பாலு மகேந்திரா என்னும் ஒரு மகத்தான கலைஞனை
நினைக்கும்போதே பற்பல நிகழ்வுகள் மனதுக்குள் அழியாத கோலங்களாய் அலை மோதுகின்றன..
1979-ஆம் ஆண்டு நாம் கல்லூரியில் சேர்ந்த வருஷம் அழியாத கோலங்கள் வெளிவந்தது. அதில் சலீல் சவுத்ரி இசையமைத்து (கங்கை அமரன் எழுதிய) “பூ வண்ணம்.. போல நெஞ்சம்” என்ற பாடல் 1980-ல் அந்த படத்தைப் போலவே நம் பதின்ம வயது கனவுகளைக் கிளறி விட்டிருந்தது.. பின்பு அந்த படத்தை நம் விவேகானந்தா உள்ளரங்கிலேயே நாம் திரையிட்டுப் பார்த்ததே ஞாபகம். (சுபாகர் மட்டுமே தேதி, நேரம் மற்றும் இதர விவரங்களை எழுத முடியும்). அப்போது ஆரம்பித்தது பாலு மகேந்திரா என்னும் திரைக்கலைஞனை ஒரு இயக்குனராக ரசிக்கவும் , சிலாகிக்கவும், இன்னும் சொன்னால் போற்றவும்.. அழியாத கோலங்கள் Summer Of 42 -ன் பாதிப்பில் எடுக்கப் பட்டிருந்தாலும் அதை தமிழ்ச் சூழலுக்கு ஏற்பத்தழுவியிருந்த விதம் பாராட்டுக்குரியது.
எண்பதுகளில் மூடுபனியும் மூன்றாம் பிறையும் பாதிக்காத தமிழ் சினிமா விரும்பிகள் இருக்கவே முடியாது.. மூடுபனியில் ஷோபாவைக் கடத்தும் காட்சியை பாலு மகேந்திரா வைத்தெடுத்த காமிரா கோணம் “சவாலான காட்சிகளை குழப்பமில்லாமல் எடுப்பது எப்படி” என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். அதே படத்தில் இளையராஜாவின் “என் இனிய பொன் நிலவே” பாடல் படமாக்கப் பட்ட விதத்தில் பாலு மகேந்திராவின் காட்சி ரசனை தமிழ்த் திரையில் புது அழகியலை வெளிப்படுத்தியது.. (அந்த படத்தில் பாலு மகேந்திரா பிரதாப்புக்குக் குரல் கொடுத்திருப்பார்.. இறுதிக் காட்சியில்.. “மாமா.. அம்மா மாமா..” என்று ஒரு விதமான மாடுலெஷனில் அந்த உருக்கும் குரலைக் கேட்கையில் அதுவரை வில்லனாகவே நாம் பார்வையில் தெரியும் பிரதாப் கதாபாத்திரத்தின் மீது நமக்கு நியாயமான பரிதாபம் வந்துவிடும்..)
கல்லூரிக் காலங்களில் சிக்கனம் காரணமாக நான் பெரும்பாலும் படங்களை ஒரு முறைதான் பார்ப்பேன் (இரண்டாம் முறை பார்ப்பதற்கு பதில் வேறொரு புதுப் படம் பார்க்கலாமே என்னும் பொருளியல் சார்ந்த உணர்வும் கூட). என் கொள்கையை நான் விட்டுக் கொடுத்தது இரண்டு படங்களுக்குத் தான் : ஒன்று “முள்ளும் மலரும்” மற்றும் “மூன்றாம் பிறை”. நான் இந்த இரண்டு படங்களையும் இரண்டாம் முறை பார்த்ததே அதன் ஒளிப் பதிவுக்காகத்தான் என்பதை பதிவு செய்தே ஆகவேண்டும்.. இரண்டுமே ஒளியோவியங்கள்.. சொல்ல வார்த்தைகள் இல்லை..அதுவும் முழுக்கவே வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் இயற்கை வெளிச்சத்திலேயே படம் பிடிக்கப் பட்டவை..
1980-களில் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் அப்போது பிரபலமாயிருந்த (வட சென்னையைச் சேர்ந்த) ஓவியர் ஜே.பி.கிருஷ்ணா “கவர்னர் பீடி” விளம்பரங்களில் திரையுலக பிரபலங்களை ஓவியமாகத் தீட்டி நகரின் வெவ்வேறு இடங்களில் வைத்திருந்தார். நம்மில் நிறைய பேருக்கு நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். நம் பாலு மகேந்திராவின் சற்றே வித்தியாசமான தோற்றம் (கமேண்டோ தொப்பி, கறுப்புக் கண்ணாடி, கழுத்தில் ஸ்கார்ஃ ப்) ஜே.பி.கிருஷ்ணாவின் கவனம் ஈர்த்து இருக்கவேண்டும். பாலு மகேந்திராவின் ஓவியம் பெரிய உருவமாய் தீட்டப்பட்டு தி.நகர் ராஜகுமாரி தியேட்டருக்கு எதிரில் வைக்கப் பட்டிருந்தது. அதை ஒவ்வொரு முறை பாண்டி பஜார் பக்கம் போகும்போதெல்லாம் ரசித்திருக்கிறேன்..
அச்சமயத்தில் குமுதம் வார இதழில், கவர்னர் பீடி விளம்பரத்துக்காக வரையப்பட்ட அந்த ஓவியத்தைப் பற்றி பாலுவிடம் கேட்க அவர் சொன்ன பதில் சற்றே வெளிப்படையாய் இருந்தது..”படம் நன்றாயிருக்கிறது.. ஆனால் நான் உபயோகப் படுத்தாத பொருளுக்காக என் சித்திரத்தை வரைந்ததற்கு பதிலாக நான் உபயோகப் படுத்தும் நிரோத்துக்கு என் சித்திரம் பயன் பட்டிருந்தால் மகிழ்ந்திருப்பேன்” என்று பதில் சொல்லியிருந்தார்..! அதுதான் பாலு மகேந்திரா..(கமலின் ஆத்ம நண்பரல்லவா..).
இதே போல எண்பதுகளில் பாலு மகேந்திராவிடம் அப்போதைய பிற ஒளிப்பதிவாளர்களின் வழக்கமான - அழகியலற்ற - கண்களைச் சோர்வடையச் செய்யும் - சடார் சடாரென zoom lens-ஐ உபயோகப் படுத்தும் அணுகுமுறை பற்றி கேட்டபோது அவர் சிறிதும் தயங்காமல் “I don’t masturbate with zoom lens” என்று பேட்டியளித்தார்..!! அவருடைய வெளிப்படையான பேச்சு அவரின் தெளிவையும் தன்னம்பிக்கையையும் உரக்கச் சொன்னது..
மூன்றாம் பிறையின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத ஒரு சில இயக்குனர்கள் (AVM-ல் எண்பதுகளிலும் கட்டிங்-வெட்டிங்-ஓட்டிங் என்று தொழில் நுட்பத்தை அறுபதுகளிலேயே சுருக்கிகொண்டிருந்த பெரிசுகளாக இருக்கலாம்).. “மூன்றாம் பிறை போன்ற கலைப் படத்தை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம்.. அவரால் ஒரு சுத்தமான அக்மார்க் மசாலா படத்தை எடுத்து வெற்றி பெறச் செய்ய முடியுமா” என்று பாலு மகேந்திராவை உசுப்பிவிட அவர் அடுத்த படமாக “நீங்க தான கேட்டீங்க” என்று பொருள் படும் தலைப்பில் “நீங்கள் கேட்டவை” எடுத்தார்.. அதுவும் வெற்றிப்படமானது..!! அதைப் பற்றி பாலு மகேந்திரா பின்னாளில் ஒரு பெட்டியில் சொல்லியிருந்தார்.
1984-ல் நாம் ஐந்தாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் - வருடம் ஒருமுறை நடக்கும் TechoFes -க்கு பாலு மகேந்திராவை அழைக்க இருப்பதாய் பிரசிடெண்ட் இளங்கோவோ அல்லது சவுந்திரபாண்டியனோ நிகழ்ச்சிக்கு முன்னாள் இரவு சொல்ல.. உடனே பாலு மகேந்திராவின் கோட்டோவியம் ஒன்றை அவசரம் அவசரமாக வரைந்து நாலு வரிக் கவிதையோடு நம் விவேகா உள்ளரங்கில் அவர் பங்குபெற்ற நிகழ்ச்சி முடிந்ததும் நானும் அப்போது தமிழ் மன்றத்தில் என்னோடு பங்கேற்ற பா.இரவீந்திரனும் (நமக்கு அடுத்த செட்) போய் பார்த்து அவரின் கையெழுத்து வாங்கியது இன்னமும் செழுமையாய் நினைவில் உள்ளது..

நேற்று Facebook-கில் சாம்சன் ரவீந்திரனின் வீட்டுக்கு முன்பொரு முறை பாலு மகேந்திரா வந்திருந்த படத்தைப் பார்த்ததும் பரவசமாய் இருந்தது.
பாலு மகேந்திராவின் எல்லா படைப்புகளிலும் ஒரு நேர்மை இருக்கும் (தழுவல் படங்களில் மூலக்கதை என்று டைட்டிலில் போட்டிருப்பார்), சமூக உணர்வு, மனித உறவுகளின் பரிமாற்றங்கள் (கோகிலா, சந்தியாராகம்) , கோபதாபங்கள், ஏமாற்றங்கள் (வீடு) என்று வெவ்வேறு தளங்களில் அழகியலோடு சொன்ன அற்புதக் கலைஞன். ஒரு நல்ல படைப்பாளிக்கு வாசிப்பு அவசியம் என்று (நம் சுஜாதா சொன்னதைப் போலவே) நிரூபித்த இலக்கியவாதி.அந்த மேதையின் புகழ் ஓங்குக..!
No comments:
Post a Comment