Showing posts with label rajkumar. Show all posts
Showing posts with label rajkumar. Show all posts

Tuesday, February 15, 2022

ஒரு ஊரில் ஒரு இராஜகுமாரன்..

நண்பன் ராஜ்குமார் மறைந்து அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது. இந்த வாரம் (பிப்ரவரி 20) ராஜ்குமாரின் முதலாண்டு நினைவு நாள்.


1972-ஆம் வருடம் ஆறாம் வகுப்பில் ஆரணி அரசினர் ஆண்கள் உயர் நிலைப் பள்ளியில் (அப்போது அப்படித்தான் எங்கள் பள்ளியின் பெயர் இருந்தது) சேர்ந்த சில வாரங்களில் முதன் முதலாக ராஜ்குமாரைப் பார்த்தேன். (நட்பு வட்டாரத்தில் ராஜகுமாரை நாங்கள் ராஜ்குமார்" என்றே அழைத்துப் பழக்கம்). தோற்றத்தில் (அந்த பள்ளிக்குப் பொருந்தாத) மேல்தட்டு வசீகரத்துடன்  நல்ல சிகப்பு நிறத்தில் சற்றே மொழு மொழுவென்றும் இருப்பான். செல்வந்தர் வீட்டுப்பிள்ளை என கண்டதும் சொல்லிவிடலாம். கையில் பளபளவென (புத்தகங்கள் எடுத்து வர) ஒரு அலுமினியப் பெட்டி சகிதமாக வீட்டிலிருந்து  சைக்கிளில் பள்ளி வருவான். அது மட்டுமின்றி அவன் பள்ளிக்கு வரும்போது அனேகமாக ஒரு நாலைந்து (சைதாப்பேட்டை) நண்பர்களுடன் "புடை சூழ"வருவதும் போவதுமாக இருந்தான். ஏறத்தாழ "பாஷா" படத்தில் ரஜினி வருவது போல, இந்தக் கட்டுரையின் தலைப்புக்கு மிகப் பொருத்தமாக இருப்பான். 

நண்பன் வெங்கி,  ஆனந்தன், நாங்கள் "டிங்கி" என்றழைத்த சௌந்தர் ராஜன், இன்னொரு வெங்கடேசன் ("போஸ்ட் ஆஃபீஸ்") மற்றும்  ராமசாமி (எங்களுக்கு ஒரு வருடம் ஜீனியர்) ஆகியோர்கள் ராஜ்குமாரோடு பெரும்பாலான நேரங்களில் உடனிருப்பவர்கள்.  (அந்த பட்டியலில் சேகரும் பார்த்தியும் வேறு சில  சைதை நண்பர்களும் பின்னாளில் சேர்ந்தது தனிக்கதை)

இவ்வளவு கவனித்திருந்தும் ராஜ்குமாரோடு எனக்கு ஏழாவது வகுப்பிலோ எட்டாவது வகுப்பிலோத்தான் அறிமுகம் ஏற்பட்டது.. யாரோ ஒரு வாத்தியார் வராத சூழலில் இரு வகுப்புகளை இணைத்து Combined Session வைத்தபோது அருகருகே அமர்ந்திருந்தோம்.. அதன் பின் தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பழகுவதற்கு எளிமையானவன் இனிமையானவன். நட்பை மதிக்கத்தெரிந்த நல்ல நண்பன். (இதை எழுதும் போது இறந்த காலச் சொற்களைக் கொண்டு எழுதுகிறோமே என்ற வலி இருக்கத்தான் செய்கிறது. இருந்தும் ராஜ்குமாரின்  வாழ்க்கையை நினைவலைகளால் ஆராதித்துக் கொண்டாடுவதே நினைவு நாளுக்கு மிகப் பொருந்தும் என்பதென் எண்ணம்). வெவ்வேறு வகுப்புகளில் நாங்கள் படித்துக் கொண்டிருந்தாலும் (நான், தயாளன் ஆகியோர்  "A" கிளாஸிலும் அவனும் வெங்கியும் "B"கிளாஸிலும்) ஒன்பதாவது வகுப்பிலிருந்து இருவரும் சேர்ந்து  வெங்கி, தயாளன், வசந்தகுமார் மற்றும் சில நண்பர்களுடன் சுற்றுவது வழக்கமாகி விட்டது.

ஒன்பதாவது வகுப்புத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையில் ராஜ்குமார் ஒரு நாள் எங்களை அழைத்து எங்களுக்குப் போட்டியாய் இருந்த ஒரு தனியார் பள்ளி (Town High School) மாணவர்களோடு ஒரு கிரிக்கெட் மாட்ச் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான், வெங்கி, தயாளன், வசந்த குமார் ஆகியோர்கள் ஆட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டான். அதைவிட பெரிய கேளிக்கை அக்காலத்தில் எமக்கில்லை என்பதால் நாங்களும் ஆடினோம். ராஜ்குமார் அவனுக்காக பிரத்தியேகமாகச் செய்யப்பட்ட கிரிக்கெட் மட்டையைக் கொண்டு ஆடினோம். அந்த மட்டை
ரோஜாப்பூ வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு அதன் மேல் பூச்சித்திரங்கள் வரையப்பட்டு கவர்ச்சியாக இருக்கும். ராஜ்குமார், தயாளன் மற்றும் வசந்த குமார் மூவரும் நன்கு விளையாடினார்கள். விளையாட்டுக்கும் எனக்கும் ஒரு துளி சம்பந்தமும் இல்லை என்பதால் நான் ஏதோ "ஒப்புக்கு" அங்கு நின்றேன் என்று தான் சொல்லவேண்டும். மாட்ச் டிராவானதா அல்லது இரு அணிகளுக்கும் சண்டையானதா என நினைவில்லை. ராஜ்குமாருக்கு இருந்த ஆளுமை மற்றும் ஒருங்கிணைத்தல் திறன் அந்த விளையாட்டில் நன்கு வெளிப்பட்டது. நண்பர்களை அரவணைத்துச்
செல்வதில் அவனுக்கு நிகர் அவனே.

1978-ல் பச்சையப்பன் கல்லூரியில் நான் புதுமுக வகுப்பில் சேர்ந்த புதிதில் எனக்கு ராஜ்குமாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவனுடன் பேசும்போதுதான் தெரிந்தது, அவன் சென்னையில் ஏ.எம் ஜெயின் கல்லூரியில் சேர்ந்திருப்பதாக. அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. (பின்னர் ஒரு நாள் தயாளனையும் பச்சையப்பன் கல்லூரியில் கண்டதும் என் மகிழ்ச்சி இரட்டினப்பானது.!) அதுமுதல் நேரம் கிடைக்கும் போது நான் மீனம்பாக்கம் சென்று 
ராஜ்குமாரோடு தொடர்பில் இருந்து வந்தேன். புதுமுக வகுப்பு முடிந்ததும் ராஜ்குமார் அதே கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கத் தொடங்க, நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். ராஜ்குமாரும் நானும் அவன் விடுதியிலோ அல்லது எங்கள் விடுதியிலோ தொடர்ந்து சந்தித்து வந்தோம். 

ஒரு முறை ராஜ்குமார்  தங்கள் விடுதிக்கான தேர்தலில் மெஸ் செக்ரட்டரி பதவிக்குப் போட்டியிட்ட போது நான் அவனுக்காக சுவரொட்டிகள், பானர்கள் எழுதி பங்கேற்றேன். அங்குதான் ராஜ்குமாரின் நண்பர்கள் திருவண்ணாமலை ரவி மற்றும் சிலர் பரிச்சயமானார்கள். ராஜ்குமார் புதுமுக வகுப்பு பயின்ற காலங்களில் உடற்பயிற்சி முறையாக செய்ய ஆரம்பித்து அதற்கேற்றார்போல் உடல் வாகுவும் அமைத்துக் கொண்டான். திடீரென ஒரு நாள் Mr. Madras ஆக அசைப்படுவதாக சொன்னபோது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. பின்னர் விடுதி நாள் போட்டிகளில் ராஜ்குமார் சாப்பிடும் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் வாங்கிக் கொண்டிருந்தான். ஒரு போட்டியில் 45 இட்லிக்கள் சாப்பிட்டு வென்றிருக்கிறான்.!

1984-ல் நான் பெங்களூரில் எனது முதல் பணியில் சேர ஆயத்தமான போது, எங்கு தங்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ராஜ்குமார் தானும் பெங்களூரில் சட்டப்படிப்பில் சேர இருப்பதாகவும் அதற்காக வேறு சில நண்பர்களோடு ஒரு தனி வீடு பார்த்திருப்பதாகவும் அங்கேயே நானும் இடைக்கால ஏற்பாடாய் தங்கிக் கொள்ளலாம் என்றும் சொன்னான். இல்லாவிட்டால் மொழி தெரியாத இடத்தில் நான் எப்படி வீடுபார்த்து தங்கியிருந்திருப்பேன் என எனக்குத் தெரியாது.. அப்படி "இடுக்கண் களைந்த" நண்பனின் வீட்டில் நான் இரு வாரங்கள் தங்கியிருந்தேன். பின்னர் என் பணியிடத்துக்கு அருகில் அல்சூரில் தனியே வீடெடுத்து நான் குடிபுகுந்தேன். சட்டக்கல்லூரிக் காலங்களில் மாலை வேளைகளில் நேரமிருந்தால் ராஜ்குமார் என்னை சந்திக்க அல்சூர் அல்லது MG ரோடில் எனது அலுவலகத்துக்கு வருவான். வார இறுதியானால் ஏதாவது படம் ஒன்றாகப் போய் பார்ப்பதும் வழக்கமாயிருந்தது, அவன் சட்டக்கல்லூரி  முடிந்து ஆரணி திரும்பிய வரை. எனது அறை நண்பர்களுக்கும் ராஜ்குமார் நல்ல பரிச்சயம். எல்லோரிடமும் இனிமையாகவும் போலித்தனமில்லாமல்  நட்போடும் பழகும் ராஜ்குமாரை யாருக்குத்தான் பிடிக்காது?

1985-ல் ஒரு வார இறுதியில் நான் பெங்களூரிலிருந்து ஆரணி வந்திருந்தேன். அப்போது ராஜ்குமார் மறு நாள் அவர்கள் வீட்டில் அனைவரும் குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதாகவும் நானும் உடன் வரவேண்டும் என்றும் ஆசைப்பட்டான். குலதெய்வ வழிபாடுகளை அதுவரை அறிந்திராத நான், நண்பன் ராஜ்குமார் அழைத்ததால் சம்மதித்தேன். அடுத்த நாள் ராஜ்குமார் வீட்டிலிருந்து ஒரு தனிப் பேருந்து கிளம்ப, ஏறத்தாழ எனக்குத் தெரிந்த சைதாப்பேட்டை நண்பர்கள் அனைவரும் அதில் இருந்தோம். ராஜ்குமாரின் அண்ணன் குடும்பம், சகோதரிகள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமின்றி, பிற உறவினர்களும் எனக்கு ஏற்கனவே (ராஜ்குமார் வீட்டுக்கு சென்று வரும்போது) பரிச்சயம் என்பதால் அந்த பயணம் இனிமையாக அமைந்தது. ஆரணியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள "ஆகாரம் திருமணி" என்ற கிராமத்தில் இருக்கும் "ஆகாசகன்னி" தான் அவர்களின் குலதெய்வம். 

வழிபாடுகள் ஒரு புறம் களேபரமாக நடந்துகொண்டிருக்க, ராஜ்குமார், வெங்கி, சேகர், பார்த்தி, டிங்கி, ஆனந்தன் ஆகியோரோடு நாங்கள் அரட்டைக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தோம். அந்த வழிபாட்டுக்கு, ராஜ்குமாரின் தூரத்து உறவினர் ஒருவர் மும்பையிலிருந்து (செந்திலோ அல்லது பாலாஜியோ அவர் பெயர், CA-வாகப் பணிபுரிந்ததாக நினைவு) வந்திருந்தார். நல்ல புத்திசாலி. அவரும் எங்களுடன் சேர்ந்துகொள்ள அரட்டைக் கச்சேரி அறிவுத்தேடல் உரையாடலானது. உரையாடலின் போக்கில் மற்ற சைதை நண்பர்கள் ஒவ்வொருவராகக் கழன்று கொள்ள நான், ராஜ்குமார் மட்டுமே அவருடன் பயணம் முடிந்து திரும்பும் வரை உரையாடலில் இருந்தோம்.


1988-ல் எனக்கு உடல் நிலை காரணமாய் நான் மூன்று மாதம் மருத்துவ விடுப்பில் ஆரணியில் இருந்தேன். அப்போது ராஜ்குமார், வசந்தகுமார், மாலிக்பாக்ஷா ஆகியோர்கள் என்னைப் பார்க்க வந்துபோவார்கள். ராஜ்குமார் அப்போது வீட்டிலிருந்தே எம்.ஏவுக்குத் தயார் செய்து கொண்டிருந்தான். எனக்கு அடிக்கடி மருத்துவ செக்கப் செய்யவேண்டி இருந்தது. என் மருத்துவரோ சத்யமூர்த்தி ரோடில் மாலிக் வீட்டருகே இருந்த மருத்துவமனையில்தான் செக்கப் செய்வார். எனவே சைக்கிளில் செல்வது சிரமம் என்பதால் நண்பன் ராஜ்குமார் தன் வீட்டிலிருந்து ஒரு பழைய மாடல் பிரிமியர்  பத்மினி காரை எடுத்து வந்து என்னை ஒவ்வொரு முறையும் அழைத்துச் சென்று வருவான். அது நீல நிறத்தில் வித்தியாசமாக இருந்தது. அதன் கதவுகள் நாம் பழக்கப்பட்ட கார்களைப் போல் திறக்காது. கதவின் hinge வழக்கத்திற்கு மாறாய் எதிர்ப்பக்கம் இருக்கும். 
யாரோ தனது அப்பாவுக்குத் தரவேண்டிய மூவாயிரம் ரூபாய்க்கு பதிலாக இந்தக் காரைக் கொடுத்துவிட்டதாக ராஜ்குமார் சொன்னான். சில வருடங்கள் உபயோகித்தபின் அதை விற்றுவிட்டதாய்ச் சொன்னான். எங்கள் வீட்டில் அனைவரோடும் ராஜ்குமார் சகஜமாய்ப் பழகக் கூடியவன். என்னைப் பார்க்க வரும்போது நாங்கள் ஒன்றாக அமர்ந்து கேரம் போர்டு விளையாடுவோம். என் அப்பாவும் ராஜ்குமாரும் கேரம் விளையாட்டில் ஒருவருக்கொருவர் இணையானவர்கள்  என்பதால் ஒரே சிரிப்பும் அரட்டையுமாக கலகலப்பாக போட்டி நடக்கும். ஓரளவு எனக்கு உடல் தேறியதும் ராஜ்குமார் சாந்தியில் ரஜினி நடித்த மனிதன் திரைப்படத்துக்கு
கூட்டிச்சென்றான். ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குப் பின் நான் பார்த்த படம் அதுவும் ராஜ்குமாரோடு என்பதால்  பசுமையாக நினைவில் உள்ளது.

நண்பன் ராஜகுமாருக்கு எஸ்.பி.பி பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக, "இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு" என்ற ("ராஜா" படத்தில் எஸ்.பி.பியும் ஜெயலலலிதாவும் பாடிய டூயட்) அவனுக்கு எப்படி உதவியது என்பதை மிக நெருக்கமான நண்பர்களுக்கு தெரியும். அதேபோல் "இளைமையெனும் பூங்காற்று" பாடலும் ராஜ்குமார் அடிக்கடி ரசிக்கும் பாடல். நடிகைகளில்  ராதாவின் தீவிர ரசிகன். மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் (12-ஓ அல்லது 13னோ) ராஜ்குமாருக்கு எதாவது ஒரு படம் பார்த்துவிட வேண்டும் என்ற விசித்திரப் பழக்கம் இருந்தது. எனக்குத் தெரிந்து பல வருடங்கள் அதைக் கடைபிடித்து வந்தான். ஏன் என்ற காரணம் எனக்கு சரியாய் நினைவில் இல்லை, வெங்கி அறிந்திருக்கக் கூடும்.

2019 டிசம்பரில் நான், தயாளன் மற்றும் வெங்கி மூவரும் ஒரே நேரத்தில் இந்தியா வருகை தந்தபோது, முன்னேற்பாடாய் நாங்கள் ராஜ்குமாரிடம் நம் பள்ளி நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். "அதனை அவன்கண் விடல்" என்பதுபோல் ராஜ்குமார் 12 நண்பர்களை தனிப் பேருந்தில் ஒருங்கிணைத்து அழைத்து வந்தான். சென்னை கிரீன்பார்க்  ஹோட்டலில் சந்திப்பு மிகவும் கலகலப்பாக நடந்தது. வந்தவர்களில் பலரை நான் பள்ளிப்பருவத்துக்குப் பின் அன்றுதான்
பார்த்தேன். பின்பு அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். ராஜ்குமாரோடு நாங்கள் இணைந்து எடுத்துக் கொண்டதில் இதுதான் கடைசி புகைப்படம். அந்த சந்திப்பும் சரி அதன் கலகலப்பும் சரி ராஜ்குமார் உதவியில்லாமல் நடந்திருக்காது. He was a great leader..!!



ரா
ஜ்குமாரை நான் "நட்பின் நுழைவாயில்" (Gateway of Friendship) என்று உறுதியாகச் சொல்வேன். ராஜ்குமாருடன் ஏற்படும் நட்பு அவனோடு மட்டும் நின்று போவதில்லை. இன்னும் நிறைய நண்பர்களை அறிமுகப் படுத்தும்.  ஒரு நல்ல புத்தகத்தை வாசித்தால் அது மேலும் பல புத்தகங்களை நமக்கு அறிமுகப்படுத்தும்  என்பது போல. திருவண்ணாமலை செந்தில், களம்பூர் ரவி, பெங்களூரில் ஶ்ரீகாந் மற்றும் பல நண்பர்கள் எனக்கு ராஜ்குமாரால் தான் தெரியும்.


ராஜ்குமார் அமைதியாய் பேசுபவன், ஆர்ப்பாட்டமில்லாதவன். வழக்கறிஞராய் ராஜ்குமாரை வழக்காடும்போது பார்க்க வேண்டுமென்று ஒரு முறை (2011-இல்) ஆரணியில் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தேன். மன்ற அறையிலிருந்து வெளிவந்தவன், "பகல்.. இன்னைக்கி கேஸ் இல்ல.. வெறும் வாய்தாதான்" என்று சிரித்தபடியே சொன்னான். நாங்கள் ஒருவரை ஒருவர் பெயரிட்டு அழைத்தோ "நீ..போ..வா" என்றோ பேசிதான் பழக்கம். "வாடா போடா" என்றெல்லாம் பேசிக்கொண்டதே  இல்லை. எல்லா நண்பர்களிடமும் அப்படித்தான். எப்போதாவது சில நேரங்களில் வாப்பா.. போப்பா என்று மெதுவாய் கனிவாய்ப் பேசும் ஒரு சிறந்த நண்பன்.


இயற்கை விசித்திரமானது.. இயற்கை குரூரமானது.. இயற்கை முரணானது என்றெல்லாம் "பேரன்பு" படத்தில் caption-கள் வரும்.  அவையெல்லாம் உண்மைதானோ என நினைக்க வைத்தது ராஜ்குமாரின் மறைவு. அவனில்லாத சென்ற வருடத்தில் நாங்கள் யாரும் அவனுடன் நேரில் பேசிக்கொள்ளவில்லையே தவிர, ராஜ்குமாரைப் பற்றி அடிக்கடி நண்பர்களிடையே  பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்..அவன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். 

ஒரு ஓரில் ஒரு ராஜகுமாரன் - அல்ல அல்ல, ஒரே ராஜகுமாரன் தான்; அது என்றென்றும் எங்கள் நண்பன் ராஜ்குமார் தான்..!! நண்பனின்  நினைவுகளைப் போற்றுவோம்..!!