Sunday, May 10, 2009

அன்னையர் தினம் 2009

அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது..!!

சென்ற வருடம் இந்த அன்னையர் தினத்தன்றுதான் (மே 10) இந்த வலைப்பூவை ஆரம்பித்தேன். அதற்குள் ஒரு வருடம் உருண்டோடிவிட்டது..!! இவ்வருடம் அன்னையர் தினத்துக்கு என் மனைவிக்கும் மற்றும் நாங்கள் நட்பு பாராட்டும் மற்ற அன்னையருக்கும் ஒரு வாழ்த்தெழுதி அளித்தேன். அந்த வாழ்த்தின் நகல்தான் மேலே இருப்பது.! படத்தின் மேலே சொடுக்கினால் பெரிதுபடுத்திப் பார்க்கலாம். நான் ரொம்ப செண்டிமென்டலா எழுதி இருக்குறதா நீங்க நெனச்சா, இதோ உங்களுக்காக சற்று லைட்டான version:

அன்னையர் தினமோ மே பத்து..
அன்னையை மறந்தால் ஆபத்து..!! :-))

வாழ்த்துகளுடன்,
-பகலவன்

Friday, October 3, 2008

நைனா குறள்..!

நைனா வகுப்புக்கு வந்தவுடன், தனது கைக்கடிகாரத்தைக் கழற்றி மேசையில் வைத்துவிட்டு, பாடத்தை ஆரம்பிப்பார். பொதுவாக, "இன்னைக்கு எந்த அத்தியாயம்" என்று கேட்டுவிட்டு, அந்த வரலாற்று குறிப்புகளை மிகவும் எளிதாகவும் கதைபோலவும் ருசிகரமாகச் சொல்வார். வருடங்கள் மற்றும் சம்பவங்களில் கோர்வை இருக்கும், அவர் பாடம் நடத்தும்போது. சரியாக 45 நிமிடங்களுக்குள் அனேகமாக அந்த அத்தியாயம் முடிக்கப்பட்டு விடும். நேரத்தைக் கச்சிதமாய் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சிறந்த ஆசிரியர் ஆவார் நைனா.

இப்படி நைனா பற்றி நினைவுகள் அதிகம். எல்லோராலும் "RR" என்று அழைக்கப்பட்ட அந்த நல்லாசிரியரின் மாணவனாய் அவருக்காக நான் எழுதிய குறட்பா இதோ:

"ஆராரோ ஆசான்கள் கற்பித்தா லுமெங்கள்
ஆரார்போல் யாரினி சொல்"

---

Sunday, August 24, 2008

நைனா நினைவு 5 : செயற்கை மழை

1970-களில் மழையின்றி வரண்டுபோக இருந்த தமிழகத்தைக் காக்க அப்போதைய முதல்வர் கலைஞர், "செயற்கை மழை"த் திட்டத்தைக் கொண்டு வந்தார். வெளிநாட்டுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்பட்ட திட்டம் அது. அப்போதெல்லாம் செயற்கை மழை குறித்த தகவல்கள் தினசரிகளிலும் வானொலியிலும் அடிக்கடி வந்து போகும். ஒருமுறை, நைனா வகுப்புக்கு வந்தவுடன், என்ன நினைத்தாரோ தெரியாது, "யாருக்காவது செயற்கை மழை எப்படி பொழிகிறது.. அதைப் பெய்விக்க என்ன வேதியல் பொருள் (Chemical) உபயோகிக்கிறார்கள் என்று தெரியுமா" என்று ஒரு பொது அறிவுக்கேள்வி வினவினார். அரசினர் உயர்நிலைப் பள்ளிகளில் எனக்குத் தெரிந்து பாடம் நடத்துவதே பெரிய விஷயம். அதிலும் பெரிது பொது அறிவுக்காக நேரம் ஒதுக்கி மாணவர்களை ஊக்குவிப்பது.

நைனா கேட்டவுடன், நான் (Current Affairs-களில் Upto date ஆக இருந்ததால்), உடனே கையை உயர்த்தினேன். வேறு யாருக்கும் அது பற்றி தெரிந்திருக்கவில்லை. நைனா பதிலைக் கேட்டார், நான், "சில்வர் ஐயோடைட் (Silver Iodide)"-டை விமானத்திலிருந்து மேகங்கள் மேல் தூவினால் செயற்கையாய் மழை வரும் என்று சொன்னதும் அவருக்கு என் பதிலில் மிகுந்த சந்தோஷமும் மற்ற மாணவர்களுக்கு அது தெரியவில்லையே என்னும் கோபமும் இருந்தது. "வேற ஒரு கம்மினாட்டிக்கும் இதப் பத்தி தெரியலையா..?" என்று தனக்கே உரித்தான பாணியில் மாணவர்களை வசைபாட, நானோ, அந்த "சில்வர் ஐயோடைட்" தூவப்பட்ட மேகங்கள் போலவே ஜில்லென்று மிதந்தேன், பெருமிதத்தில்..!

ஒரு tail piece : செயற்கை மழை பெய்விக்க முதலில் விமானங்கள் மூலம் மேகங்களைத் துரத்தி, விரட்டித் திரட்டுவார்கள் என்று வானொலியில் கேட்டதாகவும், அந்த பாதிப்பில்தான் எழுத்தாளர் சுஜாதா "மேகத்தைத் துரத்தியவன்" என்று தான் அப்போது எழுதிய ஒரு நாவலுக்குத் தலைப்பிட்டதாகவும் என் நினைவு. தவறான செய்தியாயிருந்தால் மன்னிக்கவும்.!

Monday, August 18, 2008

கண்ணதாசனின் காதல் தோல்விப் பாடல்கள் - ஒரு சிறு ஆய்வு

இந்த கட்டுரையை நான் 1998 -ல் தமிழ்த் திரைப்பாடல்களை அலசும் ஒரு இணையத் தளத்துக்காக எழுதினேன். இங்கு மறு பதிவு செய்கின்றேன் :

கவிஞர் கண்ணதாசனின் காதல் தோல்விப் பாடல்களை ஒரு நாள் அசைபோட்டுக்கொண்டிடுந்தேன். எனக்குள் ஒரு கேள்வி உதித்தது: "காதலுக்குத் தான் கண்ணில்லை என்பார்கள், ஆனால், காதல் தோல்விக்கு?" எனது கேள்விக்கான காரணம் இச்சிறு கட்டுரையில் புலப்படும்.

கண்ணதாசனின் காதல் தோல்விப்பாடல்கள் தமிழ்த்திரைப் பாடல்களில் நிறைய இருந்தாலும், நான் அதிகமாய் நேசிக்கும் (கீழ்க்காணும்) இப்பாடலில், "இந்த பாழாய்ப் போன கண்ணால்தானே காதல் வந்தது" என்று அவைகளைக் கடிந்து கொள்கிறார் கவிஞர். கண்களைக் கடிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், கடவுளையும் கடிந்து கொள்கிறார்:

கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே...
("எங்கே நிம்மதி.." பாடல், புதியபறவை படத்தில்)

என்று இறைவனையே பழிக்கும் கவிஞர், ஒருபடி மேலே போய், கண்களால் காதல் வித்திட்ட கடவுளுக்கு எந்த IPC -பிரிவில் தண்டனை கொடுப்பது என்று கேட்பதைப் பாருங்கள்:

கண்களின் தண்டனை காட்சி வழி..
காட்சியின் தண்டனை காதல் வழி..
காதலின் தண்டனை கடவுள் வழி..
கடவுளைத் தண்டிக்க என்ன வழி..

("இரண்டு மனம் வேண்டும்..", வசந்த மாளிகை படத்தில்)

கடவுளுக்கு என்ன தண்டனை வாங்கித் தருவது என்று யோசித்த கவிஞர், இந்தப் பாடலில், அவரே கடவுளுக்குத் தண்டனை தருகிறார்..! கடவுளுக்கே தண்டனையா என்றா கேட்கிறீர்கள்? காதல் தோல்வியால் கொழுந்து விட்டெரியும் இதயம் எல்லைகளைக் கடந்து புலம்புகின்றது:

எத்தனைப் பெண் படைத்தான்..
எல்லோர்க்கும் கண் படைத்தான்..
அத்தனை கண்களிலும்
ஆசையென்னும் விஷம் கொடுத்தான்..
:
:
அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று ஆடவைத்துப் பார்த்திருப்பேன்..
வருவான்..துடித்திடுவான்..பட்டதே போதுமென்பான்..

பாவி அவன் பெண்களையே
படைக்காமல் நிறுத்தி வைப்பான்..

("கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்..", வான்ம்பாடி படத்தில்)

இப்படியெல்லாம் கண்களை, காதலுக்கும் காதல் தோல்விக்கும் காரணம் காட்டிய கவிஞர், தன் நிலையிலிருந்து சற்றே இறங்கிவந்து, கண்களிடமே (ஒரு குழந்தையைப் போல்) கெஞ்சுவதைப் பாருங்கள். இந்தக் கெஞ்சல்கூட அடுத்து வரும் காதல் தோல்விகளைத் தவிர்க்க வேண்டியே என்று தெரிகிறது..

கண்களே..கண்களே..
காதல் செய்வதை விட்டு விடுங்கள்..
பெண்களே.. பெண்களே..
வாலிபரைக் கொஞ்சம் வாழவிடுங்கள்..

("வாழ்க்கைப் படகு" படத்தில்)

கடிந்து கொள்ளப் படுவது கண்களாக இருந்தாலும் சரி, அல்லது கடவுளாகவே இருந்தாலும் சரி, கடிந்து கொள்பவர் கண்ணதாசனாய் இருக்கும் பட்சத்தில், நமக்கு காவியங்களே அல்லவா கிடைத்து விடுகின்றன..! ஆம், இப்பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு காவியம் தான்..!!

Saturday, August 16, 2008

நைனா நினைவு 4 : இஜிரா என்றால் என்ன?

உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து தொடர்ந்து நன்கு படித்து முதல் ரான்க் -ஐத் தொடர்ச்சியாய் எடுத்து நல்ல மாணவன் என்று எல்லா ஆசிரியர்களும் சொல்லும்படி இருந்தவன் நான். அப்படி ஆசிரியர்கள் வழங்கும் வாழ்த்துரையைக் காட்டிலும் எனக்கு அதிக கர்வம் வருவது நைனா என் மேல் நம்பிக்கை வைத்து தேர்வுத்தாள் திருத்தித் தரப் பணிப்பது. அப்போது நாங்கள் வசித்துவந்த வடக்குமாட வீதியில் (வீட்டு இலக்கம் 24) பக்கத்து வீட்டில் சேஷு மாமா, அம்சா மாமி தம்பதியினர் வசித்து வந்தனர். அம்சா மாமி தமிழாசிரியை என்பதால் அவரும் அவ்வப்போது தேர்வுத்தாள் திருத்த உதவிடக் கோருவார். நானும் தமிழார்வம் கொண்டவன் என்பதால் என்னால் முடிந்தவரை படு சிரத்தையாகத் திருத்திக் கொடுப்பேன்.

அதேபோல் நைனா எடுக்கும் வகுப்புகளின் தேர்வுத்தாட்களையும் (அனேகமாக ஒன்பது அல்லது பத்தாவது வகுப்பு வரலாறு & புவியியல் பாடம்) சிரத்தையாகத் திருத்தி மதிப்பெண் இட்டுக் கொடுத்துவிடுவேன். இந்த வழக்கம் நான் ஒன்பதாவது படிக்கும் காலத்திலிருந்தே உண்டு, ஒவ்வொரு காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுக்குப் பிறகும். என் வகுப்புத் தேர்வுத்தாட்களை நைனா எப்போதுமே என்னிடமே திருத்தக் கொடுத்ததில்லை. (ஆனால், ஒருமுறை நைனாவின் தம்பி, வில்வலன் எனக்குத் தமிழாசிரியராக இருந்தபோது என்னுடைய தேர்வுத்தாளைத் தவிர மற்ற எல்லாவற்றையும் கொடுத்து திருத்தச் சொல்லியிருக்கிறார் என்பது வேறு விஷயம்). அப்படி திருத்தும்போது ஒரே கேள்விக்கு பலதரப்பட்ட மாணவர்களின் சொந்த சரக்குகள் மிகவும் ருசிகரமானவை.

அப்படி ஒருமுறை ஒன்பதாவது வகுப்பின் அரையாண்டுத் தேர்வுத்தாள் (வரலாறு & புவியியல்) திருத்தும் போது ஏற்பட்ட அனுபவம் இது: கேள்வித்தாளில் "இஜிரா என்றால் என்ன..?" என்று ஒரு கேள்வி கேட்கப் பட்டிருந்தது. "இஜிரா" என்பது முகம்மது நபிகள் மெக்காவிலிருந்து மெதினாவுக்கு இடம் பெயர்ந்த சம்பவத்தைக் குறிப்பது. அதை இசுலாமியர்கள் தங்கள் புத்தாண்டாக வளைகுடா நாடுகளில் கொண்டாடுவதாக நினைக்கிறேன். ஆங்கிலத்தில் "Hizira" என்று எழுதப் படும் இந்த சம்பவம் கேள்வித்தாளிலும் புத்தகங்களிலும், "இஜிரா" என்றுதான் குறிப்பிடப் பட்டிருக்கும். இந்த கேள்விக்கு ஒரு கிராமத்து மாணவனின் பதில் வித்தியாசமானது.

வடார்க்காடு மாவட்டத்துக்கே உரித்தான மொழிவளத்தில் பற்பல தூய தமிழ்ச்சொற்கள் வளைந்தும் நெளிந்தும் சிலசமயங்களில் கேட்கப் புதுமையாகவும் (உதாரணம் : பஸ் "பூட்ச்சா"ப்பா..?) இருக்கும். அப்படி வட்டார இடிபாடுகளில் சிக்கிய ஒரு வார்த்தை "இழு" (ஆங்கிலத்தில் "pull") என்பதாகும். அதை வடார்க்காடு கிராமவாசிகள் "இசி" என்று தமக்கே உரிய ஒலிவடிவம் கொடுத்து உச்சரிப்பார்கள். நான் குறிப்பிட்ட கிராமத்து மாணவன் அனேகமாக உழவு மற்றும் வயல்சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவனாய் இருந்திருக்கலாம். முதலில் அவனுக்கு, அந்த வார்த்தை ("இஜிரா") பற்றி வரலாற்றுச் சம்பவம் ஏதும் தெரிந்திருக்கவில்லை. இரண்டாவது, அந்த வார்த்தை சார்ந்து அவனுக்கு மிகவும் பழக்கமான வட்டார வழக்கு. கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த மாணவன் இப்படி பதில் எழுதியிருந்தான்: "மாட்டின் மூக்கணாங்கயிற்றை ஒருவர் ஒரு முனையில் பிடித்துக் கொண்டு மறு முனையை வேறொருவரிடம் கொடுத்து, "இசிரா" என்பார். அதுதான் "இசிரா" என்பதாகும்" ("இஜிரா" என்னும் வார்த்தைக்கு மிக அருகில் அவனுக்குத் தெரிந்தது "இழுடா" என்று பொருள் படும் "இசிரா" என்ற வடார்க்காடு கிராம வழக்குத்தொடர்தான் என்பதை கவனிக்க)

மேற்படி பதிலை படித்துவிட்டு, நான் விழுந்து விழுந்து சிரித்ததும் அந்தத் தாளை என் அப்பா, மற்றும் பலரிடம் காட்டியதும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. எல்லோருக்குமே சிரிப்பை வரவழைத்த பதில் அது. பிறகு எல்லாவற்றையும் திருத்தி முடித்ததும், நைனாவிடம் அதைக் காட்டினேன். அவரோ அம்மாணவனின் கற்பனைத் திறனைப் பாராட்டாமல், "மடையன்.. புத்தகத்தைப் படிக்கலன்னாலும் பரவாயில்ல.. நான் வகுப்புல சொல்லிக் குடுக்குறத கூடவா காதுகுடுத்து கேக்கக் கூடாது.. அந்தக் கழுதைக்கு fail mark தான் போடணும்" என்றார்.

அதன் பிறகு, நைனா கொடுக்கும் தேர்வுத்தாட்களை இன்னும் சிரத்தையாக வார்த்தைக்கு வார்த்தை வாசித்து மதிப்பிட ஆரம்பித்தேன். என்னையும் மீறி இஜிரா போல வேறு ஏதாவது நகைச்சுவையை நழுவ விடக் கூடாது என்பதால்.!!

நைனா நினைவு 3 : புது நோட்டுக்கு பழைய நோட்டு

நான் ஒன்பதாம் வகுப்பில் ஆரணி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, எனக்கு நைனாதான் வரலாறு மற்றும் புவியியல் ஆசிரியர். அவரின் இளவல் வில்வலன் (செல்லமாய் நாங்கள், "வில்லுப்பா" என்றுதான் அழைப்போம்) எனக்குத் தமிழ் ஆசிரியர். இருவரையும் நான் "சார்" போட்டு அழைத்ததில்லை. நைனாவை வகுப்பில் விளிக்கும்போதும் நான் "நைனா" என்றுதான் சொல்வேன். அவரும் அதைக் கண்டு கொள்ளமாட்டார். நான் "சார்" போட்டு அழைத்திருந்தாலும் அவருக்குப் பிடித்திருக்காது என்றே நினைக்கிறேன்.

வரலாறு / புவியியல் ஆசிரியர்களுக்கு வகுப்பில் பாடம் நடத்துவது ஒரு வேலை என்றால், ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் தத்தம் வகுப்பு மாணவர்களுக்கும் அரசு பாடத்திட்டத்தால் அங்கீகரிக்கப் பட்ட வரைபடப் புத்தகம் (Map Note Book) ஆர்டர் செய்து வாங்கி மாணவர்களிடம் காசுக்கு விநியோகம் செய்வது இன்னொரு வேலை. கடினமானதும் கூட. ஒன்பதாம் வகுப்பு வரைபடப் புத்தகத்தின் விலை ரூ 2.00 என்று நைனா வகுப்பில் எல்லோரிடமும் ஒரு மாதத்துக்கு முன்னமே சொல்லிவிட்டிருந்தார். நான் வீட்டில் அப்பாவிடம் பணம் கேட்டால் அவரோ "அப்புறம் தரேன்" என்று தன் வழக்கமான பாணியில் இழுத்தடித்தார். RR-தானே ஆசிரியர் என்று அவருக்குப் போக்குக்காட்ட அப்படி செய்தாரோ என்னவோ. பணம் கொடுக்கவேண்டிய கடைசிநாள் அன்று ஒரு வழியாய் நைந்துபோன இரண்டு ரூபாய்த் தாளை மதிய உணவுக்கு வீட்டுக்குப் போய்வரும்போது பெற்றுக்கொண்டு அதை அப்படியே சட்டைப்பையில் வைத்தபடி வகுப்புக்கு வந்துவிட்டேன். மதிய உணவுக்குப் பிறகு, முதல் வகுப்பு வரலாறு என்பதால் நைனா வந்தார். வந்ததும் முதல் வேலையாக வரைபடப்புத்தகத்துக்குப் பணம் கேட்கவும், நான் சட்டைப்பையில் பொட்டலமாய் வைத்திருந்த பணத்தை அப்படியே எடுத்து நைனாவிடம் கொடுத்தேன்.

அந்தத் தாள் எட்டு பத்து மடிப்புகளாக (செவ்வகமாக இருக்கவேண்டிய ரூபாய்த்தாளைச் சுருக்கி ஒரு சிறு சதுரமாய் மடித்து வைத்திருந்திருக்கிறேன்!) இருந்ததைக் கவனித்த நைனா, அதை "லாவகமாக"ப் பிரித்தெடுத்து "ஏண்டா..இப்படியாடா ஒரு பழைய நோட்ட பொட்டலமா மடிச்சு அத அப்படியே கொடுக்கிறது..? நான் இதப் பிரிக்கும்போது கிழிஞ்சிட்டா என்ன பண்றது..?" என மெல்லிய கோபத்தில் வினவவும், என் அறியாமையை நான் உணர்ந்தேன். அதிலிருந்து கிழிசல்களோடு இருக்கும் ரூபாய்த் தாளைப் பார்க்கையில் நைனா சொன்னது தான் நினைவுக்கு வரும்.

நைனா நினைவு 2 : பேருந்தின் அருகே நிற்காதே

எனக்கு ஏறத்தாழ 8 அல்லது 9 வயதிருக்கும்போது ஒருமுறை நைனாவுடன் நான் போக்குவரத்து நிரம்பிய அதே நேரத்தில் அங்குமிங்குமாய் அலைந்து திரியும் ஜனத்திரள் கொண்ட கடை வீதியில் சென்று கொண்டிருந்தேன். ஆரணியின் பஜார் இது போன்ற மனித நெரிசல்கள் மட்டுமில்லாமல், அசைபோட்டபடி அமர்ந்துகொண்டோ நிதானமாய் நடந்துகொண்டோ இருக்கும் மாடுகளையும் கணிசமாய்க் கொண்டது. இரைச்சல் மிகுந்த ஆரணி பஜாரில் ஆங்காங்கே சாலை யோரத்தில் பேருந்துகளும் நின்றுகொண்டிருக்கும்.

நைனாவின் கை பிடித்தபடி நான் அப்படி நின்றுகொண்டிருக்கும் ஒரு பேருந்தை ஒட்டியவாறு செல்ல முற்பட்டபோது, நைனா என்னிடம் ஒரு பொது அறிவுக் கேள்வி கேட்டார் : "நின்று கொண்டிருக்கும் பேருந்தை ஒட்டியபடி அதன் பக்கத்தில் செல்லக்கூடாது ஏன் எனத் தெரியுமா" என்று. நான் எனக்குத் தோன்றிய பதிலைச் சொன்னேன் : "திடீரென்று பேருந்து கிளம்பிடுச்சுன்னா நமக்குதான் ஆபத்து" என்று. நைனா நான் கூறிய பதிலை ஆமோதித்து அத்தோடு இன்னொரு காரணமும் சொன்னார் : "பஸ்ஸுக்குள்ள சன்னலோரமா உட்கார்ந்திருக்குறவங்க யாராவது "பச்சக்"-குன்னு எச்சிலைத் துப்புனா வீதியில பஸ் ஓரமா போய்கிட்டிருக்குறவங்க மேலதான் விழும்".

இந்த விளக்கம் அன்று என் வயதுக்கு நான் சிந்திக்காதது. ஆனால், அதன்பின் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பேருந்தில் யாராவது சன்னல் வழியே துப்பும்போது, நைனா சொன்னதுதான் நினைவுக்கு வரும். அதன்பின் அவருடன் நான் வெளியே சென்றது அவ்வளவாக இல்லை என்பதால், இந்த சம்பவம் என் நினைவின் அடுக்குகளில் இன்னமும் பசுமையாய் இருக்கிறதோ என்னவோ.

உலகில் மாறாத இரண்டு விஷயங்களில் முதலாவது, அதே நெரிசல்களுடன் இருக்கும் ஆரணி பஜார் வீதி. இரண்டாவது, சொல்லி வைத்தாற்போல் பேருந்துகளின் சன்னலோர பயணிகள் சுற்றும் முற்றும் சற்றும் பார்க்காமல் எச்சிலை வெளியே துப்பும் நம் கலாச்சாரம்..!