Thursday, July 18, 2013

காவியக் கவிஞர் வாலிக்கு நினைவாஞ்சலி..




1980 ஆம் ஆண்டு நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவன்.. அப்போதெல்லாம் நல்ல ஒரு தமிழ் சினிமாப் பாடலை வானொலியில் கேட்கும்போதெல்லாம் "இது கண்ணதாசன்  எழுதியதாத் தான் இருக்கும்" என்று நானும் தமிழ் கூறும் நல்லுலகமும் தவறாகவே நினைத்து வந்திருக்கிறோம். அப்படித்தான் ஒரு நாள் விவிதபாரதியில் "நீங்கள் கேட்டவை" ஒலிபரப்பில் "உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும் " பாடலை (படம் : இதயத்தில் நீ ) ஒலிபரப்பினார்கள்... நானும் அந்த பாடலின்  இசையிலும் அர்த்தத்திலும் மெய் மறந்து ரசித்து, "கண்ணதாசனா கொக்கா.. என்னமா எழுதியிருக்காருய்யா" என்று மனசுக்குள் சொல்லி முடிக்கும் முன், "இந்த பாடலை எழுதியது கவிஞர் வாலி" என்று விவிதபாரதி அறிவித்தது... நான் எதிர் பார்த்திராத கவிஞரின் பெயரைக் கேட்டதில் எனக்கு பெருத்த குழப்பமும்  "வாலி இப்படியெல்லாம் கூட எழுதுவாரா" என்று ஆச்சரியமும்.. இதுபோல் எத்தனை பாடல்களை நான் தவறாக கண்ணதாசன் எழுதியது என்று நினைத்திருந்திருப்பேனோ என்று  அன்று உணர்ந்து வாலி எழுதிய திரைப்பாடல்கள் பவற்றை தேடிக் கண்டுபிடித்து கேட்டு ரசிக்கலானேன்..
அன்று முதல் நான் கவிஞர் வாலியின் ரசிகனின் என்றால் அது மிகை இல்லை..

எண்பதுகளில் நான் தேடிப் படித்து வாசித்த எழுத்தாளர் சுஜாதாவின் "ஸ்ரீ ரங்கத்து தேவதைகள்"-ல் கவிஞர் வாலிக்கும் தனக்கும் ஒரே பேர் (ரங்கராஜன்) மற்றும் ஒரே ஊர் (ஸ்ரீ ரங்கம்) என்று சுஜாதா எழுதியிருந்த்ததைப்  படித்தபோது எதனாலென்று தெரியாமல் உள்ளம் பூரித்தது.. பேர் ராசியோ என்னவோ இந்த இரண்டு ரங்கராஜன்களும் என்னைப் பாதித்தவர்கள்..!! 


வாலி எழுதியவை எத்தனையோ  ஆயிரம் பாடல்கள்.. அவற்றில் எத்தனையோ முத்துக்கள்..  இதயத்தில் நீ, படகோட்டி, கற்பகம் போன்ற படங்களில் அனைத்து பாடல்களையும் (கண்ணதாசன் கோலோச்சிய அதே நேரத்தில்) வாலி எழுதினார்.. இணையத்து ஆரம்ப நாட்களில் தமிழ் சினிமா பாடல்கள் பக்கத்துக்காக வாலியின் பாடல்களிலிருந்து சிலவற்றை மட்டும் எடுத்து "கவிஞர் வாலியின் கல்வெட்டு வரிகள்" என்ற தலைப்பில் ஒரு பதிவு  இட்டிருந்தேன். (http://tfmpage.com/forum/16029.13209.22:45:09.html) அந்தக்  கட்டுரையின் சில பகுதிகள் இதோ:

நிலையாமை:
"உறவு என்றொரு சொல்லிருந்தால்..
 பிரிவு என்றொரு பொருளிருக்கும்..
 காதல் என்றொரு கதையிருந்தால்
 கனவு என்றொரு முடிவிருக்கும்.."

(படம் : இதயத்தில் நீ)

மூப்பு:
"கடந்த காலமோ திரும்புவதில்லை..
 நிகழ் காலமோ.. விரும்புவதில்லை..
 எதிர்காலமோ.. அனுபவமில்லை..
 இதுதானே.. அறுபதின் நிலை.."

(பாடல் : "" உனக்கென்ன குறைச்சல்.."  படம் : வெள்ளி விழா)

பிரிவாற்றாமை:
"பிறையில் வளர்வதும்..
 பிறகு தேய்வதும்.. ஒரே நிலவு..
 உறவில் கலப்பதும்..
 பிரிவில் தவிப்பதும் ஒரே மனது.."

(பாடல் : " நானே நானா.. யாரோதானா .."  படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

காதல்:
"காலடி தாமரை..
 நாலடி நடந்தால்..
காதலன் உள்ளம் புண்ணாகும்.. இந்தக்
காதலன் உள்ளம் புண்ணாகும்.."

(பாடல் : " பவளக் கொடியிலே.."  படம் : பணம் படைத்தவன்)

"மாலையில் சந்தித்தேன்..
 மையலில் சிந்தித்தேன்..
 மங்கை நான் கன்னித்தேன்..
 காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்.."

(பாடல் : " தாமரைக் கன்னங்கள்.."  படம் : எதிர் நீச்சல்)

பொதுவுடைமை:
"இல்லை என்போர் இருக்கையிலே..
 இருப்பவர்கள்.. இல்லை என்றார்..
 மடி நிறைய பொருளிருக்கும்...
 மனம் நிறைய  இருளிருக்கும்..
 எது வந்த போதும்
 பொதுவென்று வைத்து
 வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்.."

(பாடல் : "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.." படம் : படகோட்டி)

இல்(லாத) வாழ்க்கை:
"தாமரை மேலே.. நீத்துளி போல்..
 தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன..
 நண்பர்கள் போலே.. வாழவதற்கு
 மேளமும் தாலியும் தேவையென்ன.."

(பாடல் : " ம ன்றம் வந்த தென்றலுக்கு.."  ப டம் : மௌன ராகம்)

சித்தாந்தம்:
"அப்பனென்றும் அம்மையென்றும்..
 ஆணும் பெண்ணும் கொட்டி வைத்த
 குப்பையாக வந்த உடம்பு.. ஞானப்பெண்ணே..
அதில்
சித்தனென்றும் புத்தனென்றும் பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப் போகும் கரும்பு..

பந்த பாசச் சேற்றில் வந்தது வீழ்ந்த தேகம்..
எந்த கங்கை ஆற்றில்
இந்த அழுக்கு போகும்.."

(படம் : குணா)

நம்பிக்கையூட்டல்:
"எங்கே கால் போகும்.. போகவிடு..
 முடிவைப் பார்த்துவிடு..
காலம் ஒருநாள் கை கொடுக்கும்..
அதுவரை பொறுத்துவிடு.."

(பாடல் :  " நெஞ்சிருக்கும் எங்களுக்கு.." படம் : நெஞ்சிருக்கும் வரை) 

பிரிவுத்துயர்:
"கண்ணை விட்டுப் போனாலும்..
 கருத்தை விட்டுப் போகவில்லை..
 மண்ணை விட்டுப் போனாலும்..
 உன்னை விட்டுப் போகவில்லை.."

(பாடல் : " மன்னவனே அழலாமா.."  படம் : கற்பகம்)

உண்மையைச் சொன்னால், இந்த வரிசையிலும் தலைப்புகளிலும் கவிஞர் வாலியின் கணக்கற்ற பாடல்களைச் சேர்க்கலாம்..."மாதவிப் பொன்மயிலாள்  தோகை விரித்தாள்.." (படம் : இருமலர்கள்) "கண்ணன் வருவான் கதை சொல்லுவான்.. வண்ண வண்ணத் தொட்டிலிலே தாலாட்டுவான்.." "அவளுக்கும் அமுதென்று பேர்.." (படம் : பஞ்சவர்ணக் கிளி) " உனக்கென்ன மேலே நின்றாய்.. ஓ..நந்தலாலா." (படம் : சிம்லா ஸ்பெஷல்) "உன்ன நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்.. தங்கமே ஞானத் தங்கமே.." (படம் : அபூர்வ சகோதரர்கள்  இப்படி ஆயிரக்கணக்கான பாடல் வரிகளின் சொந்தக்காரர் வாலி.

புதுக் கவிதையிலும் அவர் பெரும் சாதனையாளர்.. அவரது சொல் வீச்சுக்கள் மற்றும் சிலேடை நயம் இவையெல்லாம் அவரது "பாண்டவர் பூமி" யிலும் "அவதார புருஷனிலும் " அட்டகாசமாக அமைந்திருக்கும்.. வாலியின் புதுக்கவிதை வீச்சின் பாதிப்பில் எனது புதுக்கவிதையின் வடிவம் மாறிப்போனதை தனியாக எழுதவேண்டும்..

கவிஞர் வாலியின் புத்தகம் "வாலிப வாலி" சென்றாண்டு வெளிவந்தது.. அதில் கவிஞரின் அனுபங்கள் மற்றும் பாடல் துணுக்குகள் என்று நிறைய செய்திகள் இருந்த்தது.. ஏரத்தாழ 600 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தை ஒரே மூச்சில் ஒரு சனிக்கிழமை படித்து முடித்தேன்.. அதைப் படித்தபின் வாலியைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் மிக உயரத்துக்கு சென்றுவிட்டது.. 

அதன் கடைசிப் பக்கத்தில் நான் என் கையெழுத்தில் கவிஞர் வாலியைப் பற்றி எழுதிருந்தேன்... இதோ:



எண்பத்திரண்டு வயது வாலியின் மறைவு காலத்தின் கட்டாயம்தானென்று சுலபமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை.. எல்லா தலைமுறைகளுக்கும் கவிதை எழுதிய வாலிக்கு அவர் பாடல்களில் லயித்து அனுபவிப்பதை விட வேறு எப்படி அஞ்சலி செய்வதென்று தெரியவில்லை..
















Thursday, December 9, 2010

நந்தலாலா

ஓரிரு வருடங்களுக்கு முன் ஜப்பானிய மொழிப் படமான "கிகுஜீரோ" (kikujiro) வைப் பார்த்துவிட்டு G84-ல் சிலாகித்து எழுதியிருந்தேன். அதன் பின் சுபாகரும் அதன் இயக்குனர் டேகஷி கிடானோ பற்றியும் தொடர் பதிவு எழுதிருந்ததாக நினைவு.

சென்ற வாரம் கிகுஜீரோவின் இந்தியப் பதிப்பான "நந்தலாலா" பார்த்தேன். ஒரிஜினலுக்கு அருகே வராமல் தனக்குத் தானே கெட்ட பெயரை ஏற்படுத்திக்கொள்ளும் பல படங்களிலிருந்து வெகுவாக வித்தியாசப் பட்டிருக்கிறது நந்தலாலா. கிகுஜீரோவின் கதைக் களத்தில் அதன்
சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு மிஷ்கின் புனைந்திருக்கும் நந்தலாலா சிறப்பான படம். பல காட்சிகள் மூலத்திலிருந்த படியே இருந்தாலும், காட்சி அழகு சற்றும் குறையவில்லை. (தென் மாவட்டங்களில் - திருநெல்வேலி (?) எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்). மிஷ்கின் கிடானோவின் தீவிர விசிறியாம். நிறைய காட்சிகள் கிடானோ வைப் போல் ஓரிரு வினாடிகள்
நீட்டி (stay shots)க் காண்பித்து இருப்பது இந்திய சினிமா ரசிகனுக்கு "கலைப்படம்" என்ற உணர்வைக் கொடுக்கலாம். கிகுஜிரோவில் இது போன்ற ஷாட்டுகள் ஏராளம் உண்டு.

பொதுவாக விமர்சனம் என்ற பெயரில் கதையைச் சொல்லிவிடுவது எனக்கு உடன்படாது என்பதால் சுருக்கம் மட்டும் இங்கே : தாயைத் தேடிச் செல்லும் குழந்தைக்கு தானே தாயாகும் ஒரு விளிம்புநிலை மனிதனின் பயணம் இது. சிறுவன் அஷ்வத் மற்றும் மிஷ்கின் இயல்பான நடிப்பு மிக நன்று. (குறிப்பாக, படீரென்று TV பெட்டியை உடைத்து விட்டு சர்வசாதாரணமாக சுவற்றில் கோடு போட்டபடி வரும் அறிமுகக் காட்சியிலேயே அந்த கதாபாத்திரத்தின் தன்மை
நமக்குப் புரிகிறது). ஒளிப்பதிவு மிக நேர்த்தி. டிராட்ஸ்கி மருது படக் காட்சிகளின் "அழகியல்" தன்மைக்குப் பங்களித்திருக்கிறார். ("அழகியல் ஆலோசனை " என்று டைட்டிலில் காட்டினார்கள்- இது புதுசு)

இந்த படத்தின் ஒரு முக்கிய நபர் (கதாபாத்திரங்களை விடவும்) இளையராஜாவின் இசை என்றால் அது மிகை இல்லை.. மிஷ்கின் ஒரு பேட்டியில் சொன்னமாதிரி, நம்மை கைப் பிடித்து அழைத்துச் செல்லுகிறது.. சிறுவயதில் அம்மாவின் சுட்டுவிரல் பிடித்து நடந்து போன நினைவுகளை மீண்டும் ராஜாவின் இசை மீட்டுகிறது. இசை ரசிகர்களுக்கும், பின்னணி இசைக்கோர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இப்படத்தின் இசை ஒரு நல்ல நூலகம் போல. ஒரு காட்சியில், "தாலாட்டு கேட்கத்தானே இத்தனை
நாள் காத்திருந்தேன்.." என்று உரு(க்)கும் பாடல் ராஜாவின் குரலில் ஒலிக்கும் போது கண்களை முட்டிக் கொண்டு கண்ணீர் வருகிறது நம்மையும் அறியாமல். "நான் கடவுள்"-ளுக்குப் பிறகு என்னை வெகுவாக பாதித்த படம், படத்தில் நிறைய உள்ளுரைகள் உண்டு - கவனமாய்ப் பார்த்தால் அனுபவிக்கலாம்.

தமிழ்ப்படங்களுக்கு இது இன்னொரு பரிமாணம்.

நான் கண்ட ஒரே குறை "மூலக்கதை : கிடானோ" என்று ஒரு வரி போடவில்லை என்பதுதான். (பாலு மகேந்திராவின் "ஜூலி கணபதி" Stephen King-கின் Misery-யைத் தழுவியது. டைட்டிலில் "மூலக்கதை - ஸ்டீபன்" என்று நேர்மை தவறாமல் காட்டியிருந்தார் பாலு மகேந்திரா). இதேபோல் ஒரு குறை "எந்திரன்" பார்த்தபோதும் இருந்தது - அதன் மூல கர்த்தாவான சுஜாதாவுக்கு (அவரின் கடைசிப் படம் என்பதால்) நினைவாஞ்சலி செய்யாதது.

-பகலவன்

Friday, June 25, 2010

இராவணன் - ஒரு திரைப் பார்வை..

இராவணன் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பு (அதன் விளம்பரங்களாலும் அவ்வப்போது கவனமாக வெளியிடப்பட்ட scoop -களாலும்) எகிறிவிட்டிருந்ததால், எத்தனையோ பேர் படம் பற்றி எழுதியும் சொல்லியும் கேட்காமல் நேற்று போய் பார்த்து வந்தேன். கூட ஜியா வந்திருந்ததால் சற்றே ஆறுதல்.

படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா நடிப்பு இருக்கிறது.. நீர்வீழ்ச்சிகளும், மலையிடுக்குகளும், பெருமரக்காடுகளும் கொண்ட நல்ல location -னும் இருக்கிறது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் நன்றாகவே இருக்கிறது. படம் முழுக்க அள்ளித்தெளித்த மாதிரி நிறைய பாடல்கள் இருந்தும் இரு பாடல்கள் கேட்கும் ரகத்தில்தான் இருக்கின்றன. எதோ ஒரு காட்டுப்பகுதியில் ஆங்காங்கே தென்படும் குடில்கள், பாழடைந்த கட்டிடங்கள், ஆனந்த சயனம் கொள்ளும் ஸ்ரீரங்கனின் உடைந்த சிலை (தசாவதார பாதிப்பில்?) என செட் போட்டவரின் உழைப்பும் கூட சொல்லும்படித்தான் இருக்கிறது.. என்ன இருந்தும் என்ன பயன்..? "காதலிக்க நேரமில்லையில்" நாகேஷ் சொல்வதுபோல் "கதை" என்ற ஒன்று மட்டும்தான் இராவணனைப் பொறுத்தவரையில் இல்லை..!! ஆனால் யாரும் அதைக் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக இராமாயணக் கதாபாத்திரங்கள் கொண்டு "நிகழ்வுகள்" (கவனிக்கவும், கதையல்ல) பின்னப் பட்டுள்ளன.

சில கேள்விகளை மணிரத்னத்திடம் கேட்டே ஆக வேண்டும்: முதலில், கணவனைத் தீவிரவாதிகளிடம் தொலைத்து விட்டு தேடும் மனைவி (ரோஜா), பிள்ளைகளை தீவிரவாதத்தால் உண்டான அமளியில் தொலைத்துவிட்டு தேடும் கணவன்-மனைவி (பம்பாய்), தன்னைப் பெற்ற தாயை கலவரம் கொழுந்து விட்டெரியும் ஈழத்துக்கே போய் தேடும் சிறுமி (கன்னத்தில் முத்தமிட்டால்) போன்ற அதே "தேடுதல்" பாணியில் மனைவியைத் தீவிரவாதியிடம் ("தீவிரவாதி"-ன்னு விக்ரம் கதாபாத்திரத்தப் பத்தி போலிஸ் சொல்லுது, ஆனா, எல்லா காட்சிகளிலும் விக்ரம் ஏதோ எம்ஜியார் ரேஞ்சுக்கு நல்லவரா இருக்கார்..!) தொலைத்து விட்டு கணவனான போலிஸ் அதிகாரி தேடும் இந்த இராவணன். ஏன் மணி சார் ஏன்? இந்த தேடுதல் வளையத்திற்குள்ளிருந்து எப்போது மீண்டு வரப்போகிறீர்கள்? ("தேடாதே..தேடினால் தொலைந்து விடுவாய்" என்னும் சுஜாதா எப்போதோ எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன..!)

இராவணன் நல்லவனா கெட்டவனா என்றும் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் "நாயகன்"-பாணியில் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வைக்கும்படியான ambiguous characterization தேவைதானா..? அடர்ந்த காட்டுக்குள் தான் கடத்திவந்த பிணையக் கைதியுடன் ஓடிக்கொண்டே இருக்கும் போது, அதெப்படி சார், திடீர் திடீரென்று சுமார் இருநூறு முன்னூறு ஆட்கள் (எல்லாம் இராவணனின் ஆதரவாளர்களாம்) கூட சேர்ந்து கொள்வதும், பாடல் முடிந்ததும் எஸ்கேப் ஆவதும் எப்படி? இது ஏல்லாவற்றையும விடக் கொடுமை, கிளைமாக்ஸ். பதினாலு நாட்கள் பிணையக் கைதியாய் இருந்துவிட்டு, விடுவிக்கப் பட்ட ஒருத்தி, தன் போலிஸ் கணவன் சொன்ன அபத்தமான குற்றச்சாட்டை verify செய்ய மீண்டும் காட்டுக்கே செல்வது வேண்டுமானால் திரைக்கதைக்கு உதவி இருக்கலாம். ஆனால், இந்த logic.. logic.. என்பார்களே.. அது இடிக்கவில்லையா..? ஓடும் இரயிலில் இருந்து செயின்-ஐ பிடித்திழுத்து இறங்கிச் செல்லும் மனைவியைப் பார்த்து, ஒரு அதிர்வும் காட்டாத கணவன் reaction -ஐ வைத்தே க்ளைமாக்ஸ்-ஐ சுலபமாகக் கணிக்க முடிகிறது.

காட்டுக்குள் நெல்லை மொழி பேசுகிறார்கள், ஆனால் அதற்கு சம்பந்தமில்லாத இராஜஸ்தான் ஸ்டைலில் கல்யாண ஆடம்பரங்கள் என படத்தில் out-of-place ஆக நிறைய குளறுபடிகள்..சுஜாதா இல்லாத குறையை நம்மால் சுலபமாகக் காண/ கேட்க முடிகிறது (உபாயம் : சுகாசினி). சமீபத்தில், யாரோ எழுதினார்கள் (சாருநிவேதிதா என நினைவு), மணிரத்னம் இப்போதெல்லாம் சர்வதேச பட விழாக்களுக்காகவும், வடஇந்தியாவுக்கும் தான் படமெடுக்கிறார் என்று. உண்மைதானோ எனத் தோன்றுகிறது, கலாச்சார முரண்கள் நிறையவே இருப்பதால். மணிரத்னம் இனிமேல் தமிழர்களுக்காகப் படம் எடுப்பதுதான்
அவருக்கும் நல்லது..!

மொத்தத்தில், அழகான ஒரு painting -ஐப் எதிர்பார்த்துப் பார்க்கப் போய், ஏதோ ஒரு collage -ஐப் பார்த்த மாதிரி இருக்கிறது..!!

===

Sunday, May 9, 2010

அன்னையர் தினம் 2010


இந்த வலைப் பூவை அன்னையர் தினத்தன்றுதான் ஆரம்பித்தேன் என்பதாலோ என்னவோ, வருடம் ஒருமுறை வரும் அன்னையர் தினத்துக்கு என் பதிவு தொடர்ந்து வருகிறது. இதோ இந்த வருடத்துக்கான பதிவு.

எனக்கு புதுக்கவிதையில் இருக்கும் அதே ஆர்வம் மரபுக் கவிதையிலும் உண்டு என்பதால், அவ்வப்போது எழுதுவது உண்டு. குறிப்பாக குறளிசை வெண்பா எழுதுவது மிகவும் பிடிக்கும். ஓரிரு முறை நேரிசை வெண்பாக்கள் எழுதியிருக்கிறேன். வெண்பா எழுதுவதற்கு, தமிழ் இலக்கணத்தில் பற்பல கட்டுக்கோப்புகள் உண்டு. அதாவது, நான்கு அடிகள் மட்டும் கொண்டிருக்கவேண்டும்; ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் (மட்டும்) கண்டிப்பாக இருத்தல் அவசியம். நான்காம் அடியில் மட்டும் மூன்று சீர்கள் மட்டுமே இருத்தல் வேண்டும்; அதுவும் மூன்றாவது சீர் ஒரு குறிப்பிட்ட அமைப்பில்தான் (நாள், மலர், காசு, பிறப்பு, குற்றம் என்பது போன்ற சீரமைப்பில்) பாடல் முடிதல் வேண்டும். "ஸ்..அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே.."-ன்னு அதற்குள் நினைத்துக்கொள்ளாதீர்கள். இன்னும் சில "அவசியங்கள்" வெண்பா இலக்கணத்தில் உண்டு. அதாவது, ஒவ்வொரு சீரும் அடுத்த சீருடன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் தான் சேரும். அதாவது, நாமெல்லாம் உயர்நிலைப் பள்ளியில் படித்த "நேர் நேர் தேமா.." போன்ற விதிகள் வருவது இங்குதான். அத்தோடு எதுகை மோனை குறித்த கட்டாயங்களும் உண்டு. சரி.. மேலும் வெண்பா எழுதும் சிரமங்களை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், விஷயத்துக்கு வருகிறேன் : இந்த வருட அன்னையர் தினத்துக்கு அடியேன் எழுதியிருப்பது ஒரு வெண்பாதான். மேலே உள்ள படத்தை "க்ளிக்" செய்து படிக்கவும். எனது குடும்ப மற்றும் நட்பு வட்டாரத்தில் எனக்குத் தெரிந்த அன்னையர்களுக்கு இந்த கவிதை கொடுத்து வாழ்த்தினேன். வருடா வருடம் அன்னையர் தினத்துக்கு நான் இப்படி ஏதாவது ஒன்று செய்வதன் மூலம், இல்லாத என் அம்மாவுக்கே வாழ்த்து தெரிவிக்கும் திருப்தி கிடைக்கிறது. வாழ்த்துகள்..!!

Monday, February 22, 2010

அவதார் - பிரமிப்பும் ஆச்சரியமும்

எனது கிண்டி கல்லூரித் தோழர்களிடம் அவ்வப்போது நான் பார்க்கும் படங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதுண்டு. சிலர் முழுக் கதையையும் விமர்சனம் என்ற பெயரில் சொல்லிவிடுவது எனக்கு உடன்பாடில்லாதது. எனவே, குறைந்த பட்ச விஷயங்களை மட்டும் கொண்டு ஒரு சிறு விமர்சனம் செய்வது என் வழக்கம். இங்கே "அவதார்" ஆங்கிலப் படம் குறித்த கடிதம்..
===
Friends,

ஜேம்ஸ் கேமரூனின் "அவதார்" வெளியாகி ஏறத்தாழ இரண்டு மாதம் ஆகியும் நேரமின்மையாலும், நான் விரும்பிய IMAX தியேட்டரில் நான் முயன்றபோது டிக்கெட் கிடைக்காததாலும் படம் பார்க்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. நேற்று ஒருவழியாய் எல்லாம் கைகூடி வர "அவதார்" பார்த்து விட்டேன். அதாவது "பாண்டோரா" என்னும் அந்த அதிசய உலகத்துக்குள் (சரியாகச் சொன்னால் ஒரு துணை கிரகம்) சென்று வந்து விட்டேன். இன்னமும் அந்த பிரமிப்பு குறையவில்லை. (பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தை பிறகு சொல்கிறேன்)

"அவதார்" ஒரு படம் என்பதைவிட அது ஒரு அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும். 12 வருட உழைப்பு ஒவ்வொரு Frame-மிலும் தெரிகிறது, பெரும்பாலும் இதுபோன்ற மெகா பட்ஜெட் படங்களுக்கு மகா குழப்பமான கதையமைப்பு இருக்கவேண்டும் என்பது ஒரு ஹாலிவுட் சம்பிரதாயம். இந்த படத்தில் அப்படியில்லை, எளிய கதைதான். குழப்பங்கள் இல்லை. ஆனால் நிறைய "உள்ளுரைகள்" (!) (அதாவது sub-texts) இருக்கின்றன. இயற்கையை பாரபட்சமின்றி சூறையாடும் மனிதரின் வேட்கையையும் அதே மனிதரில் சிலரிடம் மனிதம் இன்னமும் மிச்சமிருப்பதையும் வேற்றுக் கிரக சூழலில் அட்டகாசமாகச் சொல்லியிருக்கிறார் கேமரூன் (என்னைப் பொறுத்த வரை).

பாண்டோராவின் biologically networked ecosystem-மும் தொட்டால் ஒளிரும் பூக்கள், உயிரினங்கள், புல்தரைகள் என விதவிதமாக visual விளையாட்டுகளும் இயக்குனரின் கற்பனை வளத்தைப் பறைசாற்றுகின்றன. காட்சியமைப்பின் அழகிலும் பிரம்மாண்டத்திலும் லயித்து விட்டதால் நிறைய உரையாடல்களை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. குறைந்தது இரண்டு மூன்று முறையாவது பார்க்கவேண்டும் (தொழில் தந்திரம்?). கண்டிப்பாக IMAX-3D யில் பாருங்கள். பாண்டோரா சென்று வாருங்கள்..!

எனது ஆச்சரியம் : சுபாகர் உள்பட யாரும் இந்த படத்தைப் பற்றி இதுவரை எழுதவில்லை என்பதுதான். ஒருவேளை யாரும் பார்க்கவில்லையோ?

நட்புடன்,
-பகலவன்
===

Sunday, May 10, 2009

அன்னையர் தினம் 2009

அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது..!!

சென்ற வருடம் இந்த அன்னையர் தினத்தன்றுதான் (மே 10) இந்த வலைப்பூவை ஆரம்பித்தேன். அதற்குள் ஒரு வருடம் உருண்டோடிவிட்டது..!! இவ்வருடம் அன்னையர் தினத்துக்கு என் மனைவிக்கும் மற்றும் நாங்கள் நட்பு பாராட்டும் மற்ற அன்னையருக்கும் ஒரு வாழ்த்தெழுதி அளித்தேன். அந்த வாழ்த்தின் நகல்தான் மேலே இருப்பது.! படத்தின் மேலே சொடுக்கினால் பெரிதுபடுத்திப் பார்க்கலாம். நான் ரொம்ப செண்டிமென்டலா எழுதி இருக்குறதா நீங்க நெனச்சா, இதோ உங்களுக்காக சற்று லைட்டான version:

அன்னையர் தினமோ மே பத்து..
அன்னையை மறந்தால் ஆபத்து..!! :-))

வாழ்த்துகளுடன்,
-பகலவன்

Friday, October 3, 2008

நைனா குறள்..!

நைனா வகுப்புக்கு வந்தவுடன், தனது கைக்கடிகாரத்தைக் கழற்றி மேசையில் வைத்துவிட்டு, பாடத்தை ஆரம்பிப்பார். பொதுவாக, "இன்னைக்கு எந்த அத்தியாயம்" என்று கேட்டுவிட்டு, அந்த வரலாற்று குறிப்புகளை மிகவும் எளிதாகவும் கதைபோலவும் ருசிகரமாகச் சொல்வார். வருடங்கள் மற்றும் சம்பவங்களில் கோர்வை இருக்கும், அவர் பாடம் நடத்தும்போது. சரியாக 45 நிமிடங்களுக்குள் அனேகமாக அந்த அத்தியாயம் முடிக்கப்பட்டு விடும். நேரத்தைக் கச்சிதமாய் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சிறந்த ஆசிரியர் ஆவார் நைனா.

இப்படி நைனா பற்றி நினைவுகள் அதிகம். எல்லோராலும் "RR" என்று அழைக்கப்பட்ட அந்த நல்லாசிரியரின் மாணவனாய் அவருக்காக நான் எழுதிய குறட்பா இதோ:

"ஆராரோ ஆசான்கள் கற்பித்தா லுமெங்கள்
ஆரார்போல் யாரினி சொல்"

---