்த்தாளைச் சுருக்கி ஒரு சிறு சதுரமாய் மடித்து வைத்திருந்திருக்கிறேன்!) இருந்ததைக் கவனித்த நைனா, அதை "லாவகமாக"ப் பிரித்தெடுத்து "ஏண்டா..இப்படியாடா ஒரு பழைய நோட்ட பொட்டலமா மடிச்சு அத அப்படியே கொடுக்கிறது..? நான் இதப் பிரிக்கும்போது கிழிஞ்சிட்டா என்ன பண்றது..?" என மெல்லிய கோபத்தில் வினவவும், என் அறியாமையை நான் உணர்ந்தேன். அதிலிருந்து கிழிசல்களோடு இருக்கும் ரூபாய்த் தாளைப் பார்க்கையில் நைனா சொன்னது தான் நினைவுக்கு வரும்.