Saturday, August 16, 2008

நைனா நினைவு 2 : பேருந்தின் அருகே நிற்காதே

எனக்கு ஏறத்தாழ 8 அல்லது 9 வயதிருக்கும்போது ஒருமுறை நைனாவுடன் நான் போக்குவரத்து நிரம்பிய அதே நேரத்தில் அங்குமிங்குமாய் அலைந்து திரியும் ஜனத்திரள் கொண்ட கடை வீதியில் சென்று கொண்டிருந்தேன். ஆரணியின் பஜார் இது போன்ற மனித நெரிசல்கள் மட்டுமில்லாமல், அசைபோட்டபடி அமர்ந்துகொண்டோ நிதானமாய் நடந்துகொண்டோ இருக்கும் மாடுகளையும் கணிசமாய்க் கொண்டது. இரைச்சல் மிகுந்த ஆரணி பஜாரில் ஆங்காங்கே சாலை யோரத்தில் பேருந்துகளும் நின்றுகொண்டிருக்கும்.

நைனாவின் கை பிடித்தபடி நான் அப்படி நின்றுகொண்டிருக்கும் ஒரு பேருந்தை ஒட்டியவாறு செல்ல முற்பட்டபோது, நைனா என்னிடம் ஒரு பொது அறிவுக் கேள்வி கேட்டார் : "நின்று கொண்டிருக்கும் பேருந்தை ஒட்டியபடி அதன் பக்கத்தில் செல்லக்கூடாது ஏன் எனத் தெரியுமா" என்று. நான் எனக்குத் தோன்றிய பதிலைச் சொன்னேன் : "திடீரென்று பேருந்து கிளம்பிடுச்சுன்னா நமக்குதான் ஆபத்து" என்று. நைனா நான் கூறிய பதிலை ஆமோதித்து அத்தோடு இன்னொரு காரணமும் சொன்னார் : "பஸ்ஸுக்குள்ள சன்னலோரமா உட்கார்ந்திருக்குறவங்க யாராவது "பச்சக்"-குன்னு எச்சிலைத் துப்புனா வீதியில பஸ் ஓரமா போய்கிட்டிருக்குறவங்க மேலதான் விழும்".

இந்த விளக்கம் அன்று என் வயதுக்கு நான் சிந்திக்காதது. ஆனால், அதன்பின் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பேருந்தில் யாராவது சன்னல் வழியே துப்பும்போது, நைனா சொன்னதுதான் நினைவுக்கு வரும். அதன்பின் அவருடன் நான் வெளியே சென்றது அவ்வளவாக இல்லை என்பதால், இந்த சம்பவம் என் நினைவின் அடுக்குகளில் இன்னமும் பசுமையாய் இருக்கிறதோ என்னவோ.

உலகில் மாறாத இரண்டு விஷயங்களில் முதலாவது, அதே நெரிசல்களுடன் இருக்கும் ஆரணி பஜார் வீதி. இரண்டாவது, சொல்லி வைத்தாற்போல் பேருந்துகளின் சன்னலோர பயணிகள் சுற்றும் முற்றும் சற்றும் பார்க்காமல் எச்சிலை வெளியே துப்பும் நம் கலாச்சாரம்..!

No comments: