உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து தொடர்ந்து நன்கு படித்து முதல் ரான்க் -ஐத் தொடர்ச்சியாய் எடுத்து நல்ல மாணவன் என்று எல்லா ஆசிரியர்களும் சொல்லும்படி இருந்தவன் நான். அப்படி ஆசிரியர்கள் வழங்கும் வாழ்த்துரையைக் காட்டிலும் எனக்கு அதிக கர்வம் வருவது நைனா என் மேல் நம்பிக்கை வைத்து தேர்வுத்தாள் திருத்தித் தரப் பணிப்பது. அப்போது நாங்கள் வசித்துவந்த வடக்குமாட வீதியில் (வீட்டு இலக்கம் 24) பக்கத்து வீட்டில் சேஷு மாமா, அம்சா மாமி தம்பதியினர் வசித்து வந்தனர். அம்சா மாமி தமிழாசிரியை என்பதால் அவரும் அவ்வப்போது தேர்வுத்தாள் திருத்த உதவிடக் கோருவார். நானும் தமிழார்வம் கொண்டவன் என்பதால் என்னால் முடிந்தவரை படு சிரத்தையாகத் திருத்திக் கொடுப்பேன்.
அதேபோல் நைனா எடுக்கும் வகுப்புகளின் தேர்வுத்தாட்களையும் (அனேகமாக ஒன்பது அல்லது பத்தாவது வகுப்பு வரலாறு & புவியியல் பாடம்) சிரத்தையாகத் திருத்தி மதிப்பெண் இட்டுக் கொடுத்துவிடுவேன். இந்த வழக்கம் நான் ஒன்பதாவது படிக்கும் காலத்திலிருந்தே உண்டு, ஒவ்வொரு காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுக்குப் பிறகும். என் வகுப்புத் தேர்வுத்தாட்களை நைனா எப்போதுமே என்னிடமே திருத்தக் கொடுத்ததில்லை. (ஆனால், ஒருமுறை நைனாவின் தம்பி, வில்வலன் எனக்குத் தமிழாசிரியராக இருந்தபோது என்னுடைய தேர்வுத்தாளைத் தவிர மற்ற எல்லாவற்றையும் கொடுத்து திருத்தச் சொல்லியிருக்கிறார் என்பது வேறு விஷயம்). அப்படி திருத்தும்போது ஒரே கேள்விக்கு பலதரப்பட்ட மாணவர்களின் சொந்த சரக்குகள் மிகவும் ருசிகரமானவை.
அப்படி ஒருமுறை ஒன்பதாவது வகுப்பின் அரையாண்டுத் தேர்வுத்தாள் (வரலாறு & புவியியல்) திருத்தும் போது ஏற்பட்ட அனுபவம் இது: கேள்வித்தாளில் "இஜிரா என்றால் என்ன..?" என்று ஒரு கேள்வி கேட்கப் பட்டிருந்தது. "இஜிரா" என்பது முகம்மது நபிகள் மெக்காவிலிருந்து மெதினாவுக்கு இடம் பெயர்ந்த சம்பவத்தைக் குறிப்பது. அதை இசுலாமியர்கள் தங்கள் புத்தாண்டாக வளைகுடா நாடுகளில் கொண்டாடுவதாக நினைக்கிறேன். ஆங்கிலத்தில் "Hizira" என்று எழுதப் படும் இந்த சம்பவம் கேள்வித்தாளிலும் புத்தகங்களிலும், "இஜிரா" என்றுதான் குறிப்பிடப் பட்டிருக்கும். இந்த கேள்விக்கு ஒரு கிராமத்து மாணவனின் பதில் வித்தியாசமானது.
வடார்க்காடு மாவட்டத்துக்கே உரித்தான மொழிவளத்தில் பற்பல தூய தமிழ்ச்சொற்கள் வளைந்தும் நெளிந்தும் சிலசமயங்களில் கேட்கப் புதுமையாகவும் (உதாரணம் : பஸ் "பூட்ச்சா"ப்பா..?) இருக்கும். அப்படி வட்டார இடிபாடுகளில் சிக்கிய ஒரு வார்த்தை "இழு" (ஆங்கிலத்தில் "pull") என்பதாகும். அதை வடார்க்காடு கிராமவாசிகள் "இசி" என்று தமக்கே உரிய ஒலிவடிவம் கொடுத்து உச்சரிப்பார்கள். நான் குறிப்பிட்ட கிராமத்து மாணவன் அனேகமாக உழவு மற்றும் வயல்சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவனாய் இருந்திருக்கலாம். முதலில் அவனுக்கு, அந்த வார்த்தை ("இஜிரா") பற்றி வரலாற்றுச் சம்பவம் ஏதும் தெரிந்திருக்கவில்லை. இரண்டாவது, அந்த வார்த்தை சார்ந்து அவனுக்கு மிகவும் பழக்கமான வட்டார வழக்கு. கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த மாணவன் இப்படி பதில் எழுதியிருந்தான்: "மாட்டின் மூக்கணாங்கயிற்றை ஒருவர் ஒரு முனையில் பிடித்துக் கொண்டு மறு முனையை வேறொருவரிடம் கொடுத்து, "இசிரா" என்பார். அதுதான் "இசிரா" என்பதாகும்" ("இஜிரா" என்னும் வார்த்தைக்கு மிக அருகில் அவனுக்குத் தெரிந்தது "இழுடா" என்று பொருள் படும் "இசிரா" என்ற வடார்க்காடு கிராம வழக்குத்தொடர்தான் என்பதை கவனிக்க)
மேற்படி பதிலை படித்துவிட்டு, நான் விழுந்து விழுந்து சிரித்ததும் அந்தத் தாளை என் அப்பா, மற்றும் பலரிடம் காட்டியதும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. எல்லோருக்குமே சிரிப்பை வரவழைத்த பதில் அது. பிறகு எல்லாவற்றையும் திருத்தி முடித்ததும், நைனாவிடம் அதைக் காட்டினேன். அவரோ அம்மாணவனின் கற்பனைத் திறனைப் பாராட்டாமல், "மடையன்.. புத்தகத்தைப் படிக்கலன்னாலும் பரவாயில்ல.. நான் வகுப்புல சொல்லிக் குடுக்குறத கூடவா காதுகுடுத்து கேக்கக் கூடாது.. அந்தக் கழுதைக்கு fail mark தான் போடணும்" என்றார்.
அதன் பிறகு, நைனா கொடுக்கும் தேர்வுத்தாட்களை இன்னும் சிரத்தையாக வார்த்தைக்கு வார்த்தை வாசித்து மதிப்பிட ஆரம்பித்தேன். என்னையும் மீறி இஜிரா போல வேறு ஏதாவது நகைச்சுவையை நழுவ விடக் கூடாது என்பதால்.!!
Saturday, August 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment