நண்பன் ராஜ்குமார் மறைந்து அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது. இந்த வாரம் (பிப்ரவரி 20) ராஜ்குமாரின் முதலாண்டு நினைவு நாள்.
Tuesday, February 15, 2022
ஒரு ஊரில் ஒரு இராஜகுமாரன்..
Thursday, September 3, 2020
வசந்த(ன்) நினைவுகள்..
இரு தினங்களுக்கு முன் (செப்டம்பர் 1), எங்களது ஆரணி பள்ளி நண்பர்கள் கொண்ட WhatsApp குழுமத்தில், நண்பன் வசந்தன் பெயரில் ஒரு பதிவு வந்தது. குளிர்ப்பெட்டியில் வைக்கப்பட்ட ஓர் உடலின் மங்கலான படமும் அதன் கீழே "Appa Death" என்ற அரைகுறை குறிப்போடும். நானும் மற்ற நண்பர்களும், தந்தையை இழந்த வசந்தனுக்கு இரங்கல் செய்தி பதிவிட்டிருந்தோம்...
நேற்று ஆரணியிலேயே வசிக்கும் எங்கள் குழுமத்து நண்பர்கள் கிருஷ்ணலிங்கம் மற்றும் ராஜாமணி இருவரும் ஒரு அதிர்ச்சிகரமான பதிவிட்டிருந்தார்கள் : இறந்தது வசந்தனின் தந்தையல்ல, வசந்தன் தானென்று.. வசந்தனின் மகனோ மகளோ வசந்தனின் கைப்பேசியிலிருந்து வசந்தன் பெயரில் முதல் பதிவையிட்டிருக்கக் கூடும்... இறந்தது வசந்தன் தான் எனத் தெரிந்தவுடன் எனக்குப் பேரதிர்ச்சி.. நேற்றிலிருந்து வசந்தனின் நினைவலைகள் வந்து வந்து போக, அவற்றை முடிந்தவரை இங்கே பதிவிடுகின்றேன்..
வசந்தன் எங்களோடு ஆறாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி வரை படித்த வகுப்புத் தோழன். பழகுவதற்கு மிகவும் இனிமையானவன்.. ஆரணிக்கு அருகேயுள்ள இராட்டினமங்கலம் கிராமத்திலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு வருவான்.
குடும்ப வேண்டுதலோ வேறு காரணமோ தெரியவில்லை, பள்ளிக்கு வந்தது முதல் நீண்ட தலைமுடியோடு எண்ணெய் தடவி சீராக வாரி இரு புறமும் ரிப்பன் வைத்துப் பின்னிய இரட்டை சடையோடு காட்சியளிப்பான். அதனால் வசந்தனுக்கு "குடுமி நாதன்" என்றும் கிராமத்துப் பெயரை வைத்து "இராட்டின மங்கலத்தான்" என்றும் காரணப் பெயர்கள் உண்டு.
எனக்குத் தெரிந்து எங்கள் வகுப்பிலிருந்த மற்ற நண்பர்கள் (குறிப்பாக வசந்தகுமார், மகாதேவன், சேகர், ஷண்முகம்) வசந்தனை இந்த இரண்டு பேர்களில் ஒன்றை வைத்துத்தான் அழைப்பார்கள்.. வசந்தன் ஆரம்பத்தில் சிறிது கோபம் கொண்டாலும் பின்பு நட்பைப் புரிந்துகொண்டு அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.. மிகவும் தோழமையோடு பழகுபவனாகவே இருந்தான்.
ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது அதுவரை எனக்கு நெருக்கமாயிருந்த வசந்தகுமாருக்கும் எனக்கும் ஏதோ மனத்தாங்கல் வந்து இருவரும் ஒருவரோடொருவர் சிலகாலம் பேசாமல் இருந்தோம். அந்த இடைவெளியில் வசந்தன் என்னோடு அதிகம் பழக ஆரம்பித்தான்.. ஒரு முறை கார்த்திகேயன் திரையரங்கத்தில் "மன்னாதி மன்னன்" என்ற எம்.ஜி.ஆர் நடித்த பழைய படம் பார்த்துவிட்டு வந்து எனக்கு "கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ.." பாடலை சிலாகித்து வகுப்பு மேசையில் தாளமிட்டுப் பாடியது நினைவில் உள்ளது.. அப்பாடலை எனக்கு வசந்தன் தான் அறிமுகப் படுத்தினான் என்று சொல்ல வேண்டும்.
வசந்தன் மற்றும் (போலீஸ்காரர் மகன்) ரவி, சாந்தகுமார் ஆகியோரோடு திரைப்படப் பெயர் கண்டுபிடிக்கும் விளையாட்டை விளையாடுவோம். முதலில் ஒருவர் தான் மனதுக்குள் நினைத்திருக்கும் திரைப்படத்தின் முதலெழுத்தைச் சொல்ல அடுத்தவர், இரண்டாம் எழுத்து, அதற்கடுத்தவர் மூன்றாம் எழுத்தென என ஒரு வட்டத்தில் இந்த கணிப்பு நடக்கும்.. கடைசி எழுத்து யாருடன் முடிகிறதோ அவர் ஆட்டத்திலிருந்து அகற்றப்பட்டு மீதியுள்ளவர்கள் ஆட்டத்தைத் தொடர்வர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அடுத்தடுத்து கணிக்கும் எழுத்துகளால், ஆரம்பித்தவர் நினைத்த படமும் இறுதியாக கணிக்கப்படத் திரைப்படமும் வெவ்வேறாக அமைந்துவிடும்.. இந்த விளையாட்டில் ரவியும் வசந்தனும் கில்லாடிகள்.. தாம் தப்பிக்க (யாரும் கேள்விப்படாத) ஒரு புதுப்பெயரை அறிவித்து அடாவடி செய்வார்கள்.! அது ஒரு இனிமையான காலம்.!
வசந்தனின் தந்தையார் சில சமயங்களில் வசந்தனை பள்ளிக்கு அழைத்து வருவார். அவர் நல்ல உயரம். பார்ப்பதற்கு காங்கிரஸ்காரர் போல் முழங்கை வரை சட்டையணிந்து வெண்ணிற புருவங்கள் கொண்டவராக இருப்பார். எல்லா மாணவர்களோடும் உரையாடுவார். வசந்தனின் தம்பி ரஞ்சன் என் தம்பி முகிலனோடு ஒரே வகுப்பில் பயின்றவன். ஒரே ஒருமுறை நான் (வசந்தகுமாருடனா அல்லது மகாதேவனுடனா என நினைவில் இல்லை) சைக்கிளில் இராட்டின மங்கலம் சென்று வந்திருக்கிறேன். பசுமையான கிராமம். அதன்பின் செல்ல வாய்ப்பு கிட்டவேயில்லை.
ஏழாம் வகுப்பின் இறுதியில், ஒரு சுபயோக சுபதினத்தில் வசந்தனின் சடைமுடி வெட்டப்பட்டு ரெகுலர் கிராப்பில் மற்ற பிள்ளைகள் போல் காட்சியளித்தான். ஆனாலும் நண்பர்கள் "குடுமி நாதன்" என்ற பட்டப்பெயரை விடவேயில்லை. வசந்தனும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..! பள்ளிப் பருவம் முடிந்து நான் கல்லூரிக்கு சென்னை சென்றுவிட்ட பிறகு வசந்தனைப் பார்ப்பது அரிதானது. வசந்தனும் வேலூரிலோ அல்லது செய்யாற்றிலோ கல்லூரிக்குச் சென்றான். பள்ளிகாலம் முடிந்த பின்பும் நானும் மற்ற நண்பர்களும் ஒன்று கூடி படம் பார்க்கச் செல்வது உண்டு.. வசந்தன் எங்களோடு படம் பார்க்க வந்ததாய் எனக்கு ஞாபகம் இல்லை..
நான் பணி நிமித்தம் பெங்களூர் சென்று விட்ட பின்பு, 1984-லிருந்து 1990 வரை ஆரணி வரும்போது நிறைய தடவை வசந்தனை பஜார் ரோட்டில் பார்த்துப் பேசியிருக்கிறேன். பிறிதொரு முறை வசந்தபவன் எதிரில் பேருந்து நிலையத்தை ஒட்டிய ஒரு கட்டிடத்தில் ஒரு கடை நடத்திக் கொண்டிருந்தான். ஸ்வீட் ஸ்டால் என்றும் நினைவு. பேருந்து நிலையம் சென்று வருகையில் நலம் விசாரித்துக் கொள்வது உண்டு..
எங்கள் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக பல ஆண்டுகளுக்குப் பின் (ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின்) கடந்த வருடம் டிசம்பரில் மீண்டும் நேரில் சந்தித்து நினைவுகளில் மூழ்கிய அந்த நிகழ்ச்சிக்கு வசந்தன் வரவில்லை.. யாருடனும் தொடர்பில் இல்லை என்று மட்டும் எனக்குப் புரிந்தது.
பின்பு எங்கள் WhatsApp குழுமம் ஆரம்பித்து சில மாதங்கள் கழித்து வசந்தன் குழுமத்தில் இணைந்தது எனக்குப் பெருமகிழ்ச்சியாய் இருந்தது.. இருந்தும் கடைசிவரை அவனோடு உரையாடவே இயலவில்லை என்பது வேதனை.
தொடர்பில் இருந்தாலும் இல்லாமல் போனாலும், வசந்தன் எங்களுக்கு ஒரு நல்ல, இனிய நண்பன். இந்த நடுத்தர வயதில் இன்னமும் பார்க்க, சாதிக்க நிறைய இருக்கும் இக்கட்டத்தில் மறைந்துவிட்ட வசந்தனின் ஆன்மா அமைதியுற இயற்கையை இறைஞ்சுகிறேன்..
Wednesday, March 18, 2015
அப்பா

Tuesday, January 13, 2015
கே.பாலச்சந்தர் (கேபி) நினைவுச் சிதறல்கள்
Friday, February 14, 2014
பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் alias பாலு மகேந்திரா - சில நினைவுகள்
பாலு மகேந்திரா என்னும் ஒரு மகத்தான கலைஞனை
1979-ஆம் ஆண்டு நாம் கல்லூரியில் சேர்ந்த வருஷம் அழியாத கோலங்கள் வெளிவந்தது. அதில் சலீல் சவுத்ரி இசையமைத்து (கங்கை அமரன் எழுதிய) “பூ வண்ணம்.. போல நெஞ்சம்” என்ற பாடல் 1980-ல் அந்த படத்தைப் போலவே நம் பதின்ம வயது கனவுகளைக் கிளறி விட்டிருந்தது.. பின்பு அந்த படத்தை நம் விவேகானந்தா உள்ளரங்கிலேயே நாம் திரையிட்டுப் பார்த்ததே ஞாபகம். (சுபாகர் மட்டுமே தேதி, நேரம் மற்றும் இதர விவரங்களை எழுத முடியும்). அப்போது ஆரம்பித்தது பாலு மகேந்திரா என்னும் திரைக்கலைஞனை ஒரு இயக்குனராக ரசிக்கவும் , சிலாகிக்கவும், இன்னும் சொன்னால் போற்றவும்.. அழியாத கோலங்கள் Summer Of 42 -ன் பாதிப்பில் எடுக்கப் பட்டிருந்தாலும் அதை தமிழ்ச் சூழலுக்கு ஏற்பத்தழுவியிருந்த விதம் பாராட்டுக்குரியது.
எண்பதுகளில் மூடுபனியும் மூன்றாம் பிறையும் பாதிக்காத தமிழ் சினிமா விரும்பிகள் இருக்கவே முடியாது.. மூடுபனியில் ஷோபாவைக் கடத்தும் காட்சியை பாலு மகேந்திரா வைத்தெடுத்த காமிரா கோணம் “சவாலான காட்சிகளை குழப்பமில்லாமல் எடுப்பது எப்படி” என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். அதே படத்தில் இளையராஜாவின் “என் இனிய பொன் நிலவே” பாடல் படமாக்கப் பட்ட விதத்தில் பாலு மகேந்திராவின் காட்சி ரசனை தமிழ்த் திரையில் புது அழகியலை வெளிப்படுத்தியது.. (அந்த படத்தில் பாலு மகேந்திரா பிரதாப்புக்குக் குரல் கொடுத்திருப்பார்.. இறுதிக் காட்சியில்.. “மாமா.. அம்மா மாமா..” என்று ஒரு விதமான மாடுலெஷனில் அந்த உருக்கும் குரலைக் கேட்கையில் அதுவரை வில்லனாகவே நாம் பார்வையில் தெரியும் பிரதாப் கதாபாத்திரத்தின் மீது நமக்கு நியாயமான பரிதாபம் வந்துவிடும்..)
கல்லூரிக் காலங்களில் சிக்கனம் காரணமாக நான் பெரும்பாலும் படங்களை ஒரு முறைதான் பார்ப்பேன் (இரண்டாம் முறை பார்ப்பதற்கு பதில் வேறொரு புதுப் படம் பார்க்கலாமே என்னும் பொருளியல் சார்ந்த உணர்வும் கூட). என் கொள்கையை நான் விட்டுக் கொடுத்தது இரண்டு படங்களுக்குத் தான் : ஒன்று “முள்ளும் மலரும்” மற்றும் “மூன்றாம் பிறை”. நான் இந்த இரண்டு படங்களையும் இரண்டாம் முறை பார்த்ததே அதன் ஒளிப் பதிவுக்காகத்தான் என்பதை பதிவு செய்தே ஆகவேண்டும்.. இரண்டுமே ஒளியோவியங்கள்.. சொல்ல வார்த்தைகள் இல்லை..அதுவும் முழுக்கவே வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் இயற்கை வெளிச்சத்திலேயே படம் பிடிக்கப் பட்டவை..
1980-களில் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் அப்போது பிரபலமாயிருந்த (வட சென்னையைச் சேர்ந்த) ஓவியர் ஜே.பி.கிருஷ்ணா “கவர்னர் பீடி” விளம்பரங்களில் திரையுலக பிரபலங்களை ஓவியமாகத் தீட்டி நகரின் வெவ்வேறு இடங்களில் வைத்திருந்தார். நம்மில் நிறைய பேருக்கு நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். நம் பாலு மகேந்திராவின் சற்றே வித்தியாசமான தோற்றம் (கமேண்டோ தொப்பி, கறுப்புக் கண்ணாடி, கழுத்தில் ஸ்கார்ஃ ப்) ஜே.பி.கிருஷ்ணாவின் கவனம் ஈர்த்து இருக்கவேண்டும். பாலு மகேந்திராவின் ஓவியம் பெரிய உருவமாய் தீட்டப்பட்டு தி.நகர் ராஜகுமாரி தியேட்டருக்கு எதிரில் வைக்கப் பட்டிருந்தது. அதை ஒவ்வொரு முறை பாண்டி பஜார் பக்கம் போகும்போதெல்லாம் ரசித்திருக்கிறேன்..
அச்சமயத்தில் குமுதம் வார இதழில், கவர்னர் பீடி விளம்பரத்துக்காக வரையப்பட்ட அந்த ஓவியத்தைப் பற்றி பாலுவிடம் கேட்க அவர் சொன்ன பதில் சற்றே வெளிப்படையாய் இருந்தது..”படம் நன்றாயிருக்கிறது.. ஆனால் நான் உபயோகப் படுத்தாத பொருளுக்காக என் சித்திரத்தை வரைந்ததற்கு பதிலாக நான் உபயோகப் படுத்தும் நிரோத்துக்கு என் சித்திரம் பயன் பட்டிருந்தால் மகிழ்ந்திருப்பேன்” என்று பதில் சொல்லியிருந்தார்..! அதுதான் பாலு மகேந்திரா..(கமலின் ஆத்ம நண்பரல்லவா..).
இதே போல எண்பதுகளில் பாலு மகேந்திராவிடம் அப்போதைய பிற ஒளிப்பதிவாளர்களின் வழக்கமான - அழகியலற்ற - கண்களைச் சோர்வடையச் செய்யும் - சடார் சடாரென zoom lens-ஐ உபயோகப் படுத்தும் அணுகுமுறை பற்றி கேட்டபோது அவர் சிறிதும் தயங்காமல் “I don’t masturbate with zoom lens” என்று பேட்டியளித்தார்..!! அவருடைய வெளிப்படையான பேச்சு அவரின் தெளிவையும் தன்னம்பிக்கையையும் உரக்கச் சொன்னது..
மூன்றாம் பிறையின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத ஒரு சில இயக்குனர்கள் (AVM-ல் எண்பதுகளிலும் கட்டிங்-வெட்டிங்-ஓட்டிங் என்று தொழில் நுட்பத்தை அறுபதுகளிலேயே சுருக்கிகொண்டிருந்த பெரிசுகளாக இருக்கலாம்).. “மூன்றாம் பிறை போன்ற கலைப் படத்தை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம்.. அவரால் ஒரு சுத்தமான அக்மார்க் மசாலா படத்தை எடுத்து வெற்றி பெறச் செய்ய முடியுமா” என்று பாலு மகேந்திராவை உசுப்பிவிட அவர் அடுத்த படமாக “நீங்க தான கேட்டீங்க” என்று பொருள் படும் தலைப்பில் “நீங்கள் கேட்டவை” எடுத்தார்.. அதுவும் வெற்றிப்படமானது..!! அதைப் பற்றி பாலு மகேந்திரா பின்னாளில் ஒரு பெட்டியில் சொல்லியிருந்தார்.
1984-ல் நாம் ஐந்தாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் - வருடம் ஒருமுறை நடக்கும் TechoFes -க்கு பாலு மகேந்திராவை அழைக்க இருப்பதாய் பிரசிடெண்ட் இளங்கோவோ அல்லது சவுந்திரபாண்டியனோ நிகழ்ச்சிக்கு முன்னாள் இரவு சொல்ல.. உடனே பாலு மகேந்திராவின் கோட்டோவியம் ஒன்றை அவசரம் அவசரமாக வரைந்து நாலு வரிக் கவிதையோடு நம் விவேகா உள்ளரங்கில் அவர் பங்குபெற்ற நிகழ்ச்சி முடிந்ததும் நானும் அப்போது தமிழ் மன்றத்தில் என்னோடு பங்கேற்ற பா.இரவீந்திரனும் (நமக்கு அடுத்த செட்) போய் பார்த்து அவரின் கையெழுத்து வாங்கியது இன்னமும் செழுமையாய் நினைவில் உள்ளது..

நேற்று Facebook-கில் சாம்சன் ரவீந்திரனின் வீட்டுக்கு முன்பொரு முறை பாலு மகேந்திரா வந்திருந்த படத்தைப் பார்த்ததும் பரவசமாய் இருந்தது.
பாலு மகேந்திராவின் எல்லா படைப்புகளிலும் ஒரு நேர்மை இருக்கும் (தழுவல் படங்களில் மூலக்கதை என்று டைட்டிலில் போட்டிருப்பார்), சமூக உணர்வு, மனித உறவுகளின் பரிமாற்றங்கள் (கோகிலா, சந்தியாராகம்) , கோபதாபங்கள், ஏமாற்றங்கள் (வீடு) என்று வெவ்வேறு தளங்களில் அழகியலோடு சொன்ன அற்புதக் கலைஞன். ஒரு நல்ல படைப்பாளிக்கு வாசிப்பு அவசியம் என்று (நம் சுஜாதா சொன்னதைப் போலவே) நிரூபித்த இலக்கியவாதி.அந்த மேதையின் புகழ் ஓங்குக..!
Thursday, July 18, 2013
காவியக் கவிஞர் வாலிக்கு நினைவாஞ்சலி..
வாலி எழுதியவை எத்தனையோ ஆயிரம் பாடல்கள்.. அவற்றில் எத்தனையோ முத்துக்கள்.. இதயத்தில் நீ, படகோட்டி, கற்பகம் போன்ற படங்களில் அனைத்து பாடல்களையும் (கண்ணதாசன் கோலோச்சிய அதே நேரத்தில்) வாலி எழுதினார்.. இணையத்து ஆரம்ப நாட்களில் தமிழ் சினிமா பாடல்கள் பக்கத்துக்காக வாலியின் பாடல்களிலிருந்து சிலவற்றை மட்டும் எடுத்து "கவிஞர் வாலியின் கல்வெட்டு வரிகள்" என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டிருந்தேன். (http://tfmpage.com/forum/16029.13209.22:45:09.html) அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் இதோ:
நிலையாமை:
"உறவு என்றொரு சொல்லிருந்தால்..
பிரிவு என்றொரு பொருளிருக்கும்..
காதல் என்றொரு கதையிருந்தால்
கனவு என்றொரு முடிவிருக்கும்.."
(படம் : இதயத்தில் நீ)
மூப்பு:
"கடந்த காலமோ திரும்புவதில்லை..
நிகழ் காலமோ.. விரும்புவதில்லை..
எதிர்காலமோ.. அனுபவமில்லை..
இதுதானே.. அறுபதின் நிலை.."
(பாடல் : "" உனக்கென்ன குறைச்சல்.." படம் : வெள்ளி விழா)
பிரிவாற்றாமை:
"பிறையில் வளர்வதும்..
பிறகு தேய்வதும்.. ஒரே நிலவு..
உறவில் கலப்பதும்..
பிரிவில் தவிப்பதும் ஒரே மனது.."
(பாடல் : " நானே நானா.. யாரோதானா .." படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்)
காதல்:
"காலடி தாமரை..
நாலடி நடந்தால்..
காதலன் உள்ளம் புண்ணாகும்.. இந்தக்
காதலன் உள்ளம் புண்ணாகும்.."
(பாடல் : " பவளக் கொடியிலே.." படம் : பணம் படைத்தவன்)
"மாலையில் சந்தித்தேன்..
மையலில் சிந்தித்தேன்..
மங்கை நான் கன்னித்தேன்..
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்.."
(பாடல் : " தாமரைக் கன்னங்கள்.." படம் : எதிர் நீச்சல்)
பொதுவுடைமை:
"இல்லை என்போர் இருக்கையிலே..
இருப்பவர்கள்.. இல்லை என்றார்..
மடி நிறைய பொருளிருக்கும்...
மனம் நிறைய இருளிருக்கும்..
எது வந்த போதும்
பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்.."
(பாடல் : "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.." படம் : படகோட்டி)
இல்(லாத) வாழ்க்கை:
"தாமரை மேலே.. நீத்துளி போல்..
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன..
நண்பர்கள் போலே.. வாழவதற்கு
மேளமும் தாலியும் தேவையென்ன.."
(பாடல் : " ம ன்றம் வந்த தென்றலுக்கு.." ப டம் : மௌன ராகம்)
சித்தாந்தம்:
"அப்பனென்றும் அம்மையென்றும்..
ஆணும் பெண்ணும் கொட்டி வைத்த
குப்பையாக வந்த உடம்பு.. ஞானப்பெண்ணே..
அதில்
சித்தனென்றும் புத்தனென்றும் பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப் போகும் கரும்பு..
பந்த பாசச் சேற்றில் வந்தது வீழ்ந்த தேகம்..
எந்த கங்கை ஆற்றில்
இந்த அழுக்கு போகும்.."
(படம் : குணா)
நம்பிக்கையூட்டல்:
"எங்கே கால் போகும்.. போகவிடு..
முடிவைப் பார்த்துவிடு..
காலம் ஒருநாள் கை கொடுக்கும்..
அதுவரை பொறுத்துவிடு.."
(பாடல் : " நெஞ்சிருக்கும் எங்களுக்கு.." படம் : நெஞ்சிருக்கும் வரை)
பிரிவுத்துயர்:
"கண்ணை விட்டுப் போனாலும்..
கருத்தை விட்டுப் போகவில்லை..
மண்ணை விட்டுப் போனாலும்..
உன்னை விட்டுப் போகவில்லை.."
(பாடல் : " மன்னவனே அழலாமா.." படம் : கற்பகம்)
உண்மையைச் சொன்னால், இந்த வரிசையிலும் தலைப்புகளிலும் கவிஞர் வாலியின் கணக்கற்ற பாடல்களைச் சேர்க்கலாம்..."மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்.." (படம் : இருமலர்கள்) "கண்ணன் வருவான் கதை சொல்லுவான்.. வண்ண வண்ணத் தொட்டிலிலே தாலாட்டுவான்.." "அவளுக்கும் அமுதென்று பேர்.." (படம் : பஞ்சவர்ணக் கிளி) " உனக்கென்ன மேலே நின்றாய்.. ஓ..நந்தலாலா." (படம் : சிம்லா ஸ்பெஷல்) "உன்ன நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்.. தங்கமே ஞானத் தங்கமே.." (படம் : அபூர்வ சகோதரர்கள் இப்படி ஆயிரக்கணக்கான பாடல் வரிகளின் சொந்தக்காரர் வாலி.
புதுக் கவிதையிலும் அவர் பெரும் சாதனையாளர்.. அவரது சொல் வீச்சுக்கள் மற்றும் சிலேடை நயம் இவையெல்லாம் அவரது "பாண்டவர் பூமி" யிலும் "அவதார புருஷனிலும் " அட்டகாசமாக அமைந்திருக்கும்.. வாலியின் புதுக்கவிதை வீச்சின் பாதிப்பில் எனது புதுக்கவிதையின் வடிவம் மாறிப்போனதை தனியாக எழுதவேண்டும்..
கவிஞர் வாலியின் புத்தகம் "வாலிப வாலி" சென்றாண்டு வெளிவந்தது.. அதில் கவிஞரின் அனுபங்கள் மற்றும் பாடல் துணுக்குகள் என்று நிறைய செய்திகள் இருந்த்தது.. ஏரத்தாழ 600 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தை ஒரே மூச்சில் ஒரு சனிக்கிழமை படித்து முடித்தேன்.. அதைப் படித்தபின் வாலியைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் மிக உயரத்துக்கு சென்றுவிட்டது..
அதன் கடைசிப் பக்கத்தில் நான் என் கையெழுத்தில் கவிஞர் வாலியைப் பற்றி எழுதிருந்தேன்... இதோ:
எண்பத்திரண்டு வயது வாலியின் மறைவு காலத்தின் கட்டாயம்தானென்று சுலபமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை.. எல்லா தலைமுறைகளுக்கும் கவிதை எழுதிய வாலிக்கு அவர் பாடல்களில் லயித்து அனுபவிப்பதை விட வேறு எப்படி அஞ்சலி செய்வதென்று தெரியவில்லை..
Thursday, December 9, 2010
நந்தலாலா
சென்ற வாரம் கிகுஜீரோவின் இந்தியப் பதிப்பான "நந்தலாலா" பார்த்தேன். ஒரிஜினலுக்கு அருகே வராமல் தனக்குத் தானே கெட்ட பெயரை ஏற்படுத்திக்கொள்ளும் பல படங்களிலிருந்து வெகுவாக வித்தியாசப் பட்டிருக்கிறது நந்தலாலா. கிகுஜீரோவின் கதைக் களத்தில் அதன்
சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு மிஷ்கின் புனைந்திருக்கும் நந்தலாலா சிறப்பான படம். பல காட்சிகள் மூலத்திலிருந்த படியே இருந்தாலும், காட்சி அழகு சற்றும் குறையவில்லை. (தென் மாவட்டங்களில் - திருநெல்வேலி (?) எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்). மிஷ்கின் கிடானோவின் தீவிர விசிறியாம். நிறைய காட்சிகள் கிடானோ வைப் போல் ஓரிரு வினாடிகள்
நீட்டி (stay shots)க் காண்பித்து இருப்பது இந்திய சினிமா ரசிகனுக்கு "கலைப்படம்" என்ற உணர்வைக் கொடுக்கலாம். கிகுஜிரோவில் இது போன்ற ஷாட்டுகள் ஏராளம் உண்டு.
பொதுவாக விமர்சனம் என்ற பெயரில் கதையைச் சொல்லிவிடுவது எனக்கு உடன்படாது என்பதால் சுருக்கம் மட்டும் இங்கே : தாயைத் தேடிச் செல்லும் குழந்தைக்கு தானே தாயாகும் ஒரு விளிம்புநிலை மனிதனின் பயணம் இது. சிறுவன் அஷ்வத் மற்றும் மிஷ்கின் இயல்பான நடிப்பு மிக நன்று. (குறிப்பாக, படீரென்று TV பெட்டியை உடைத்து விட்டு சர்வசாதாரணமாக சுவற்றில் கோடு போட்டபடி வரும் அறிமுகக் காட்சியிலேயே அந்த கதாபாத்திரத்தின் தன்மை
நமக்குப் புரிகிறது). ஒளிப்பதிவு மிக நேர்த்தி. டிராட்ஸ்கி மருது படக் காட்சிகளின் "அழகியல்" தன்மைக்குப் பங்களித்திருக்கிறார். ("அழகியல் ஆலோசனை " என்று டைட்டிலில் காட்டினார்கள்- இது புதுசு)
இந்த படத்தின் ஒரு முக்கிய நபர் (கதாபாத்திரங்களை விடவும்) இளையராஜாவின் இசை என்றால் அது மிகை இல்லை.. மிஷ்கின் ஒரு பேட்டியில் சொன்னமாதிரி, நம்மை கைப் பிடித்து அழைத்துச் செல்லுகிறது.. சிறுவயதில் அம்மாவின் சுட்டுவிரல் பிடித்து நடந்து போன நினைவுகளை மீண்டும் ராஜாவின் இசை மீட்டுகிறது. இசை ரசிகர்களுக்கும், பின்னணி இசைக்கோர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இப்படத்தின் இசை ஒரு நல்ல நூலகம் போல. ஒரு காட்சியில், "தாலாட்டு கேட்கத்தானே இத்தனை
நாள் காத்திருந்தேன்.." என்று உரு(க்)கும் பாடல் ராஜாவின் குரலில் ஒலிக்கும் போது கண்களை முட்டிக் கொண்டு கண்ணீர் வருகிறது நம்மையும் அறியாமல். "நான் கடவுள்"-ளுக்குப் பிறகு என்னை வெகுவாக பாதித்த படம், படத்தில் நிறைய உள்ளுரைகள் உண்டு - கவனமாய்ப் பார்த்தால் அனுபவிக்கலாம்.
தமிழ்ப்படங்களுக்கு இது இன்னொரு பரிமாணம்.
நான் கண்ட ஒரே குறை "மூலக்கதை : கிடானோ" என்று ஒரு வரி போடவில்லை என்பதுதான். (பாலு மகேந்திராவின் "ஜூலி கணபதி" Stephen King-கின் Misery-யைத் தழுவியது. டைட்டிலில் "மூலக்கதை - ஸ்டீபன்" என்று நேர்மை தவறாமல் காட்டியிருந்தார் பாலு மகேந்திரா). இதேபோல் ஒரு குறை "எந்திரன்" பார்த்தபோதும் இருந்தது - அதன் மூல கர்த்தாவான சுஜாதாவுக்கு (அவரின் கடைசிப் படம் என்பதால்) நினைவாஞ்சலி செய்யாதது.
-பகலவன்

