Thursday, July 18, 2013

காவியக் கவிஞர் வாலிக்கு நினைவாஞ்சலி..




1980 ஆம் ஆண்டு நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவன்.. அப்போதெல்லாம் நல்ல ஒரு தமிழ் சினிமாப் பாடலை வானொலியில் கேட்கும்போதெல்லாம் "இது கண்ணதாசன்  எழுதியதாத் தான் இருக்கும்" என்று நானும் தமிழ் கூறும் நல்லுலகமும் தவறாகவே நினைத்து வந்திருக்கிறோம். அப்படித்தான் ஒரு நாள் விவிதபாரதியில் "நீங்கள் கேட்டவை" ஒலிபரப்பில் "உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும் " பாடலை (படம் : இதயத்தில் நீ ) ஒலிபரப்பினார்கள்... நானும் அந்த பாடலின்  இசையிலும் அர்த்தத்திலும் மெய் மறந்து ரசித்து, "கண்ணதாசனா கொக்கா.. என்னமா எழுதியிருக்காருய்யா" என்று மனசுக்குள் சொல்லி முடிக்கும் முன், "இந்த பாடலை எழுதியது கவிஞர் வாலி" என்று விவிதபாரதி அறிவித்தது... நான் எதிர் பார்த்திராத கவிஞரின் பெயரைக் கேட்டதில் எனக்கு பெருத்த குழப்பமும்  "வாலி இப்படியெல்லாம் கூட எழுதுவாரா" என்று ஆச்சரியமும்.. இதுபோல் எத்தனை பாடல்களை நான் தவறாக கண்ணதாசன் எழுதியது என்று நினைத்திருந்திருப்பேனோ என்று  அன்று உணர்ந்து வாலி எழுதிய திரைப்பாடல்கள் பவற்றை தேடிக் கண்டுபிடித்து கேட்டு ரசிக்கலானேன்..
அன்று முதல் நான் கவிஞர் வாலியின் ரசிகனின் என்றால் அது மிகை இல்லை..

எண்பதுகளில் நான் தேடிப் படித்து வாசித்த எழுத்தாளர் சுஜாதாவின் "ஸ்ரீ ரங்கத்து தேவதைகள்"-ல் கவிஞர் வாலிக்கும் தனக்கும் ஒரே பேர் (ரங்கராஜன்) மற்றும் ஒரே ஊர் (ஸ்ரீ ரங்கம்) என்று சுஜாதா எழுதியிருந்த்ததைப்  படித்தபோது எதனாலென்று தெரியாமல் உள்ளம் பூரித்தது.. பேர் ராசியோ என்னவோ இந்த இரண்டு ரங்கராஜன்களும் என்னைப் பாதித்தவர்கள்..!! 


வாலி எழுதியவை எத்தனையோ  ஆயிரம் பாடல்கள்.. அவற்றில் எத்தனையோ முத்துக்கள்..  இதயத்தில் நீ, படகோட்டி, கற்பகம் போன்ற படங்களில் அனைத்து பாடல்களையும் (கண்ணதாசன் கோலோச்சிய அதே நேரத்தில்) வாலி எழுதினார்.. இணையத்து ஆரம்ப நாட்களில் தமிழ் சினிமா பாடல்கள் பக்கத்துக்காக வாலியின் பாடல்களிலிருந்து சிலவற்றை மட்டும் எடுத்து "கவிஞர் வாலியின் கல்வெட்டு வரிகள்" என்ற தலைப்பில் ஒரு பதிவு  இட்டிருந்தேன். (http://tfmpage.com/forum/16029.13209.22:45:09.html) அந்தக்  கட்டுரையின் சில பகுதிகள் இதோ:

நிலையாமை:
"உறவு என்றொரு சொல்லிருந்தால்..
 பிரிவு என்றொரு பொருளிருக்கும்..
 காதல் என்றொரு கதையிருந்தால்
 கனவு என்றொரு முடிவிருக்கும்.."

(படம் : இதயத்தில் நீ)

மூப்பு:
"கடந்த காலமோ திரும்புவதில்லை..
 நிகழ் காலமோ.. விரும்புவதில்லை..
 எதிர்காலமோ.. அனுபவமில்லை..
 இதுதானே.. அறுபதின் நிலை.."

(பாடல் : "" உனக்கென்ன குறைச்சல்.."  படம் : வெள்ளி விழா)

பிரிவாற்றாமை:
"பிறையில் வளர்வதும்..
 பிறகு தேய்வதும்.. ஒரே நிலவு..
 உறவில் கலப்பதும்..
 பிரிவில் தவிப்பதும் ஒரே மனது.."

(பாடல் : " நானே நானா.. யாரோதானா .."  படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

காதல்:
"காலடி தாமரை..
 நாலடி நடந்தால்..
காதலன் உள்ளம் புண்ணாகும்.. இந்தக்
காதலன் உள்ளம் புண்ணாகும்.."

(பாடல் : " பவளக் கொடியிலே.."  படம் : பணம் படைத்தவன்)

"மாலையில் சந்தித்தேன்..
 மையலில் சிந்தித்தேன்..
 மங்கை நான் கன்னித்தேன்..
 காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்.."

(பாடல் : " தாமரைக் கன்னங்கள்.."  படம் : எதிர் நீச்சல்)

பொதுவுடைமை:
"இல்லை என்போர் இருக்கையிலே..
 இருப்பவர்கள்.. இல்லை என்றார்..
 மடி நிறைய பொருளிருக்கும்...
 மனம் நிறைய  இருளிருக்கும்..
 எது வந்த போதும்
 பொதுவென்று வைத்து
 வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்.."

(பாடல் : "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.." படம் : படகோட்டி)

இல்(லாத) வாழ்க்கை:
"தாமரை மேலே.. நீத்துளி போல்..
 தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன..
 நண்பர்கள் போலே.. வாழவதற்கு
 மேளமும் தாலியும் தேவையென்ன.."

(பாடல் : " ம ன்றம் வந்த தென்றலுக்கு.."  ப டம் : மௌன ராகம்)

சித்தாந்தம்:
"அப்பனென்றும் அம்மையென்றும்..
 ஆணும் பெண்ணும் கொட்டி வைத்த
 குப்பையாக வந்த உடம்பு.. ஞானப்பெண்ணே..
அதில்
சித்தனென்றும் புத்தனென்றும் பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப் போகும் கரும்பு..

பந்த பாசச் சேற்றில் வந்தது வீழ்ந்த தேகம்..
எந்த கங்கை ஆற்றில்
இந்த அழுக்கு போகும்.."

(படம் : குணா)

நம்பிக்கையூட்டல்:
"எங்கே கால் போகும்.. போகவிடு..
 முடிவைப் பார்த்துவிடு..
காலம் ஒருநாள் கை கொடுக்கும்..
அதுவரை பொறுத்துவிடு.."

(பாடல் :  " நெஞ்சிருக்கும் எங்களுக்கு.." படம் : நெஞ்சிருக்கும் வரை) 

பிரிவுத்துயர்:
"கண்ணை விட்டுப் போனாலும்..
 கருத்தை விட்டுப் போகவில்லை..
 மண்ணை விட்டுப் போனாலும்..
 உன்னை விட்டுப் போகவில்லை.."

(பாடல் : " மன்னவனே அழலாமா.."  படம் : கற்பகம்)

உண்மையைச் சொன்னால், இந்த வரிசையிலும் தலைப்புகளிலும் கவிஞர் வாலியின் கணக்கற்ற பாடல்களைச் சேர்க்கலாம்..."மாதவிப் பொன்மயிலாள்  தோகை விரித்தாள்.." (படம் : இருமலர்கள்) "கண்ணன் வருவான் கதை சொல்லுவான்.. வண்ண வண்ணத் தொட்டிலிலே தாலாட்டுவான்.." "அவளுக்கும் அமுதென்று பேர்.." (படம் : பஞ்சவர்ணக் கிளி) " உனக்கென்ன மேலே நின்றாய்.. ஓ..நந்தலாலா." (படம் : சிம்லா ஸ்பெஷல்) "உன்ன நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்.. தங்கமே ஞானத் தங்கமே.." (படம் : அபூர்வ சகோதரர்கள்  இப்படி ஆயிரக்கணக்கான பாடல் வரிகளின் சொந்தக்காரர் வாலி.

புதுக் கவிதையிலும் அவர் பெரும் சாதனையாளர்.. அவரது சொல் வீச்சுக்கள் மற்றும் சிலேடை நயம் இவையெல்லாம் அவரது "பாண்டவர் பூமி" யிலும் "அவதார புருஷனிலும் " அட்டகாசமாக அமைந்திருக்கும்.. வாலியின் புதுக்கவிதை வீச்சின் பாதிப்பில் எனது புதுக்கவிதையின் வடிவம் மாறிப்போனதை தனியாக எழுதவேண்டும்..

கவிஞர் வாலியின் புத்தகம் "வாலிப வாலி" சென்றாண்டு வெளிவந்தது.. அதில் கவிஞரின் அனுபங்கள் மற்றும் பாடல் துணுக்குகள் என்று நிறைய செய்திகள் இருந்த்தது.. ஏரத்தாழ 600 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தை ஒரே மூச்சில் ஒரு சனிக்கிழமை படித்து முடித்தேன்.. அதைப் படித்தபின் வாலியைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் மிக உயரத்துக்கு சென்றுவிட்டது.. 

அதன் கடைசிப் பக்கத்தில் நான் என் கையெழுத்தில் கவிஞர் வாலியைப் பற்றி எழுதிருந்தேன்... இதோ:



எண்பத்திரண்டு வயது வாலியின் மறைவு காலத்தின் கட்டாயம்தானென்று சுலபமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை.. எல்லா தலைமுறைகளுக்கும் கவிதை எழுதிய வாலிக்கு அவர் பாடல்களில் லயித்து அனுபவிப்பதை விட வேறு எப்படி அஞ்சலி செய்வதென்று தெரியவில்லை..