Showing posts with label vasanthan. Show all posts
Showing posts with label vasanthan. Show all posts

Thursday, September 3, 2020

வசந்த(ன்) நினைவுகள்..

இரு தினங்களுக்கு முன் (செப்டம்பர் 1), எங்களது ஆரணி பள்ளி நண்பர்கள் கொண்ட WhatsApp குழுமத்தில், நண்பன் வசந்தன் பெயரில் ஒரு பதிவு வந்தது. குளிர்ப்பெட்டியில் வைக்கப்பட்ட ஓர் உடலின் மங்கலான படமும் அதன் கீழே "Appa Death" என்ற அரைகுறை குறிப்போடும்.  நானும் மற்ற நண்பர்களும், தந்தையை இழந்த வசந்தனுக்கு இரங்கல் செய்தி பதிவிட்டிருந்தோம்... 

நேற்று ஆரணியிலேயே வசிக்கும் எங்கள் குழுமத்து நண்பர்கள் கிருஷ்ணலிங்கம் மற்றும் ராஜாமணி இருவரும் ஒரு அதிர்ச்சிகரமான பதிவிட்டிருந்தார்கள் : இறந்தது வசந்தனின் தந்தையல்ல, வசந்தன் தானென்று.. வசந்தனின் மகனோ மகளோ வசந்தனின் கைப்பேசியிலிருந்து வசந்தன் பெயரில் முதல் பதிவையிட்டிருக்கக் கூடும்... இறந்தது வசந்தன் தான் எனத் தெரிந்தவுடன் எனக்குப்  பேரதிர்ச்சி.. நேற்றிலிருந்து வசந்தனின் நினைவலைகள் வந்து வந்து போக,  அவற்றை  முடிந்தவரை இங்கே பதிவிடுகின்றேன்..

வசந்தன் எங்களோடு ஆறாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி வரை படித்த வகுப்புத் தோழன்.  பழகுவதற்கு மிகவும் இனிமையானவன்.. ஆரணிக்கு அருகேயுள்ள இராட்டினமங்கலம் கிராமத்திலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு வருவான்.  

குடும்ப வேண்டுதலோ வேறு காரணமோ தெரியவில்லை, பள்ளிக்கு வந்தது முதல் நீண்ட தலைமுடியோடு எண்ணெய் தடவி சீராக வாரி இரு புறமும் ரிப்பன் வைத்துப் பின்னிய இரட்டை சடையோடு காட்சியளிப்பான். அதனால் வசந்தனுக்கு "குடுமி நாதன்" என்றும் கிராமத்துப் பெயரை வைத்து "இராட்டின மங்கலத்தான்" என்றும்  காரணப் பெயர்கள்  உண்டு.  

எனக்குத் தெரிந்து எங்கள் வகுப்பிலிருந்த மற்ற நண்பர்கள் (குறிப்பாக வசந்தகுமார்,  மகாதேவன், சேகர், ஷண்முகம்) வசந்தனை  இந்த இரண்டு பேர்களில் ஒன்றை வைத்துத்தான்   அழைப்பார்கள்..   வசந்தன் ஆரம்பத்தில் சிறிது கோபம்  கொண்டாலும் பின்பு நட்பைப் புரிந்துகொண்டு அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.. மிகவும் தோழமையோடு பழகுபவனாகவே இருந்தான்.   

ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது அதுவரை எனக்கு நெருக்கமாயிருந்த வசந்தகுமாருக்கும் எனக்கும் ஏதோ மனத்தாங்கல் வந்து இருவரும் ஒருவரோடொருவர் சிலகாலம் பேசாமல் இருந்தோம். அந்த இடைவெளியில் வசந்தன் என்னோடு அதிகம் பழக ஆரம்பித்தான்.. ஒரு முறை கார்த்திகேயன் திரையரங்கத்தில் "மன்னாதி மன்னன்" என்ற எம்.ஜி.ஆர்  நடித்த பழைய  படம் பார்த்துவிட்டு வந்து எனக்கு "கண்கள் இரண்டும்  என்று உம்மைக் கண்டு பேசுமோ.." பாடலை சிலாகித்து வகுப்பு மேசையில் தாளமிட்டுப் பாடியது நினைவில் உள்ளது.. அப்பாடலை எனக்கு வசந்தன் தான் அறிமுகப் படுத்தினான் என்று சொல்ல வேண்டும்.

வசந்தன் மற்றும் (போலீஸ்காரர் மகன்) ரவி, சாந்தகுமார் ஆகியோரோடு  திரைப்படப்  பெயர் கண்டுபிடிக்கும் விளையாட்டை  விளையாடுவோம்.  முதலில் ஒருவர் தான் மனதுக்குள்  நினைத்திருக்கும் திரைப்படத்தின் முதலெழுத்தைச் சொல்ல அடுத்தவர், இரண்டாம் எழுத்து, அதற்கடுத்தவர் மூன்றாம் எழுத்தென  என ஒரு வட்டத்தில் இந்த கணிப்பு நடக்கும்.. கடைசி எழுத்து யாருடன் முடிகிறதோ அவர் ஆட்டத்திலிருந்து அகற்றப்பட்டு மீதியுள்ளவர்கள் ஆட்டத்தைத் தொடர்வர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அடுத்தடுத்து கணிக்கும் எழுத்துகளால், ஆரம்பித்தவர் நினைத்த படமும் இறுதியாக கணிக்கப்படத் திரைப்படமும் வெவ்வேறாக அமைந்துவிடும்.. இந்த  விளையாட்டில் ரவியும் வசந்தனும் கில்லாடிகள்.. தாம் தப்பிக்க (யாரும் கேள்விப்படாத) ஒரு புதுப்பெயரை அறிவித்து அடாவடி செய்வார்கள்.! அது ஒரு இனிமையான காலம்.!

வசந்தனின் தந்தையார்  சில சமயங்களில் வசந்தனை பள்ளிக்கு அழைத்து  வருவார். அவர் நல்ல உயரம். பார்ப்பதற்கு காங்கிரஸ்காரர் போல் முழங்கை வரை சட்டையணிந்து வெண்ணிற புருவங்கள்  கொண்டவராக இருப்பார்.  எல்லா மாணவர்களோடும் உரையாடுவார். வசந்தனின் தம்பி ரஞ்சன் என் தம்பி முகிலனோடு ஒரே வகுப்பில் பயின்றவன்.  ஒரே ஒருமுறை நான் (வசந்தகுமாருடனா அல்லது மகாதேவனுடனா என நினைவில்  இல்லை) சைக்கிளில் இராட்டின மங்கலம் சென்று வந்திருக்கிறேன். பசுமையான கிராமம்.  அதன்பின் செல்ல வாய்ப்பு கிட்டவேயில்லை.  

ஏழாம் வகுப்பின் இறுதியில், ஒரு சுபயோக சுபதினத்தில் வசந்தனின்   சடைமுடி   வெட்டப்பட்டு   ரெகுலர் கிராப்பில்  மற்ற பிள்ளைகள் போல் காட்சியளித்தான்.  ஆனாலும் நண்பர்கள் "குடுமி நாதன்" என்ற பட்டப்பெயரை விடவேயில்லை. வசந்தனும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..! பள்ளிப் பருவம் முடிந்து நான் கல்லூரிக்கு சென்னை சென்றுவிட்ட பிறகு வசந்தனைப் பார்ப்பது அரிதானது.  வசந்தனும் வேலூரிலோ அல்லது செய்யாற்றிலோ கல்லூரிக்குச் சென்றான். பள்ளிகாலம் முடிந்த பின்பும் நானும் மற்ற நண்பர்களும்  ஒன்று கூடி படம் பார்க்கச் செல்வது உண்டு.. வசந்தன் எங்களோடு படம் பார்க்க வந்ததாய் எனக்கு ஞாபகம் இல்லை..

நான் பணி நிமித்தம் பெங்களூர் சென்று விட்ட பின்பு, 1984-லிருந்து 1990 வரை ஆரணி வரும்போது நிறைய தடவை   வசந்தனை  பஜார் ரோட்டில்   பார்த்துப்  பேசியிருக்கிறேன். பிறிதொரு முறை வசந்தபவன் எதிரில் பேருந்து நிலையத்தை ஒட்டிய ஒரு கட்டிடத்தில் ஒரு கடை நடத்திக் கொண்டிருந்தான். ஸ்வீட் ஸ்டால் என்றும் நினைவு. பேருந்து நிலையம் சென்று வருகையில் நலம் விசாரித்துக் கொள்வது உண்டு..  

எங்கள் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக பல ஆண்டுகளுக்குப் பின் (ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின்) கடந்த வருடம் டிசம்பரில் மீண்டும் நேரில் சந்தித்து நினைவுகளில் மூழ்கிய அந்த நிகழ்ச்சிக்கு வசந்தன் வரவில்லை.. யாருடனும் தொடர்பில் இல்லை என்று மட்டும் எனக்குப் புரிந்தது.

பின்பு எங்கள்  WhatsApp   குழுமம் ஆரம்பித்து சில மாதங்கள் கழித்து  வசந்தன்  குழுமத்தில் இணைந்தது  எனக்குப் பெருமகிழ்ச்சியாய் இருந்தது..   இருந்தும் கடைசிவரை  அவனோடு உரையாடவே இயலவில்லை என்பது வேதனை. 

தொடர்பில்  இருந்தாலும் இல்லாமல் போனாலும், வசந்தன் எங்களுக்கு ஒரு நல்ல, இனிய  நண்பன். இந்த நடுத்தர வயதில் இன்னமும் பார்க்க, சாதிக்க நிறைய இருக்கும் இக்கட்டத்தில் மறைந்துவிட்ட வசந்தனின் ஆன்மா அமைதியுற இயற்கையை இறைஞ்சுகிறேன்..