நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த வருடம் (1972) நடந்த சம்பவம் இது. படிப்பில் ஆர்வமிக்க மாணவனாய் இருந்த நான் ஏனோ விளையாட்டுகளில் ஆர்வமின்றியே இருந்தேன். (இன்றுவரை அப்படித்தான் என்பது வேறு விஷயம்.!) எனவே PE (அதாவது Physical Education) வகுப்புகள் எனக்குப் பிடிக்காத ஒன்று. அதுவும் அந்த வகுப்பு எங்கள் பள்ளிக்கு எதிரேயுள்ள விளையாட்டு மைதானத்தில்தான் நடக்கும். உடல் நலமில்லா மாணவர்கள் மைதானம் வரை செல்லாமல் வகுப்பிலேயே தங்கிவிடுவார்கள். நானும் அவ்வாறே வகுப்பில் அமர்ந்து மற்ற பாடங்களைப் படிப்பது வழக்கம்.
அப்போது எங்கள் பள்ளியிலிருந்த மூன்று உடற்கல்வி ஆசிரியர்களில் "ருத்திரன்" என்பவர் புதியவர், இளைஞர். அவரும் நாங்கள் தங்கியிருந்த ஆரணிப் பாளையம் பகுதியில் (வெற்றிலைக்காரத் தெரு என்று ஞாபகம்) தங்கியிருந்தவர்தான். ஒரு நாள் நான் வழக்கம்போல் PE வகுப்புக்கு விளையாட மைதானத்துக்குச் செல்லாமல் எங்கள் வகுப்பிலேயே தங்கிவிட, அன்று ருத்திரன் மாணவர் வருகைப் பதிவு செய்யும் போது (Attendance) நேரே வகுப்புக்கு வந்து விளையாட்டுக்கு மட்டம் போட்ட மாணவர்கள் மீது பெருங்கோபம் கொண்டார். பின்னர் ஒவ்வொருவருக்கும் உள்ளங்கையில் "பிரம்படி" கொடுத்து விளையாட்டின் மீது தனக்கிருந்த மரியாதையைக் காட்டிக் கொண்டார். :-))
இந்த சம்பவத்துக்குப் பின் நான் விளையாடுகிறேனோ இல்லையோ PE வகுப்புக்கு மைதானம் சென்று மரத்தடியில் கதைபேசிக் கொண்டிருப்பேன். ருத்திரன் எங்கள் தெருவழியே வந்து போகும் போதெல்லாம், (அப்போது இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த) என் தம்பி குட்டியிடம் அவரை மறைந்திருந்து காட்டுவேன். நினைவாற்றலில் என் தம்பியின் அபாரத் திறமை எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
ஏறத்தாழ ஒரு வருடத்துக்குப் பிறகு, 1973-ல் எங்கள் பள்ளியில் ஒரு புதிய அறிவியல் ஆய்வுக்கூடத்தின் திறப்புவிழாவுக்கு அப்போதைய கல்வி அமைச்சரான நாவலர் நெடுஞ்செழியன் வருகை புரிந்தார். அந்தத் திறப்புவிழாவுக்கு நைனா என் தம்பி குட்டியையும் அழைத்துச் சென்றார். நிகழ்ச்சிக்கு முன் பள்ளி அலுவலகத்தில் ஆசிரியர்கள் தத்தம் கையொப்பம் இடும் பொருட்டு வருவதும் போவதுமாய் இருந்தனர். அவர்களில் ஒருவர் ருத்திரன் ஆவார். நைனாவுடன் அலுவகத்தில் இருந்த குட்டிக்கு ருத்திரன் முகம் பரிச்சயம் என்பதால் அவன் நைனாவிடம், "நைனா.. இந்த வாத்தியார்தான் அண்ணனை அடிச்சாராம்" என்று மழலை மாறாமல் போட்டுக் கொடுக்கவும், உடனே நைனா, "யோவ் ருத்திரா..வாய்யா இங்க..இவன் என் சகலபாடியின் மகன்.. இவனோட அண்ணன் பகலவனை நீ PE வகுப்புல அடிச்சிட்டியாமே..? ஏன்யா அப்படி செஞ்ச" என்று கேட்கவும் ருத்திரன் முகத்தில் அசடு வழிய என்ன சொல்வதென்று தெரியாமல், "பொடியன் ரொம்ப குறும்பா பேசறான் சார்.." என்று சொல்லி சமாளித்தாராம். குட்டியின் முகத்திலோ தன் அண்ணனை அடித்தவனைப் பழி வாங்கிவிட்ட மகிழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது சிறுவன் சொல்வதைக் கூட ignore செய்துவிடாமல் நைனா அவன் சார்பாகப் பேசி அவனைப் புண்படுத்தாதது. சொந்த பந்தங்களுக்குள் பேதம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாத போதுகளில் கூட எங்களை விட்டுக்கொடுக்காமல் எங்களுக்குச் சாதகமாக நடந்துகொள்வார் நைனா.
Saturday, August 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment